Designed by Iniyas LTD
தொடர் கதையாகும் சிறி.கடற்படையின் அட்டூழியம்
ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து செல்லப்படுவதும் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. 
அண்மையில் சிறை பிடிக்கப்பட்ட 99 மீனவர்களை நேற்று முன்தினம் விடுதலை செய்யுமாறு இலங்கை அரசு பரிந்துரைத்தது. அவர்கள் நாடு திரும்பாத நிலையில் மீண்டும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.
அதன் விபரம் வருமாறு:– மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி தமிழக கடற்பகுதியில் வருகிற 15–ந் தேதி முதல் 45 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக தற்போது இரவும், பகலுமாக மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். அதன்படி நேற்று ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிடம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் 100–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இதில் ஒரு தரப்பினர் மீன்வளம் நிறைந்து காணப்படும் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது சிறிய ரோந்து கப்பல்களில் அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்களை பார்த்து இந்த பகுதி எங்கள் நாட்டுக்குரியது. இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்று எச்சரித்தனர். மேலும் அவர்கள் படகுகளில் ஏறி மீனவர்களை இரும்பு கட்டை, கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த ஜெகன் என்ற மீனவரின் மண்டை உடைந்தது. தொடர்ந்து இலங்கை கடற்பையினர் வலைகளையும் அறுத்து எறிந்ததோடு, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.
உயிர்பிழைத்தால் போதும் என்று கருதிய மீனவர்கள் அவசர, அவசரமாக பாதியிலேயே ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். தாக்குதலில் காயமடைந்த ஜெகன் உள்ளிட்ட மீனவர்கள் ராமேசுவரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.