Designed by Iniyas LTD
சிவி. விக்கிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முயற்சி – சுரேஸ்பிரேமச்சந்திரன்
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வருதற்கான முயற்சிகள் மறைமுகமான முறையில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் யாழில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று புதுன்கிழமை காலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று தமிழ் மக்களின் பேராதரவுடன் இருக்கின்றார். அவர் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொள்வதில் அதுவும் மக்கள் விரும்பும் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதிலேயே உறுதியாக இருக்கின்றார். அண்மைக்காலமாக மக்களுக்காக அவர் செயற்பட்டு வருகின்றமை கட்சியின் பலருக்கு பிடிப்பதில்லை. இதனால் அவர் மீது சேறு பூசுவதற்கும் முனைகின்றனர்.
இருந்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் அவரைப் பழிவாங்குவதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கமையவே மாகாண சபையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டு வரும் முயற்சிகளை ஆரம்பித்திருக்கின்றனர். இது தொடர்பில் இங்குள்ள பல்வேறு தரப்பினர்களுடனும் கதைத்திருக்கின்றமை எமக்குத் தெரிய வந்திருக்கின்றது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற சில தரப்பினர்கள் தாம் கட்சியின் உயர் மட்ட உத்தரவிற்கமைய அவர்களது ஆதரவுடனேயே இதனை மேற்கொள்வதாகவும் பகிரங்கமாகவே தெரிவித்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.