Designed by Iniyas LTD
தமிழகத் தேர்தல் முடிவும் ஈழத்தமிழர் விடிவும்! வழக்கறிஞர் கலைமணி
தமிழகத் தேர்தல் முடிவும் ஈழத்தமிழர் விடிவும்
என்னருமை ஈழச் சகோதரர்களே!
ஈழப்பிரச்சனையை கையிலெடுத்து தமிழ்ப்போராளிகளை காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று போராட்டங்களையும், ஆர்பாட்டங்களையும் தமிழகத்தில் நடத்திக்கொண்டு ஈழத் தமிழர்களின் நன்கொடைவருவாய்க்காகவே வாழ்ந்து கொண்டுள்ள இயக்கங்களையும் அவற்றின் தலைவர்களையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். உங்கள் பிரச்சனையைப் பற்றி உரக்க பேசுவதாலேயே உங்களுக்கு விடிவு வந்துவிடும் என்று நம்பினால் கிடைப்பது, கிடைக்கப்போவது என்ன என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும்.
சற்றேறக்குறைய 70ஆண்டுகளாக ஈழத்தில் நடந்தேறி வரும் தமிழின அழிப்பு வேலைகளை எத்தைனையோ தலைவர்கள் அவரவர் கொள்கைகளைக் கொண்டு வெவ்வேறு வடிவில் எதிர்த்து வந்துள்ளனர். குறிப்பாக ஈழத் தந்தை செல்வா அவர்களுடன் சேர்ந்து போராடியத் தலைவர்கள் இறுதிவரை போராடி எதிர்மறை விளைவுகளை உணர்ந்து சோர்ந்து போனபோது ஆயுதம் ஏந்த எத்தனையோ குழுக்கள் முன்வந்தனர் என்பது வரலாறு. அவ்வரலாற்றினை இப்போது நாம் நினைவுப்படுத்தி விவாதிக்க நேரமில்லை, தேவையுமில்லை.

நாம் எப்படிப்போராடவேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறான் என்று களம் குதித்த போராளிகளில் ஒழுக்க கட்டுப்பாட்டுடனும், விவேகத்துடனும் இறுதி வரை களம் நின்றவர்கள் விடுதலைப்புலிகள் தாம். ஏனையோர் புலிகளின் எதிர்ப்பாளர்களைச் சார்ந்து எதிரணியில் ஒதுங்கினர். விடுதலையில் கருத்தினை செலுத்தாமல் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், விடுதலை நோக்கத்திற்கு எதிராகவும் அவர்கள் நின்ற காரணத்தால் விடிவு என்பது கண்ணுக்குத் தெரியாமலேயே போய்விட்டது.
ஈழப்போரும் வரலாறும்
வரலாற்றினை முழுதுமாக அறியாதவர்கள் இப்போது கூராய்வு செய்வதைப் பார்க்கும்போது இவர்கள் உண்மையிலேயே ஈழமண்ணுக்குரியவர்களா என்று ஐயம் ஏற்படுகிறது. ஈழத்தில் புலிகளை அழித்தாகி விட்டது. இனி இலங்கையில் அமைதிதான் என சிங்கள தலைகள் பெருமிதமடையலாம். ஆனால் ஈழப்போரை தனது உயிரைக் கொடுத்து நடத்திய புலிகளும் அதன் தலைவர் பிரபாகரன் அவர்களும் போரை விரும்பியதில்லை. அது தங்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று என்றுதான் இறுதிவரை அவர்கள் சொல்லிவந்தனர். சமஷ்ட்டி அமைப்பினை பலர் வலியுறுத்தும்போது அப்படியான ஒரு அமைப்பு தமிழ் மக்களுக்கு சுயமரியாதையையும், கௌரவத்தையும் அளிக்கும் வண்ணம் சிங்களர்களுக்கு நிகரான உரிமைகளை அளிக்கக்கூடியதானால் அதனை நாங்கள் பரிசீலிப்போம் என்று பலமுறை கூறியும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு செவியில் ஏறாததின் காரணமாகவே அதனை ஏற்க மறுத்து களமாடியதை ஏன் என சிந்தித்தோமா?
