Designed by Iniyas LTD
ஸ்டாலினை போல் தமிழ் மக்களுக்காக உழைக்க வேண்டும் – கருணாநிதி
நீங்கள் ஒவ்வொருவரும் ஸ்டாலினைப் போல உழைப்பீர் என திமுகதலைவர் கருணாநிதி தொண்டர்களக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிடுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
திமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே ஆதிக்க சக்திகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், திமுக இதோ படுத்து விட்டது, அதோ அழிந்து விட்டது என்று வாய்ச்சவடால் காட்டி வருகின்றன. பேரறிஞர் அண்ணா இந்த இயக்கத்தை வழி நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே ஒரு சிலர், மன வேறுபாடு காரண மாகக் கழகத்தை விட்டு வெளியேறிய போது, “முடிந்தது கழகம்” என முனகினர் சிலர். அண்ணா மறைவுக்குப் பின்னர், கழகத்தைத் தலைமையேற்று நடத்திச் செல்வதில், ஏற்பட்ட கருத்து மோதல் கண்டு, கழகம் “கரைந்து போய் விடுமென்று” கணித்தனர் சிலர். எம்.ஜி.ஆர். வெளியேறிய போது, “கழகம் கலகலத்துப் போகும்” என்று கனவு கண்டனர் சிலர். ஆனால், கழக ஆட்சி, முதல் முறையாகக் கலைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான கழக முன்னணியினர் “மிசா” சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்பட்ட போது , “அடக்கு முறையில் கழகம் அடங்கிப் போய் விடும்” என்று எதிர்பார்த்தனர் சிலர். கழகம் தொடர்ந்து சட்டப் பேரவைக்கான மூன்று தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்ததும், “இனி தி.மு.க. தோல்வியில் துவண்டு படுத்து விடும்” என்றனர் சிலர்.
மீண்டும் கழகம் கம்பீரமாக எழுந்து நின்று, வென்று, ஆட்சி நடத்தி வந்த போது இரண்டாவது முறையாகக் கழக ஆட்சி கலைக்கப்பட்ட போதும், ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட போதும், பிறகு நடந்த தேர்தலில் கழகம் பெருந்தோல்வி அடைந்த போதும், “கழகம் இனி அவ்வளவுதான்” என்று ஆசையோடு அறிவித்தனர் சிலர். இப்படி கழகம் கலகலத்துப் போய் விட்டதென்று கடந்த ஐம்பதாண்டுகளாகவே வெளியிடப் பட்ட ஆரூடங்களையெல்லாம் அப்புறப்படுத்தி விட்டுத் தான், இன்றைக்குக் கழகம் அகிலமே கண்டு அதிசயிக்கும் அளவுக்கு இமயமென உயர்ந்து நிற்கிறது. இந்த நிலையில், தம்பி மு.க.ஸ்டாலின், ஓய்வின்றி ஓடியாடி உழைத்துக் கொண்டிருப்பது போல, நீங்கள் ஒவ்வொருவரும் ஸ்டாலினைப் போல உழைக்க வேண்டும். ஆம், தமிழ் மக்களுக்காக உழைக்க வேண்டும். அப்போது தான் வெற்றி நமதாகும் என தெரிவித்துள்ளார்.