Designed by Iniyas LTD
தாயக மக்களின் காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்கும் நடவடிக்கை
யாழ்.மாவட்டத்தில் பொலிஸாரினால் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள பொது மக்களின் 18.6 ஏக்கர் காணியில் ஒரு தொகுதி காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
குறிப்பாக சாவகச்சேரி, இளவாலை மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் பொலிஸார் நிலை கொண்டுள்ள குறிப்பிட்ட சில காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்.மாவட்டத்தில் ஒரு சில பொலிஸ் நிலையங்கள் சொந்தக் காணிகளில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான பொலிஸ் நிலையங்கள் பொது மக்களுடைய வீடுகளிலும், காணிகளிலும் இயங்கி வருகின்றது.
குறிப்பாக யாழ்.மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபரத்தின்படி 56 பொது மக்களுடைய 18.6 ஏக்கர் காணிகளை பொலிஸார் தமது பொலிஸ் நிலையங்களுக்காகவும், தங்களுடைய தங்குமிடங்களுக்காகவும் கையகப்படுத்தி வைத்துள்ளனர். இவ்வாறு கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ள காணிகளை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
குறிப்பாக சாவகச்சேரி, இளவாலை மற்றும் வல்வெட்டித்துறையில் பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் நிலையக் காணிகள் முதற்கட்டமாக சுவீகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த ஒவ்வொரு பொலிஸ் நிலையமும் அமைந்துள்ள காணிகள் பல பொது மக்களின் காணிகளாக உள்ளது. இந்நிலையில் காணி உரிமையாளர்களை தேடி அவர்களிடம் சுவீகரிப்பதற்கான சம்மதக் கடிதங்களை பெறும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவற்றில் ஒரு சில காணிகளின் உரிமையாளர்கள் தமது காணிகளை பொலிஸாருக்கு வழங்கி அதற்கான நட்ட ஈடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி குறித்த காணிகள் நில அளவை செய்யப்பட்டு, அதற்கான ஆதன மதிப்பீடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதன்படி பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ள வேறு சில காணிகளையும் சுவீகரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந் நடவடிக்கைகளுக்கு பெரும்பாலான காணி உரிமையாளர்கள் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர்.