போர் முடிந்து உண்மையிலேயே சமாதான வாழ்வை விரும்புவர்களாக இருப்பவர்களாயின் போர் ஏன் நடந்தது என்ற காரணத்துக்குரிய நடவடிக்கைகளில் இறங்கவே இல்லையே! மாறாக இப்போது புலிகள் இல்லை என்ற தைரியத்தில் இன்னும் அதிக வீரியத்துடன் தமிழின அழிப்பை செய்யும் சிங்களத் தலைவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விட வேண்டிய இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் ஈடுபாட்டினை அவர்களுக்கு விளக்கிக்கோர இங்கே தமிழகத்தில் தமிழக அரசினைத் தவிர வேறு யாருக்கும் தகுதியில்லை.
70 ஆண்டுகளாய் குரல் கொடுத்து வந்த திராவிடக் கழகங்களின் தலைகள் இப்போது திசை மாறிய பறவைகளாகி விட்டனர். குறிப்பாக முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி அவர்கள் அன்று இந்திய மத்திய அரசின் அதிகாரத்தின் பங்குதாரராக உரியகாலத்தில் செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் ஒருவகையில் இறுதிப்போரில் தமிழின அழிப்புக்கு காரணமானார்.
ஒன்று தமிழக அரசின் முதல்வர் என்ற முறையிலோ அல்லது மத்திய அரசின் பங்குதாரர் என்ற முறையிலோதான் ஈழப்பிரச்சினையில் ஆக்கப்பூர்வமாக தலையிட முடியும். அப்படியான ஒரு வாய்ப்பு கிடைத்த நேரம் தயங்கினார். தன்னைத் தவிர தமிழினத்துக்கு வேறு ஒரு தலைவன் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறைக் கொண்டவருக்கு உலகத்தமிழினத் தேசியதலைவராக பிரபாகரன் உருவாகி வந்த நிலைதான் அதற்கு பிரதான காரணம். இந்த பகடி வேலைப் பற்றி பின்னொரு காலத்தில் விரிவாக பார்க்கலாம்.
வரலாறு மிகப் பெரியது
இந்திய அரசு ஈழ விடுதலைக்கு எதிர் நடவடிக்கை எடுக்க காரணம் ஈழம் தமிழர் தேசம் என்பதே! தமிழர்க்கு எதிரான அன்றைய ஆரிய இந்திய நாடுகளின் நிலை ஐரோப்பா தொடங்கி கிழக்கு பசிபிக் வரை ஒன்றுதான். அவர்கள் புலிக்கொடியேந்திய சோழர்களால் பட்ட வலிகளை இன்றளவும் மறக்கத் தயாரில்லை. அவர்கள் சிங்கத்தை முன்னிறுத்தியவர்கள். பிரபாகரன், ரமேசு, கிருஷ்ணகுமார் போன்ற பெயர்களை தமிழர்கள் இட்டுக்கொண்ட நேரத்தில் ஈறாயிரம் ஆண்டுகளுக்கு முன் சிங்களத்தில் ஆட்சி செய்த மகிந்தாக்களையும், சிரிபாலாக்களையும், விக்ரமசிங்காக்களையும் நினைவுறுத்தி இட்டுக்கொள்ளும் பெயர்கள் மூலம் இவர்கள் யார் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டாமா? இங்கே இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் புலிக்கொடியேந்தி தமிழ் மன்னர்கள் புகழ்பெற்றிருந்த வரலாறு நமக்கு வேண்டுமானால் மறந்திருக்கலாம்.
ஆனால் மறக்க வேண்டியவர்கள் இன்றும் மறக்கவில்லை. இந்த வரலாறு மிகப் பெரியது.அதைவிரிவாக வரும் நாட்களில் தொடராக பார்ப்போம். இந்த நினைவு எச்சங்களால்தான் இன்றும் இந்திய கேரளத்தவரும், வங்காளியரும் தமிழர்களுக்கு பாதகமாக நடந்து கொள்கின்றனர். இந்திய மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை வரையறை செய்பவர்கள் இவர்களே! இதை விடுத்து,இராஜீவ் காந்தி சாவுக்குபபின்தான் ஈழத் தமிழர்களின் நிலை மோசமாகியது என்பதில் ஓரளவு உண்மையிருந்தாலும் அதுவே முழுக்காரணமல்ல.
