Designed by Iniyas LTD
ஓரினச்சேர்க்கையை ஆதரிக்கும் தனிநபர் மசோதா: மக்களவையில் தோல்வி
ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றமாகக் கருதக்கூடாது என்று கூறி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தனிநபர் மசோதா அறிமுக நிலையிலேயே தோல்வி அடைந்தது.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு மாற்றாக மற்றொரு பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், மக்களவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார். ஆனால், இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் துபே எதிர்ப்புத் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “மதங்கள், வேதங்கள், புராணங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த மசோதாவை நான் எதிர்க்கவில்லை; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்தே இந்த மசோதாவை எதிர்க்கிறேன்’ என்றார்.
இதனைத் தொடர்ந்து இந்த மசோதாவை விவாதத்துக்கு ஏற்கலாமா என்பது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்த மசோதா தோல்வி அடைந்தது. ஓரினச்சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவை நீக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்றும், இந்தப் பிரிவானது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் கடந்த 2009-ஆம் ஆண்டு, தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு ரத்து செய்தது.