தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தண்டனையற்ற விசாரணை எதற்கு?

tamil_genocide_004

இலங்கையில் இடம்பெற்ற போர்க்கற்றங்கள் குறித்து எதிர்வரும் ஜூன் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இடம்பெறும் கூட்டத் தொடரில் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் உரையாற்றுகிறார். இதனால் அதற்கு முன்னர் உள்ளக விசாரணைப் பொறிமுறை ஒன்றை தயாரிக்க இலங்கை அரசு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. இதில் சந்திரிக்காவும் ஈடுபட்டுள்ளாராம்.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக், இலங்கையில் நடந்த போர்க்குற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடக்கும் விசாரணையில் “நம்பகத்தன்மை முக்கியமானது“ என்ற கருத்தை தெரிவித்திருந்தார். சர்வதேச நீதிபதிகளை ஒருபோதும் விசாரணையில் இணைத்துக்கொள்ள மாட்டோம் என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி கூறிய கருத்து ஒன்றைக் குறித்தே பர்ஹான் ஹக் அவ்வாறு கூறினார். அவரது முழுமையான கருத்ததை இந்தப் பத்தி தருகிறது.

”இலங்­கையில் யுத்த காலத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் சம்­ப­வங்கள் தொடர்பில் நம்­ப­க­ர­மான விசா­ரணை பொறி­முறை முன்னெ­டுக்­கப்­ப­ட­ வேண்­டி­யது அவ­சியம். எவ்­வாறு விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது என்­ப­தனை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை மதிப்­பீடு செய்­யலாம். ஆனால் விசா­ரணை செயற்­பா­டா­னது நம்­ப­க­ர­மாக அமை­ய­வேண்டும் என்­ப­தனை நாங்கள் உறு­தி­ப­டுத்­த­வேண்டும். அத்­துடன் நம்­ப­க­ர­மான விசா­ரணை பொறி­மு­றைக்­கான வழி­காட்­டல்­களை தெளி­வான முறையில் ஐக்­கிய நாடுகள் சபை வெளி­யிட்­டுள்­ளது. அவ்­வாறு நடைபெறுவதை உறுதிபடுத்தும் நோக்கில் கலந்துரையாடல்களை தொடர்ந்து நடத்துவோம்” -ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் பர்ஹான் ஹக்

தமிழ் ஈழத்தின் வடக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை. அந்த இனப்படுகொலையை மாபெரும் போர்க்குற்றங்களை இழைத்து ஸ்ரீலங்காப் படையினர் மேற்கொண்டனர். அந்தப் பாதிப்புக்களிலிருந்து தமிழ் மக்கள் எப்போது மீள்வார்கள் என்று தெரியவில்லை. அப்படியொரு கொடிய இன அழிப்பு யுத்தம். இந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதவரான மனிதநேயக் குரல்களும் ஸ்ரீலங்கா அரசை நோக்கியும் சர்வதேச சமூகத்தை நோக்கியும் நீதி வேண்டி குரல் எழுப்புகின்றனர்.

சர்வதேசம் இந்தப் பிரச்சினையை தனது அரசியல் நலன்கள் சார்ந்த நிலையிலிருந்து கையாண்டிருந்தது. கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்காவில் ஆட்சியில் இருந்தபோது போர்க்குற்ற சர்வதேச விசாரணையை வலியுறுத்திய சர்வதேசம் ஸ்ரீலங்காவில் தனக்குகந்த ஆட்சி ஒன்று மலர்ந்தபோது அதனை மனித உரிமை மீறலாய் மாற்றி ஸ்ரீலங்காவை இணை அனுசரனை கொள்ளச் செய்தது. இப்போது உள்ளக விசாரணை ஒன்றுக்கு ஸ்ரீலங்காவை அனுமதித்துள்ள நிலையில் அது “நம்பகத் தன்மை“ வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று ஐ.நா வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை அண்மையில் சட்டத்தரணிகளின் நிகழ்வொன்றில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கீழ் கண்ட கருத்தை தெரிவித்திருந்தார்.