ஆகவே ஈழப்பிரச்சனை எதுவானாலும் அதனை மேற்கொள்ளும் நபர் அரசியல் வலிமையுள்ளஆட்சியில் உள்ளவராக, இந்திய மத்திய அரசினை கண்டிக்கும் துணிவுள்ளவராக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் “வாலு(ல்) போயி கத்தி வந்தது டும் டும்” …என கிராமப்புறங்களில் சிறுவர்களுக்கு கூறும் பாட்டாக விளைந்துவிடும். வாலு(ல்) போன பின் கத்தி வந்து என்ன செய்வது? அதுபோல் அப்படியான ஒரு நிலையில் இல்லாத நபர்கள் பேசும் வீர வசனங்களை நம்பி எழும் ஒலிகள் நம் நோக்கத்தை சீரழிக்கும்; எந்த விடிவும் ஏற்படாது.
ஒரு நாட்டின் அடிமை இன்னொரு அடிமைக்கு
தமிழ் சினிமா ஒன்றில் நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசும் “எல்லோரும் பாருங்க, நான் ஜெயிலுக்குப் போறேன்; ஜெயிலுக்குப் போறேன்; நானும் ரௌடிதான்” என்ற வசனம் இது போன்ற தலைவர்களை பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது. கைது, சிறை என ஏதாவது ஒரு வழியில் நாங்களும் ஈழத்திற்காக போராடுகிறோம் என பதிவு செய்ய விழைகிறார்கள்.
சொந்த நாட்டு விடியலை வேற்று நாட்டு பிரஜையால்எக்காலத்திலும் தீர்க்க முடியாது. இந்திய நாட்டின் இறையாண்மைக்கு அடிமைகளாய் இருக்கும் நாங்கள் படையெடுத்து வந்து உங்களுக்குத் துணை புரியமுடியாது. அப்படி யாராவது சூளுரைத்தால் அவர்கள் நடைமுறை சாத்தியமற்ற வசனத்தை பேசுவதாய் மட்டுமே ஏற்றுக் கொள்ளமுடியும். ஒரு நாட்டின் அடிமை இன்னொரு அடிமைக்குஆதரவுக்காக மக்களைத் திரட்டி குரல்கொடுக்கலாமேஒழியவேறுஎந்தவகையிலும்தலையிடமுடியாது.அதை எண்ணிப்பார்க்காதுநமது விடிவுக்கு இவர்கள் வருவார்கள் என நம்பி லட்சங்களை கொட்டிக்கொடுப்பது அறிவீனமாகும். உங்கள் நாட்டு பிரச்னையை நீங்கள்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கான மானசீக ஆதரவினை எங்களிடம் எதிர்பார்க்கலாம்; தவறில்லை. அதனை தருவதற்கு எங்களுக்கு தட்சணை எதுவும் தரவேண்டாம்.
குருதி சிந்தி சம்பாதிக்கும் பொருளை செலவழிக்காதீர்கள்
இந்திய அரசினாலும் தமிழக அரசினாலும் பல வழக்குகளில் சிக்கியுள்ள ஈழ ஏதிலிகளுக்கும், பிற ஈழத் தமிழர்களுக்கும் ஏற்படும், ஏற்பட்டுள்ள இன்னல்களிலிருந்து விடுவிக்கும் பணியில் இத்தமிழ்த் தலைவர்கள் ஈடுபடவில்லையேஏன்? ஏதும் வருமானத்துக்கு வாய்ப்பில்லைஎன்பதாலா? தமிழக சிறைகளிலும் அவற்றைவிட கொடுமையான சிறப்பு முகாம்களிலும் உதவி இன்றி பல காலமாக வாடும் ஈழத் தமிழர்களை விடுவிக்கும் எண்ணம் இன்றைய தமிழ்த் தலைவர்களுக்குஇல்லையே!
