Designed by Iniyas LTD
பாக்கிஸ்தானில் 8 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் போலீஸார் நிகழ்த்திய தேடுதல் வேட்டையில் 8 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து பயங்கரவாத தடுப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 
பஞ்சாப் மாகாணம் ஷிக்குபுரா மாவட்டத்தில் உள்ள ஹோக்கி கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையை மேற்கொண்ட போலீஸார் பயங்கரவாதிகளின் மறைவிடத்தை சுற்றிவளைத்தனர். அப்போது பயங்கரவாதிகள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதையடுத்து, போலீஸார் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 8 பயங்கரவாதிகள் பலியாகினர். பலியான பயங்கரவாதிகள் அனைவரும் தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சேர்ந்தவர்கள். பயங்கரவாதிகளின் மறைவிடத்திலிருந்து ஏகே-47 ரக துப்பாக்கிகள், வெடிமருந்துகள், கைத்துப்பாக்கிகள், ஆறு மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன என்று போலீஸார் தெரிவித்தனர்.