“மனித உரிமை மீறல் தொடர்­பாக சர்­வ­தே­சத்தின் குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக எதிர்­கா­லத்தில் நடை­பெ­ற­வுள்ள விசா­ர­ணை­க­ளிலும், அதன்­பின்­ன­ரான நீதித்­துறை நட­வ­டிக்­கை­க­ளிலும் வெ ளிநாட்டு நீதி­ப­தி­களை நாட்­டுக்குள் கொண்டு வரு­வது தொடர்பில் எனக்கு இணக்­கப்­பாடு கிடை­யாது. எமது நாட்டின் நீதி­ப­திகள் மற்றும் நீதித்­துறை தொடர்­பாக நம்­பிக்கை உள்­ளது. நீதித்­து­றையை பக்­கச்­சார்­பில்­லாமல் சுயா­தீ­ன­மாக்க வேண்­டி­யதே எமது பொறுப்­பாகும்.”

மிகப் பெரும் இனப்படுகொலையில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா அரசு அதிலிருந்து தப்பிக் கொள்வதற்காக உள்ளக விசாரணை ஒன்றை நடத்துவது போல, அதாவது தண்டணையற்ற விசாரைணை ஒன்றை நடாத்துவதைப் போலவே, இன்றைக்கு ஸ்ரீலங்காவுடன் மிக நெருக்கமாகியிருக்கும் ஐ.நா போன்றவைகளும் விசாரணையில் சம்பிரதாயபூர்வமாக “நம்பகத்தை“ வலியுறுத்துகின்றனவா?

கொலையாளியை நீதிபதியாக்கினால் அவன் எப்படியான தீர்ப்பை அளிப்பான்? கொலையாளி தன்னைப் பாதுகாப்பானா? அல்லது நீதிக்காக தன்னை பலியிடுவானா? நிச்சயமாக அவன் தன்னைப் பாதுகாப்பான். ஸ்ரீலங்காவில் தற்போது அதுதான் நடக்கிறது. அண்மையில் ஸ்ரீலங்காவின் முன்னைய அரசால் இனப்படுகொலை குற்றச்சாட்டில் இருந்து தப்பிக் கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்டவர், இன்றைய அரசின் அமைச்சர் மகிந்த சமரசிங்க முக்கியமான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

“இறுதிப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணையில் இராணுவத்தினர் விசாரணை செய்யப்படமாட்டார்கள்”

இதுதான் அந்தக் கருத்து. இது கொலையாளியை பாதுகாக்கும் விசாரணை என்பதை இவ்வளவு வெளிப்படையாக வேறு எவராலும் சொல்ல இயலாது. ஆனாலும் இராணுவத்தையும் போரை நடத்திய மகிந்த தரப்பினரையும் உயிரை கொடுத்தேனும் பாதுகாப்போம் என்று மைத்திரிபால சிறிசேனவும் ரணிலும் அடித்துச் சத்தியம் செய்த கதைகளும் இங்கு நினைவுகூறத்தக்கன.

எனவே தமிழ் ஈழ மக்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலைப் போர்க்குற்றங்களில் சர்வதேச சமூகம் நேர்மையுடன் நடந்துகொள்ளுமா என்ற கேள்வி ஈழத் தமிழ் சமூகத்திடம் இப்போது பெரிதாக எழுகின்றது. பகுதியளவிலேனும் சர்வதேச தலையீட்டை ஸ்ரீலங்கா நிராகரித்துள்ள நிலையில் தண்டணையற்ற உள்ளக விசாரணை என பிரகடனப்படுத்தப்படும் விசாரணையில் சர்வதேசம் வலியுறுத்தும் நம்பகத் தன்மை எப்படி ஏற்படும்?

இன்னொரு பெரிய கேள்வியை இப் பத்தி எழுப்ப விளைகிறது. மிகப் பெரும் இனப்படுகொலையில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா அரசு அதிலிருந்து தப்பிக் கொள்வதற்காக உள்ளக விசாரணை ஒன்றை நடத்துவதுபோல, அதாவது தண்டணையற்ற விசாரைணை ஒன்றை நடாத்துவதைப்போலவே, இன்றைக்கு ஸ்ரீலங்காவுடன் மிக நெருக்கமாகியிருக்கும் ஐ.நா போன்றவைகளும் விசாரணையில் சம்பிரதாயபூர்வமாக “நம்பகத்தை“ வலியுறுத்துகின்றனவா?

ஒரு இனம் சந்தித்த மாபெரும் இனப்படுகொலையைக் காட்டிலும் அதன் பின்னரான, அதனை மையப்படுத்திய, இந்த அரசியல் செயல்கள் மாபெரும் அநீதியிலும் அநீதியல்லவா?

தமிழவன், செண்பகம். 25.03.2016

Comments
Loading...