தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆசிரியருக்கான தகுதித் தேர்வினை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும் : ஸ்டாலின்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  இந்திய அரசின் கட்டாயக் கல்விச்சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் நியமனத்திற்கான தகுதித் தேர்வினை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும். ஆனால், தமிழக அரசு 3 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தாமல் இருப்பது கவலைஅளிப்பதாக இருக்கிறது.

ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டு, 2016 வரை இந்த தகுதி தேர்வை எழுத வழங்கப்பட்ட கால அவகாசமும் 1,665 ஆசிரியர்களுக்கு நிறைவடையும் சூழ்நிலையில், மாநிலத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்துவது பற்றி எந்தவித அறிவிப்பையும் அ.தி.மு.க. அரசு வெளியிடாமல் இருப்பது புரியாத புதிராக இருக்கிறது.  இதனால் ஆசிரியர் பணியில் புதிதாக சேர விரும்புவோரும், ஏற்கனவே ஆசிரியர் பணியில் சேர்ந்து இந்த தேர்வை எழுத முடியாத காரணத்தால் மருத்துவ விடுப்பு, ஊக்கத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளை பெற முடியாதவர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள்.

 உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்வை நடத்த முடியவில்லை என்று மத்திய அரசுக்கு கல்வித்துறை செயலாளர் பதில் சொல்லியிருந்தாலும், அந்த வழக்கை துரிதப்படுத்த ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?.  தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு படித்தவர்கள், ஆசிரியர் பணியில் இருப்போரின் பணிப் பிரச்சினைகளை உச்சநீதிமன்றத்தில் உரிய முறையில் எடுத்துவைத்து அந்த வழக்கை விரைந்து விசாரிக்க ஏன் முயற்சி செய்யவில்லை?. 3 வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வை உரிய காலத்தில் நடத்துவதற்கு ஏன் அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.  stalin

ஆசிரியர்கள் நலன் மற்றும் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் நலன் கருதி இனியாவது அ.தி.மு.க. அரசு விழித்துக்கொண்டு ஆசிரியர் தகுதித்தேர்வை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் உடனடியாக முறையிட்டு, இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் அ.தி.மு.க. அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  மேலும், பள்ளிக் கல்வித்துறையில் 60 மாவட்டக் கல்வி அலுவலர்கள், 15 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், 100-க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், அதே அளவிலான மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பணிஇடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

அத்துடன், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் தொடர்பான பொதுக் கலந்தாய்வும் ஜூலை மாதமாகியும் நடைபெறவில்லை. இவை அனைத்துமே கல்வித் துறையைப் பாழ்படுத்தி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் செயல்களாகும். இதனைக் கருத்திற்கொண்டு தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Comments
Loading...