தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மெக்கா மசூதி விபத்தில் 107 பேர் பலி- சவுதி அரேபிய மன்னர் நேரில் ஆறுதல்

meccaசவுதி அரேபியாவின் மெக்கா பெரிய மசூதியில் வெள்ளிக்கிழமை அன்று ராட்சத கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 107 பேர் பலியாகினர். 238 பேர் படுகாயமடைந்தனர். இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கு குறைவாகவே இருக்கும் நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

 சவுதியில் உள்ள புனித யாத்திரிகர்கள் தொடர்புகொள்ள வசதியாக அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி சேவை எண்: 8002477786 அறிவிக்கப்பட்டுள்ளது.

மெக்காவில் புனித யாத்திரிகர்கள் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கடந்த 2006-ம் ஆண்டு பெரும் விபத்து ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து மெக்காவில் ஆண்டுதோறும் அனுமதிக்கப்படும் புனித யாத்திரிகர்களின் எண்ணிக்கையை சவுதி அரசு கண்காணிக்கத் தொடங்கியது. மேலும், எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் தொடங்கியது. இருப்பினும், மெக்கா செல்லும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. யாத்திரிகர்களை சமாளிக்க கூடுதல் வசதிகளை செய்ய வசதியாக மெக்காவில் கட்டுமான பணிகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒரே நேரத்தில் 22 லட்சம் பேர் கூடும் வகையில், பெரிய மசூதியை 4 லட்சம் சதுர மீட்டர் அளவுக்கு விரிவாக்கும் பணிகள் நடைபெறுகின்றன. கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் ஒன்று திடீரென அறுந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விபத்து குறித்து மெக்கா மசூதியின் நிர்வாகத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “பெரிய மசூதியின் மையத்தில் கருப்பு நிறத்திலான காபா எனப்படும் கனசதுர வடிவிலான வழிபாட்டு கட்டமைப்பு இருக்கிறது. அதனைச் சுற்றி லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு தொழுகை நடத்துவர். அந்த கட்டமைப்பு மீது ராட்சத கிரேன் எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்துள்ளது” என்றார்.

இந்நிலையில் உயிரிழந்த மசூதியை சவுதி அரேபிய மன்னர் அப்துல் அஜிஸ் சல்மான் நேரில் ஆய்வு செய்தார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்று மன்னர் கூறினார். பின்னர் அவர், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்று அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும்படி மன்னர் அப்துல் அஜிஸ் சல்மான் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

Comments
Loading...