எப்போதாவது அச்சிறைகளின் வாயிலில் நின்று கொடி பிடித்து கோஷம் போடுவது, ஆர்ப்பாட்டம் செய்வது பின்னர் சில நிமிடங்களில் கலைந்து செல்வது என்பதைத்தானே வாடிக்கையாககொண்டுள்ளனர்? ஈழ விடுதலையை ஒரு அஜந்தாவாக எடுத்துக்கொண்டு செயல்படும் வாய்வீச்சுத் தலைவர்களால் ஈழ மக்களுக்கு கேட்டினைத் தவிர வேறு நன்மை எதையும் செய்ய முடியாது. இவர்களைப் பார்க்கும்போது தமிழில் வெளிவந்த “குருதிப்புனல்” என்று நடிகர் கமலஹாசன் நடித்த சினிமாதான் நினைவுக்கு வருகிறது. அதில் ஒரு உயர் ரகசிய போலிஸ் அதிகாரி இறுதிக்கட்டத்தில் தன்னை சுட்டு கொன்று விட்டு சுடுபவரை தான்தான் சுட்டதாகவும் அதனால் தன்னை கமாண்டராக ஏற்றுக்கொள்ளும்படியும் கேட்டு அவ்வாறே கமாண்டர் ஆவது கதை. அதுபோல இப்போது தன்னை தலைமையேற்கும்படி தலைவர் வேண்டினார் என்று ஆளாளுக்கு கதை விட்டுக்கொண்டு இப்போது இங்கே வலம் வருவதைக் கண்டால் சிரிப்பு வருவதை விட கோபம்தான் வருகிறது. அவர்களிடம் எச்சரிக்கைத் தேவை.
தப்பித்தோம் பிழைத்தோம் என இந்தியாவுக்கு வரும் ஈழத் தமிழர்களை அவர்கள் முன்னொரு காலத்தில் புலி அமைப்பில் இருந்துள்ளார்கள்; அவர்களால் இந்தியாவுக்கும் நட்பு நாடான இலங்கைக்கும் ஆபத்து எனக்கூறி அவர்களை எல்லாம் சிறப்பு முகாம்களில் பல மாதங்கள் விசாரணையே இன்றி அடைத்து வைக்கப்படும் போது அவர்களை வெளிக்கொணர முயலாமல், ஈழ விடுதலைக்காக போராடுகிறோம் என்று வெளிப்படையாக இந்திய சட்ட திட்டங்களுக்கு எதிரான காரியங்களில், பேச்சுகளில் ஈடுபடுகிறோம் என்று தெரிந்தே செயல்படும் அவர்களை தடுக்காமல் கொம்பு சீவி விடுவது யார்? அவர்களை நம்ப முடியுமா என்று கூட ஆராயாமல் பொருளுதவி அளித்து தங்களுக்கு எப்படியாவது விடிவு ஏற்படாதா என்று ஏங்கும் தமிழர்களே! உங்கள் வியர்வையும், குருதி சிந்தி சம்பாதிக்கும் பொருளையும் செலவழிக்காதீர்கள்.
தெளிந்த உரைகளில் அறிந்த தலைவர்
தலைவர் தன்னிடம் அது அப்படிச் சொன்னார் இப்படிச்சொன்னார் என்று உண்மைக்கு மாறாக பேசித்திரியும் குழுக்களை புறக்கடையில் தூக்கி எறியுங்கள். 80களின் ஆரம்பம்முதல் திரு.நெடுமாறன் மற்றும் திரு.வைகோ போன்றோர் கொடுமையான நடைமுறைகளை எதிர்த்து குரல் கொடுத்தபோதுகூட தலைவர் இந்திய அரசியலில் தலையிட்டதில்லை. அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தார். தமிழகமே கொதித்து எழுந்த நேரத்திலும் தங்கள் விடுதலைக்கு அவை எந்தளவுக்கு உதவும் என்பதையும் அறிந்து வைத்திருந்தார். தமிழக மக்களின் எழுச்சி தங்களின் போராட்டத்தை உலகுக்கு வெளிக்காட்டும் ஒரு வழி மட்டுமே என்பதில் அவரிடம் தெளிவு இருந்தது.
