தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல் போனவர்களுக்காய் அமைச்சு! அடுத்த பேக்காட்டா?

Sri Lanka UN
ஸ்ரீலங்கா அரசாங்கம் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களை வைத்து தன்னுடைய அடுத்த கட்ட அரசியலை தொடங்கியுள்ளது. அதாவது காணாமல் போனவர்களுக்காய் அமைச்சு ஒன்றை உருவாக்கப் போவதாக அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த அமர்வில் காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக்குழுவின் தலைவர் மாக்ஸ்வெல் பரணகம தெரிவித்திருக்கிறார். காணாமல் போகச் செய்யப்பட்ட விவகாரத்தை இன்னும் பல காலங்களுக்கு இழுத்தடித்துச் செல்வதே இதன் நோக்கமா?

ஈழ இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு முந்தைய காலங்களிலும் திட்டமிட்ட ரீதியில் காணாமல் போகச் செய்தல் இடம்பெற்றுள்ளது. இது இனப்படுகொலையின் இன்னொரு வடிவமாகவே நிகழ்த்தப்பட்டது. போரில் இலட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். போரில் கொல்ல முடியாதவர்களை காணாமல் போகச் செய்யும் ஒரு யுத்த நடவடிக்கையை ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்டது. ஸ்ரீலங்காவில் மாத்திரமின்றி இன ஒடுக்குமுறைகள் நிகழ்ந்த பல நாடுகளிலும் காணாமல் போதல் என்பது ஒரு அழித்தொழிப்பு முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈழ யுத்தத்தின்போது வாக்குறுதி வழங்கப்பட்டே காணாமல் போதல்கள் இடம்பெற்றன. ஸ்ரீலங்கா அரசிடம் வந்து சரணடையுமாறும் அவ்வாறு சரணடையும் பட்சத்தில் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை வழங்கப்படும் என்றும் ஸ்ரீலங்கா அரசின் அறிவிப்பை படைகள் அறிவித்தன. இதணை நம்பியே பல்லாயிரக்கணக்காணவர்கள் யுத்தத்தின் இறுதியில் சரணடைந்தன. அவர்களையே சிங்களப் படைகள் காணாமல் போகச் செய்தன.

இதுவே மிகப் பெரும் மனித உரிமை மீறலாகும். எவராக இருந்தாலும் வாக்குறுதி அளித்து அவர்களை சரணடைய செய்து காணாமல் ஆக்குவது மிகப் பெரிய மனித உரிமை மீறல். இங்கோ ஒரு இனத்தின் கணிசமான எண்ணிக்கையானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். எனில் இது எத்தகையதொரு மனித உரிமை மீறல்? அத்துடன் சிங்கள இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களையும் காணவில்லை என்று சிங்கள அரசு கைவிரிப்பது அது எத்தகைய கொடுமையான அரசு எனப்பதற்கு உதாரணம்?

ஒரு அரசு தன்னிடம் கையளிக்கப்பட்ட மனிதர்களை, இனத்தை காணாமல் போய்விட்டனர் என்று கைவிரிப்பதன் அர்த்தம் என்ன? ஸ்ரீலங்கா அரசு தமிழ் ஈழ இனத்தை அதன் மனித உரிமைகளை எப்படி மதிக்கிறது? எப்படிக் கையாள்கிறது என்பதனையே இவைகள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இப்படி ஒரு நிலையில் எமக்கு நீதியும் வலும் கொண்ட சர்வதேச விசாரணை ஒன்றே தேவைப்படுகின்றது. ஆனால் மனித உரிமைகளை மீறிய ஸ்ரீலங்காத அரசு, தானே காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க விசாரணை செய்கிறது.

தன்னிடம் கையளிக்கப்பட்டவர்களை காணாமல் போய்விட்டனர் என்று சொல்லிய அரசு அதற்காக தானே ஒரு விசாரணையை நடத்தி பேக்காட்டு வித்தை காட்டுகிறது என்றால் அது த்தகைய கொடுமை? அதனை இந்த உலகம் அங்கீகரித்து வேடிக்கை பார்க்கிறது என்றால் அது எத்தகைய கொடுமை? அந்த விளையாட்டில்தான் காணாமல் போனோரை கண்டறியும் மாக்ஸ்வெல் பரணகம விசாரணைக் குழு ஈடுபடுகிறது.

அவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளின் சாட்சியங்களைக்கூட ஒழுங்காக பதிவு செய்யவில்லை. மக்கள் பெருமளவில் திரண்டு சாட்சியங்களை அளித்து சிங்களப் படைகளின் இனப்படுகொலையைக் குறித்து வாக்குமூலம் அளித்த பின்னரும் மாக்ஸ்வெல் பரணகம கூறுகிறார் இராணுவம் மக்களை கொல்லவில்லை என்று. அன்றைக்கு மகிந்த ராஜபக்ச சொல்லிக் கொடுத்தததைதான் இன்றைக்கும் மாக்ஸ்வெல் கூறுகிறார்.

இன்றைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மக்களை ஏமாற்றும் மகிந்த இனப்படுகொலை ஆணைக்குழு காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்காய் மரணச்சான்றிதழ் பெறுங்கள், இழப்பீடு பெறுங்கள் என்றே நிர்பந்தித்தன. இதுவே அவர்களின் நோக்கம். காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு – பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்காமல் அவர்களை ஏமாற்றும் பேக்காட்டு விளையாட்டு அரசியலை செய்வதே இதன் நோக்கம்!

இதன் அடுத்த பரிமாணமாக மைத்திரி – ரணில் அரசு காணாமல் போனவர்களுக்காய் அமைச்சை உருவாக்கப் போகிறது. இந்த உலகம் கொடுத்திருக்கும் இடத்தினால் மனித உரிமைகள் குறித்து எள்ளளவும் பொறுப்பின்றி இனப்படுகொலையின் ஏகாதிபத்தியத்தோடு தன்னை காப்பாற்றகிறது ஸ்ரீலங்கா என்ற இனப்படுகொலை போர்க்குற்ற அரசு.

தமிழவன்
செண்பகம்
04.03.2016

Comments
Loading...