Designed by Iniyas LTD
இலங்கை போர்க்குற்றம் மீதான தீர்மானம்: மத்திய அரசுக்கு கருணாநிதி, ஜிகே வாசன் கண்டனம்
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை இலங்கை அரசே நடத்த வேண்டும் எனத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது, குற்றம் சாட்டப்பட்டவரிடமே விசாரணை அதிகாரத்தை ஒப்படைப்பதற்குச் சமமாகும் எனத் தெரிவித்துள்ளார்
இத்தீர்மானத்தை இந்தியாவும் ஆதரித்துள்ளது, நாடற்றவர்கள் நாதியற்றவர்களாகி விட்ட நிலையை ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தி உள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார் உலகத் தமிழ் அமைப்புகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக நிறைவேற்றப்பட்டுள்ள நீர்த்துப் போன இத்தீர்மானத்தையாவது இலங்கை அரசு நேர்மையான முறையில் நிறைவேற்றுமா என்பதும் சந்தேகத்திற்குரியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு எடுக்கவில்லை என்பதும், இது தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதும் மிகவும் வருத்தமளிப்பதாக அறிக்கையில் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்
ஐ.நா.வின் தொடர் கண்காணிப்பில் நம்பகத்தன்மையுடன் கூடிய விசாரணை நடத்தி மனித உரிமைகளை மீறிய குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.