தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் மொழிக்காக உயிர்த்தியாகம் செய்த நான்கு கர்நாடக தமிழர்களின் வீரவணக்க நாள் இன்று!

கர்நாடக மாநிலத்தின் கோலார் தங்கவயலில் 1982-ஆம் ஆண்டு ஜூலை 5,6,7 ஆகிய தேதிகளில் நிகழ்ந்த தமிழ் மொழியைக் காக்கும் போராட்டத்தில் தமிழ் இளைஞர்கள் நால்வர் உயிர்த் தியாகம் செய்த வரலாற்று நிகழ்வு கர்நாடக தமிழர்களால் மறக்க முடியாததாகும்.

1956-ஆம் ஆண்டு நவ.1-ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, கர்நாடகத்தில் காலம்காலமாக வாழ்ந்துவந்த தமிழர்கள் மொழி சிறுபான்மையினர் ஆகிவிட்டனர். இதன் தொடர்ச்சியாக, கர்நாடகத்தில் தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களை, வாழ்வாதாரத்தை, பேச்சுரிமையை, அரசியல் அங்கீகாரத்தை, தாய்மொழி உரிமையை, குடிமை உரிமையை தற்காத்துக் கொள்வதற்கு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

கோலார் தங்கவயலில் 1982-ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு உயிரிழந்த தியாகிகள் (இடமிருந்து) பரமேஷ், மோகன், பால்ராஜ், உதயகுமார்.
கோலார் தங்கவயலில் 1982-ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப் போராட்டத்தில் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு உயிரிழந்த தியாகிகள் (இடமிருந்து) பரமேஷ், மோகன், பால்ராஜ், உதயகுமார்.

கர்நாடகத்தில் மும்மொழிக் கொள்கை அமலில் உள்ளது. அந்த காலத்தில் அதிக மதிப்பெண்களை பெறும் நோக்கில், பள்ளிகளில் முதல் பாடமாக சம்ஸ்கிருதத்தைப் படிக்கும் போக்கு கன்னடர்களிடம் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதுதவிர, இந்தி மொழி மீதான மோகமும் கன்னடர்களிடையே அதிகளவில் காணப்பட்டது.

இதை கவனித்த கன்னட ஆர்வலர்கள், கன்னட மொழிக்கு முக்கியத்துவம் பெருக போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக, கன்னட மொழி வளர்ச்சி குறித்து ஆராய்வதற்கு கல்வி அறிஞர் முன்னாள் துணை வேந்தர் வி.சி.கோகாக் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கன்னட மொழியை முதல்பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும். வேலைவாய்ப்பில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கன்னடம் படித்தால் மட்டுமே அரசு வேலை போன்ற பரிந்துரைகளை அக் குழு அளித்தது. இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட அப்போதைய குண்டுராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, அதை உடனடியாக அமல்படுத்த உத்தரவிடப்பட்டு, அதற்கான பணியைத் தொடங்கியது.

இதனால், தமிழ் மொழியை முதல் பாடமாக எடுத்து படித்து வந்த தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம், உருது, மராத்தி மொழியை படித்து வந்த மாணவர்களுக்கும் தாய்மொழிக் கல்வி மறுக்கப்பட்டது. இதனால் கிளர்ந்தெழுந்த தமிழர்கள், கோலார் தங்கவயலில் உள்ள ஜிம்கானா திடலில் கோகாக் அறிக்கையின் நகல் எரிப்புப் போராட்டத்தை நடத்தினர்.

தமிழ் மொழிக் கல்வியைப் பாதுகாக்க கோரியும், கோகாக் அறிக்கையை திரும்பப் பெறக் கோரியும் வலியுறுத்தி 1982-ஆம் ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி பெங்களூரில் பிரம்மாண்டமான பேரணியை நடத்தி, அன்றைய ஆளுநர் கோவிந்த்நாராயண், முதல்வர் குண்டுராவிடம் மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, கோலார் தங்கவயலில் ஜூலை 1-ஆம் தேதி திமுக சார்பில் கோகாக் அறிக்கையை திரும்பப் பெறக் கோரி கூட்டம் நடத்தப்பட்டது. இது கோலார் தங்கவயல் இளைஞர்கள், மாணவர்களிடையே பெரும் எழுச்சிக்கு வித்திட்டது.

இதைத் தொடர்ந்து, ஜூலை 5-ஆம் தேதி கோலார் தங்கவயலில் ஆயிரக்கணக்கில் திரண்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமிழ் மொழிக் கல்வியைப் பாதுகாக்க கோரி ஊர்வலம் நடத்தினர். நகரின் பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்ற ஊர்வலத்தைக் கலைக்க மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைக் குண்டு வீசினர். இதில் சிதறி ஓடிய மாணவர்கள் மீது வன்முறை ஏவப்பட்டது. இதில், என்.டி.பிளாக் பகுதியைச் சேர்ந்த மாணவர் பரமேஷ், போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு முதல் பலியானார்.

இதனால் மாணவர் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. சாம்பியன்ரீஃப் பகுதியில் போலீஸாரை எதிர்த்து நின்ற மோகனை போலீஸார் சுட்டதில் அவர் மாண்டுபோனார். அவரைத் தொடர்ந்து, பால்ராஜ், உதயகுமார் போன்ற இளைஞர்களும் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். இந்த கலவரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஜூலை 7-ஆம் தேதி கோலார் தங்கவயலில் மாணவர் போராட்டம் ஓய்ந்தது. ஆனால், தமிழ் மொழிக்காக நான்கு தமிழ் இளைஞர்கள் செய்த உயிர்த் தியாகம் இன்னமும் கோலார் தங்கவயல் மக்களின் மனங்களில் நினைவுகளாக நிலைத்திருக்கின்றன.

இதனையடுத்து, கோலார் தங்கவயலின் பல்வேறு பகுதிகளில் ஜூலை 5,6,7 ஆகிய 3 நாள்களிலும் தமிழ் அமைப்புகளால் வீரவணக்க நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தாய்மொழி உரிமையைப் பெறுவதில் உறுதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நான்கு தியாகிகளின் வீரவணக்க நாள், கர்நாடக தமிழர்களின் மனதில் எழுச்சியை ஏற்படுத்தும் என்று தமிழ் ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Comments
Loading...