Designed by Iniyas LTD
வர்த்தக முதலீடுகளை ஊக்குவிக்க வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் சுஷ்மா
ஈரான் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவேத் ஜாரிப்பை சந்தித்து பேசினார். ஈரான் மீதான பொருளாதார தடை நீக்கப்பட்ட நிலையில், முதலீடுகளை ஈர்க்க இந்தியாவுக்கு ஈரான் அழைப்பு விடுத்தது.
இதை ஏற்று 2 நாள் பயணமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று முன்தினம் ஈரான் சென்றடைந்தார். பயணத்தின் கடைசி நாளான நேற்று சுஷ்மா, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமது ஜாவேத் ஜாரிப்பை சந்தித்து பேசினார். இதில், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்க, இருநாடுகளுக்கு இடையே நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தங்கள், இரட்டை வரி விதிப்பு தடுப்பு ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது. தற்போது, கச்சா எண்ணெய், எரிவாயு, உள்ளிட்ட துறைகளில் ரூ.1.32 லட்சம் கோடி அளவிற்கு இந்தியா ஈரானில் முதலீடு செய்துள்ளது.
இந்த முதலீட்டை மேலும் அதிகரிப்பது எனவும் இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டது. ஈரானின் முக்கிய துறைமுகமான சாபஹர் துறைமுக மேம்பாட்டு திட்டத்தில் ஏற்கனவே இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடலோர பாதுகாப்பு மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான இரு நாடுகளும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வதெனவும் இந்த சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது. ஈரானில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம், நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஈரான் பயணத்தை முடித்துக் கொண்ட சுஷ்மா சுவராஜ், அடுத்ததாக ரஷ்யா புறப்பட்டு சென்றார்.