தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் கைதிகள் விவகாரத்தை நீர்த்துப்போகச் செய்கிறதா மைத்திரி அரசு?

colombo-protest-1-600x400

சிறிலங்கா அரசின் சிறைச்சாலைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கின்றனர் என்பதை தமிழ் ஊடகங்கள் பலவும் மறந்துபோய்விட்டன. கடந்த சில மாதங்களின் முன்னர் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காய் ஒட்டுமொத்த தாயக தேசமே திரண்டு ஹர்த்தால் போராட்டம் செய்தபோதும் இப்போது தமிழ் அரசியல் கைதகளின் போராட்டம் அறியப்படாத ஒரு போராட்டமாக நிகழ்கிறது.

கடந்த சில மாதங்களின் முன்னர் ஹர்த்தால் போராட்டத்தின் ஊடாக வடகிழக்கு தாயக மக்கள் அரசியல் கைதகளின் விடுதலையை வலியுறுத்தியிருந்தனர். செந்தூரன் என்ற பள்ளி மாணவனும் தனது உயிரை தியாகம் செய்து சிறிலங்கா ஜனாதிபதியிடம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியிருந்தான். கடந்த ஆண்டிலேயே அவர்களின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

எந்த ஒரு விடயத்தையும் நீண்ட நாள் இழுத்தடிப்பதன் ஊடாக அதன் தாக்கத்தை குறைப்பது உலகெங்கும் கையாளப்படும் அணுகுமுறை. கைதிகளின் விடயத்திலும் அதுதான் நிகழ்கிறது. மைத்திரி – ரணில் அரசு கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய பதிலை அளிக்காமல் இழுத்தடிப்பதன் ஊடாக அதனை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் கிளிநொச்சியிலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அரசாங்கம் இவைகளை கண்டுககொள்ளவே இல்லை. நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். நாங்கள் எங்கள் வேலையை பாக்கிறோம் என்ற தொனியில் அரசின் செயற்பாடுகள் தொடர்கின்றன. தமிழீழ மக்களை தன்னுடைய பிரசைகளாக கருதினால் இந்த அரசு கண்டுகொள்ளும்.

தமிழீழ மக்களை ஒடுக்குவதும் அழிப்பதும் அவர்களின் பிரச்சினைகளை மறைப்பதும்தானே அரசின் நோக்கமும் செயலும். இன்று சிறையில் வாடும் அப்பாவிகளுக்காக எத்தனை குழந்தைகள் காத்திருக்கின்றனர்? எத்தனை தாய், தந்தையர்கள் காத்திருக்கின்றனர்? எத்தனை உறவுகள் காத்திருக்கின்றனர். அத்தனை உறவுகளும் சிந்தும் கண்ணீரையும் அப்பாவி சிறைக்கைதிகளின் பசியையும் ஏறெடுத்துப் பார்க்காத, இரங்காத சிறிலங்கா அரசு எப்படியானது? எதற்கானது? அதன் நோக்கம் என்ன? ஏராளம் கேள்விகள்.

அண்மைய நாட்களில் 16 நாட்கள் கடந்தும் தமிழ் அரசியல் கைதிகள் உணவருந்தாத போராட்டத்தை தொடர்கின்றனர். பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலமை கவலைக்கிடமாகியுள்ளது. சிலரது சிறுநீருடன் குருதி வெளியேறிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலைகளில் கட்டாயத்தின் பேரில் உணவும் நீராகாரமும் ஊட்டப்படுகிறது.

ஆனால் நாட்டில் எந்தவொரு பிரச்சினையும் இல்லாததைப்போல சிறிலங்கா அரசியல்வாதிகள் இண நல்லிணக்கம் குறித்து பேசுகின்றனர். அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காத சிறிலங்கா அரசு எப்படி தமிழ் மக்களுக்கு உரிமையை தரப்போகிறது. எப்படி தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வைத் தரப்போகிறது? தமிழ் மக்களின் பிரச்சினையை உணர்ந்தவர்கள் நாம் என்றும் தாம் செய்த தவறால்தான் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினர் என்றும் கூறும் மைத்திரி ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க தயங்குகிறார்?

சிங்கள மக்கள் கோவிப்பார்கள்? தென்னிலங்கை குழப்பும் என்றால் எப்படி அரசியல் தீர்வொன்று ஏற்படும்? அப்பாவி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் சிங்கள மக்கள் கவலைப்படவும் கோவிக்கவும் என்ன இருக்கிறது? தன்னை கொலை செய்ய வந்த புலியை விடுவிப்பதாக காட்டிய மைத்திரி அதனிலும் குறைந்த செயல்களில் ஈடுபட்ட ஏனையவர்களை விடுவிக்க தயங்குவது ஏன்? அப்படி எனில் தன்னை கொலை செய்ய வந்த புலியை விடுவிப்பதாக காட்டியது நாடகமா? அரசியல் நோக்கம் கருதியதா?

தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசு நிகழ்த்திய இனப்படுகொலை குற்றங்களிலிருந்து தன்னை பாதுகாக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பை தன் பக்கம் அணைத்துக்கொண்டு ஒரு புலியை விடுவித்து அரசியல் நாடகம் செய்து கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்வதுடன் அதற்கு எதிரான போராட்டங்களின் கூர்மையும் மழுங்கடிக்கும் தந்திரோபாய யுத்தத்தில் சிறிலங்கா அரசு ஈடுபடுகிறது.

சிங்கள மக்களுக்கு அஞ்சுகிறது அல்லது கைதிகளை விடுவிக்க சிறிலங்கா அரசுக்கு மனமில்லை என்பது தமிழ் மக்களை தொடர்ந்தும் இரண்டாம் தரப் பிரஜைகளாகவும் பயங்கரவாதிகளாவும் அந்நியர்களாவும் நடத்துகிறது என்பதுடன் தமிழர்களுக்கு ஒரு தீர்வையும் இந்த அரசு முன்வைக்காது என்பதையும்தான் காட்டுகிறது. எனவே ஈழத் தமிழராகிய நாம், அரசியல் கைதிகளின் விடயத்தில் மாத்திரமல்ல அனைத்து விடயங்களிலும் விழிப்படைவதுதான் எம்மை பாதுகாக்கும் செயலாக இருக்கும்.

தமிழவன்
செண்பகம்
11.03.2016

Comments
Loading...