தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விவசாய நிலங்களை மதிப்பிட செயற்கை கோள் உதவி

தனிநபர் பயிர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த, செயற்கைக்கோள் உதவியுடன் விவசாய நிலங்களை மதிப்பீடும் திட்டத்தை மத்திய அரசு விரைவாக அமல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  Military-satellite

சென்னை ஐகோர்ட்டில், முன்னாள் எம்.எல்.ஏ., எம்.அப்பாவு ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-  ‘மத்திய அரசின் விவசாய காப்பீட்டு திட்டத்துக்கான, காப்பீட்டு கட்டணத்தில், 50 சதவீதத்தை தமிழக அரசு செலுத்துகிறது. மீதமுள்ள 50 சதவீதத்தை சம்பந்தப்பட்ட விவசாயி செலுத்துகிறார். ஆனால், இயற்கை சீற்றத்தினால் 5 கிராமங்களை கொண்ட ஒரு குறுவட்டம் அளவில் அல்லது ஒரு தாலுகா அளவில் விவசாய பயிர்கள் அழிந்ததால்தான், காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீட்டை தேசிய விவசாய காப்பீட்டு நிறுவனம் வழங்குகிறது. விவசாயி ஒருவர் மட்டும் பாதிக்கப்பட்டால், அவருக்கு இழப்பீடு வழங்குவதில்லை.

எனவே, தனிநபர் விவசாய பயிர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.’  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:-  தனி நபர் விவசாய பயிர் காப்பீடு திட்டம் குறித்து விவசாயத்துறை, கூட்டுறவுத்துறை, விவசாயிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறோம். அதே நேரம், ஒவ்வொருவருக்கு சொந்தமான விவசாய நிலங்களை தனித்தனியாக சென்று ஆய்வு, இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் இழப்பை மதிப்பீடு செய்வது என்பது மிகப்பெரிய சவாலான பணியாகும்.

கார், வீடு போன்ற சொத்துகளின் சேதங்களை மதிப்பிடுவதுபோல, விவசாய பயிர்களை மதிப்பிட முடியாது.     அப்படி மதிப்பீடு செய்யவேண்டும் என்றால், ஒரு விவசாயி, அவரது விவசாய நிலம், அந்த நிலத்தில் தற்போது பயிரிடப்பட்ட பயிர் விவரங்கள், இதற்கு முன்பு பயிரிடப்பட்ட விவரங்கள், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்பின் அளவு என்று பல விவரங்களை சேகரிக்கவேண்டும். இந்த பணிகளை மேற்கொள்ள நவீன தொழில்நுட்பம் எதுவும் தற்போது இல்லை. செயற்கைக்கோள் உதவியுடன் நவீன தொழில்நுட்பத்தை உருவாக்க திட்டம் உள்ளது. அந்த திட்டமும் ஆரம்பக்கட்ட நிலையில் உள்ளது.

இந்த அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் தனிநபர் விவசாய நிலங்களை மதிப்பீடு செய்யும் முறையை அமலுக்கு கொண்டுவர சிறிது காலம் ஆகும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   இந்த பதில் மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தனிநபர் விவசாய பயிர்க்காப்பீடு திட்டத்தை அமல்படுத்துவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று மத்திய அரசு பதிலளித்துள்ளது. இருந்தாலும், இந்த தனிநபர் பயிர் காப்பீட்டு திட்டத்தை நவீன தொழில்நுட்பத்துடன் அமல்படுத்தும் திட்டம் உள்ளதாகவும் கூறியுள்ளது.  எனவே, இந்த திட்டத்தை விரைவாக அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். இந்த மனுவை முடித்து வைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்

Comments
Loading...