Designed by Iniyas LTD
காதலில் திளைத்தது இவ்வுடல்தானே! கவின் மலர்
எல்லா தெருக்களும்
கடலுக்கு மட்டுமே இட்டுச்செல்லும்
அவ்வூருக்கருகே
வயலோரம் கிடந்த
அந்தச் சாக்கு மூட்டையின் துர்நாற்றம்
அவன் பெயரை
காற்றில் எழுதியெழுதி அழித்தது
மூட்டையைப் பிரித்தவர்களின்
கரங்களில் ஏறின புழுக்கள்
காதலில் திளைத்தது இவ்வுடல்தானே
நான் பிறந்த ஊருக்கு
ரயில் இன்னும் வரவில்லை
இருப்புப் பாதைகளும் இல்லை
எனினும்
பல ஆண்குறிகளை
உரமாய்க் கொண்டு செழிக்கும்
நெற்களஞ்சிய நிலங்கள் உண்டு
காதலின் உச்சத்தில்
விறைத்து நீண்டதெல்லாம் இக்குறிகள்தானே
அந்த ஊருக்கு ரயில் வந்துபோகும்
அவ்வூரின் மாங்கனிகள்
மிகப் பிரபலம்
மாங்கனியை கூடுதல் பிரபலமாக்க
விண்ணிலிருந்து கீழ்நோக்கி வந்த அதிசய ரயில் மோதி
தண்டவாளம் அருகே சிதறியதொரு மூளை
காதல் கருவாகியது இச்சிறு மூளையில்தானே
மூளையைப் பிரித்தெடுக்க
சோம்பல்கொண்டோரின் கண்டுபிடிப்பு
இப்பொழுது சிரச்சேதம் செய்கிறது
அன்புக்கு அடிப்படை
முகந்தாங்கிய அந்தச் சிரம்தானே
வயல்வெளி ஓரங்களில்
தோட்டங்களின் மூலைகளில்
ரயில்பாதைகள் நெடுக
சாலையின் நடுவே
தென்படும்
ஆண்குறிகளின்
மூளைகளின்
தலைகளின்
சிரமற்ற உடல்களின் அருகே
இளவரசா
உன் முரட்டு ஜீன்ஸின் கிழிந்த பகுதியொன்று
அரூபமாய் கிடக்கிறது
நீலநிறத்தில்.
கவின் மலர்