உலக அரசியலின் கட்டமைப்பில் தங்கள் மண்னை தாங்கள் மட்டுமே போராடி விடுவிக்கமுடியும்;வேண்டும் என்பதிலும், அவ்வாறான விடிவு குறுகிய காலத்தில் இயலாத ஒன்று என்பதையும் தெளிவாக தனது மாவீரர் உரைகளில், நேர்முகப் பேட்டிகளில் கூறியிருந்தார். அவற்றைமீண்டும் படியுங்கள். உங்களின் விடிவு எப்படி, எப்போது என்பதை நிரணயிக்கும் சக்தி அயலகங்களில் வாழும் உங்களிடம்மட்டுமே உள்ளது.அது உங்களால் மட்டுமே முடியும் என்பதை நம்புங்கள்.
இன்றையஉலகமயக்காலச்சூழல்களை கருத்திலேற்றி அதற்கேற்ப தெளிவான முடிவெடுத்து செயல்படுங்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களும், பிற நாடுகளில் வாழும் ஈழத்தமிழர் அல்லாத தமிழ்மக்களும் உங்களுக்காக துணை நிற்பார்கள். ஆனால் உங்களுக்கு தலைமையேற்று ஆணைகள் இட முடியாது. அரசியல் பூர்வமான போராட்டங்களுக்கு தமிழக மக்கள் ஒருங்கிணைந்து தங்களின் அரசுகள் மூலமே இனி உங்களின் விடிவுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். என்பதை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள்
கட்டுப்பாடான இயக்கப்பேரை கெடுக்காதீர்
இந்த பொறுப்பில் ஒரு தனி நபரோ, இயக்கமோ, குழுவோ தனித்து உங்களுக்கு ஆதரவான நிலையினை எடுக்கமுடியாது. ஒட்டு மொத்த தமிழர்களும் சேர்ந்து நின்றால்தான் அது சாத்தியம். ஆனால் இங்கோ அது பொருட்டு உங்களை குத்தகை எடுத்திருப்பதாக கருதி ஒரு சிலர் செயல்படுவது உங்களின் விடிவை கடுமையாக்கி சில பலன்களைக் கூட பெற இயலாது போகும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
அப்படியான இயக்கங்களை, குழுக்களை, நபர்களை முழுதும் நம்பாதீர்கள். காலம் கழிந்து ஏற்படும் கடும் விளைவுகளை காலத்தே தவிருங்கள். எனக்குத் தெரிந்த புலிகளின் இயக்கம் ஒரு கட்டுப்பாடான இயக்கம். மாவீரர் பிரபாகரன் அவர்களே அவசியமும், அவசரமும் ஏற்பட்டிருந்தால் கூட யாருக்கும் தொலைபேசி செய்து பேச இயலாதகட்டுப்பாடான இயக்கம். செய்தித்தொடர்பாளர் என்ற ஒருவரைத் தவிர அது எந்தக் கட்டமாக இருந்தாலும் இயக்கத்தின் முன்னணித்தலைவர்கள் யாரும் யாரிடமும் பேசமுடியாது. அப்படிப்பட்ட கட்டுப்பாடான, ஒழுக்கமான இயக்கத்தின் பெயரைச் சொல்லி அவர்களை கேவலப்படுத்தும் இழிசெயலை யாரும் அனுமதிக்கவேண்டாம்.
இதுவரை பொறுத்திருந்து பார்த்து ஒரு காலத்தில் ஈழப் பிரச்னையை தமிழகம் முழுதும் அறியதந்த மூத்த தமிழ்த் தலைவர்கள் இது பொருட்டு ஏதும் மறுப்பு அறிக்கைகளை விடவில்லை என்ற காரணத்தால் இன்று வெளிப்படுத்துகிறேன். தமிழ் நாட்டில் புலிகளின் மூத்த தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் என்று உண்மைக்கு மாறாக பலவாறும் உலாவருகின்றன. தமிழக அரசியல் அசிங்கமானது, எதையும் சொல்லி இங்கே பிழைப்பு நடத்தலாம்என்று சொல்லக்கேட்டு இருக்கிறேன். அது போன்ற இழி பிழைப்பினை உயர்வான விடுதலைப்போராட்டத்தில் நுழைக்க முற்படுவர்களை ஒதுக்கித்தள்ளுங்கள். உருப்படியான செயலை செய்யாமல் அமைதியாக இருப்பது கூட அவர்கள் செய்யும் உத்தமமான வேலைதான்.
