தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

“என் கடன் பணி செய்வதே” – ராமதாஸ் புத்தகம் வெளியீடு

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பத்திரிகைகளுக்கு கொடுத்த அறிக்கைகளை தொகுத்து ‘என் கடன் பணி செய்வதே’ என்ற புத்தகமாக வெளியிட்டு உள்ளார். இந்த புத்தகம் ‘‘சமூக நீதியும் தமிழும் என் உயிர் மூச்சு, ‘மக்களை காக்க மதுவிலக்கு’, ‘ஒரே தீர்வு தமிழ் ஈழம்’, நதிநீர் பிரச்சினைக்கு நான் விரும்பும் தீர்வு, ‘எழுக தமிழ் நாடே’’’ என்ற தலைப்பின் கீழ் 6 தொகுதிப்புகளாக வெளியிடப்பட்டு உள்ளது.ramathas

இதே போல் டுவிட்டர் வலைதள பதிவுகள் ‘‘என் குறள்’’ என்ற தலைப்பிலும் புத்தக தொகுப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த 6 நூல்களின் வெளியிட்டு விழா தியாகராயநகர் ஜி.ஆர்.டி. ஓட்டலில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். இந்து குழும தலைவர் என்.ராம் நூல்களை வெளியிட்டார். முதல் பிரதிநிதியை மூத்த பத்திரிகையாளர் மாலன், டெக்கான் கிரானிக்கல் நிர்வாக ஆசிரியர் பகவான் சிங், அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:– நான் ஊடகங்களுக்கு வெளியிட்டு வரும் அறிக்கைகளின் தொகுப்புதான் இந்த 6 நூல்களும். நான் எழுத்தாளன் அல்ல. நான் ஒரு போராளி. சமூகத்தின் தீமைகள் எந்த ரூபத்தில் வந்தாலும், எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்க்கும் போராளி. போராட்டத்தின் மூலமாகவும், அறிக்கைகள் மூலமாகவும் சமூக கொடுமைகளையும், தீமைகளையும் எதிர்ப்பவன். எதிர்க்கட்சிகளின் கடமை யில் இருந்து வழுவாமல் அதனை கடைபிடித்து வருகிறேன். நான் தேவையில்லாமல் யாரையும் விமர்சிப்பது இல்லை.

பிரச்சினைகளையும், அதற்கான தீர்வுகளையும் சொல்வேன். ஜனநாயகத்தின் 4–வது தூணாக இருப்பது பத்திரிகைகள். தமிழ்நாட்டில் ஜனநாயகத்தின் நிலைமைகள் எப்படி இருக்கிறது என்பது பத்திரிகைகளுக்கு தெரியும். இவற்றை சரி செய்ய வேண்டியது ஊடகங்கள் தான். அவர்களால்தான் எதைப்பற்றியும், யாரை பற்றியும் எழுத முடியும். ஜனநாயகத்தின் 3 தூண்கள் சரிந்தாலும் சரியாமல் இருக்க வேண்டியது பத்திரி கைகள்தான். அப்போதுதான் ஜனநாயகம் காக்கப்படும். தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்து இருப்பது மதுவும், ஊழலும் தான்.

இவை இரண்டும் முன்னேற்றத்திற்கான எதிரிகள். இதை ஒழிக்க தேவை, தரமான கல்வி, முறையான பயிற்சி, விழிப்புணர்ச்சி போன்றவைதான். வேலை வாய்ப்பும், விவசாயமும் இறங்கு முகத்தில் உள்ளது. இவற்றையெல்லாம் சீர்ப்படுத்த வேண்டியது அவசியம். இங்கே மூத்த பத்திரிகையாளர்கள் வந்து இருக்கிறார்கள். பொதுவாக நான் என்னைபற்றி விமர்சிப்பதை வரவேற்கிறேன். அப்படி விமர்சித்தால்தான் நானும், எனது கட்சியும் செய்கின்ற தவறுகளை புரிந்து கொள்ளவும், அதனை திருத்திக் கொள்வதற்கும் வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments
Loading...