தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முல்லை மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண்போம்! சம்பந்தன்


samanthaan_CI

முல்லைத்தீவு மக்களின் பிரச்சினைகளை ஆராயும் முகமாக எதிர்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் முல்லைத்தீவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது முல்லைத்தீவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உடனடியாக தீர்த்து வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவின் அழைப்பில் முல்லைத்தீவு மாங்குளம் சென்ற இரா. சம்பந்தன், மாவட்டத்தில் உள்ள பூர்வீக நிலங்களை இராணுவத்தினர் தம் வசம் வைத்திருப்பது, பொதுமக்களின் பிரச்சினைகளில் இராணுவத்தின் தலையீடு முதலிய விடயங்கள் குறித்து ஆராய்ந்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் எதிர்கொள்ளும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் இரா.சம்பந்தனுக்கு மக்கள் எடுத்துரைத்தனர். அங்கு கருத்துத் தெரிவித்த இரா. சம்பந்தன் கேப்பாபுலவில் உள்ள இராணுவமுகாம் அகற்றப்பட்டடு அந்த இடத்தை சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்படுவார் என்று தெரிவித்தார்.

அத்துடன், கொக்கிளாய் மற்றும் நாயாறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் மக்களின் பிரச்சினைகளில் இராணுவத்தினர் தலையிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் பேசுவதாகவும் குறிப்பிட்டார். மக்களை அமைதியாக இருக்குமாறு தெரிவித்த இரா.சம்பந்தன் தன்னுடைய காலம் முடிவதற்குள் பிரச்சினைகளை தீர்ப்பதாகவும் உறுதி கூறினார்.

Comments
Loading...