உண்மைக்கு மாறான செய்திகளையும், அழிவுக்கு வழி செய்யும் செயல்களையும் கண்டு கோபம்தான் வருகிறது. எதையோ தெரிவிக்கப்போய் நான் வழிமாறிப்போனாலும் வேண்டிய சில எச்சரிக்கையினை செய்வதும் நலம்தானே. இந்த எச்சரிக்கை பொருட்டு நான் விரிவான செய்திகளை பின்னர் தர விரும்புகிறேன். அவை வரும்.
இன்றைய (20-05-2016) செய்தித்தாள்கள் மூலம் பெல்ஜியம்-புருசல்சில் உள்ள ஐ.சி.ஜி. குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிங்கள தேசியவாதிகளின் சந்தேகம் சேர இலங்கை ராணுவம் அந்நாட்டு அரசு விரும்புவதுபோல தமிழர்களின் குறைகளை நீக்க எந்தவித நடவடிக்கையினையும் எடுக்கப்போவதில்லை என்பதை தெளிவாக கூறியுள்ளது. இதைத்தான் காலங்காலமாக பிரபாகரன் அவர்களும் “சிங்கள ஆட்சியாளர்களின், மக்களின் எண்ணங்களில் மாற்றம் வந்தாலொழிய சமாதானம் என்பது கேள்விக்குறியே”! என்றார். அதுதான் சரியான கருத்து என்பது இன்றுநிரூபிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து குரல் கொடுங்கள்!!
இந்த நேரத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் இல்லை என்றாலும் வலிமையான அரசினை மீண்டும் செல்வி.ஜெயலலிதா அவர்கள் பெற்றுள்ளதும், தமிழர்களுக்கு ஈழத்தை பெற்றுத்தர உறுதிமொழி அளித்துள்ள திரு.கருணாநிதி அவர்கள் வலிமையான எதிர்க்கட்சியில் அமரப்போவதும் ஒரு நல்ல மாற்றத்தை பெற்றுத்தர முடியும். செல்வி.ஜெயலலிதா விவரம் புரிந்து துணிந்துவிட்டால்போராடக்கூடியவர். உலகத் தமிழினத்தின் மீது அவருக்கு ஒரு பார்வை உண்டு என்பதை நான் அறிவேன்.
அதனை இப்போதுபயன்படுத்திக்கொள்ளுங்கள். திரு.பிரபாகரன் இருந்தபோது தமிழக அரசின் உதவியை முக்கியமாக கருதியதைப்போலவே இப்போதும் எண்ணிப்பாருங்கள். அவரின் துணை உங்களுக்கு நாங்கள் வேண்டி கிடைப்பதைவிட நீங்கள் கேட்டு கிடைக்கக்கூடும். எனவே நேர்மையுடன் அவரிடம் நீதி கேளுங்கள். பயன்படுவார். அவரின் இயல்புகளை விமர்சனம் செய்யாமல் உங்களுக்கான உதவியினை மட்டும்பெற முயற்சியுங்கள்.
தமிழக சூழல் தற்போது ஒரு அனுகூலமான நிலையில் இருப்பதாகவே கருதுகிறேன். மத்திய அரசின் கவனத்தை அவரால்மட்டுமேஈர்க்க முடியும். இந்தியப் பிரதமர் மோடியும் காது கொடுத்து கேட்பார். செல்வி.ஜெயலலிதாவால்முடியாதது, வேறெந்த தமிழகத் தலைவர்களாலும் முடியாது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
உலகத் தமிழர்கள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுங்கள். உங்களின் கௌரமான, சுயமரியாதையுள்ள, சரிசமமான உரிமைகளை பெற்றுத் தர வேண்டுங்கள். பலன் நிச்சயம் கிடைக்கும். இதற்காகவே அவசரமாக இப்போது இதனை எழுதினேன்.
நன்றி
வழக்கறிஞர் கலைமணி











