தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல் போகச்செய்யப்பட்டவர் விடயத்தில் சித்துவிளையாட்டு!

Sri Lankan mothers from the "Dead and Mi

ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலை யுத்தத்தில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கு “காணாமல் போனவர்”  என்று ஒரு சான்றிதழை வழங்கும் சட்மூலம் ஒன்று ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படுகிறது. உண்மையில் தமிழ் ஈழ மக்களை ஏமாற்றும், காணாமல் போனோர் விடயத்தில் சித்து விளையாட்டுக் காட்டும் – ஒரு செயற்பாடே இதுவாகும். அதாவது காணாமல் போனோர் ஒன்று ஒரு வகை மக்களை சிங்கள பேரினவாத அரசு உருவாக்க முனைவது பெரும் சூழச்சி நிறைந்ததாகும்.

ஸ்ரீலங்கா அரசு முன்னெடுத்த இனப்படுகொலை யுத்த நடவடிக்கையிலும் இன அழிப்புச் செயற்பாடுகளிலும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் இன அழிப்பு செய்யப்பட்டவர்கள். அவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா? என்பது தொடர்பில் பல்வேறு சந்தேகங்களும் ஊகங்களும் இருந்தாலும் இதற்குப் பொறுப்பு கூற வேண்டியது ஸ்ரீலங்கா அரசே.ஆனால் இனப்படுகொலை போர் தொடர்பிலும் இன அழிப்பு தொடர்பிலும் போரில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பிலும் பொறுப்பற்ற விதமாக செயற்படுகிறது ஸ்ரீலஙகா அரசு.

2009இல் நடந்த இன அழிப்பு போரில் மாத்திரமின்றி, போர் வலயத்திற்கு வெளியிலும் பலர் காணாமல் போகச் செய்யப்பட்டார்கள். கடைக்கு குழந்தைக்கு பால்மா வாங்கச் சென்றவர்களும், விளையாட்டு மைதானத்திற்கு விளையாடச் சென்ற இளைஞர்களும் சிங்கள இனப்படுகொலை இராணுவத்தால் கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்களில் பலர் உயிருடன் இருப்பதாக கூறி அவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கான ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா அரசால் காணாமல் போகச் செய்யப்பட்ட அனைவரையும் பொத்தாம் பொதுவாக காணாமல் போனோர் என்ற சான்றிதழின் ஊடாக காணாமல் போகச் செய்யும் செயற்பாட்டில் ஸ்ரீலங்காவின் இன்றைய அரசு முயல்கிறது. இதன் ஊடாக தனது குற்றங்களை ஸ்ரீலங்கா அரசு மறைக்க முயல்கிறது. உண்மையில் நடைபெற்ற போர் விதி மீறல்கள் மற்றும் இன அழிப்பு தொடர்பான பொறுப்புக் கூறுதல்களை காணாமல் போனோர் என்று சான்றிதழ் வழங்கி மூடி மறைக்க சிங்கள அரசு முனைகிறது.

காணாமல் போனவர் என்று அழைக்க, அவர்கள் திருவிழாவில் காணாமல் போனவர்களா? அல்லது சுனாமி போன்ற இயற்கை அனர்த்தத்தில் காணாமல் போனவர்களா? அவர்கள் இனப்படு கொலை அரசின் இன அழிப்பு போரில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள். அத்துடன் உயிருடன் இலங்கை அரசிடம் சரணடைந்தவர்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சொல்லாமல் காணாமல் போய்விட்டார்கள் என்று சான்றிதழ் கொடுப்பது எத்தகைய அநீதி? அதை வாங்குவது எத்தகைய முட்டாள்தனம்?

ஸ்ரீலங்கா இனப்படுகொலை அரசு தன்னிடம் சரணடைந்தவர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்தவர்களையும் காணாமல் போய்விட்டார்கள் என்று வாய் கூசாமல் சொல்வதை எப்படி ஏற்பது? அவர்களை சிங்கள இனப்படுகொலை அரசு என்ன செய்தது? அவர்களை காணாமல் போகச் செய்தது சிங்கள இனப்படுகொலை அரசா? இன்றுவரை காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் விகாரத்தில் மௌனமாக இருக்கும் சிங்கள அரசு அவர்களுக்கு காணாமல் போனோர் என்றொரு சான்றிதழை வழங்குவது தமிழ் ஈழ இனத்தை மீண்டும் கருவறுக்கவே?

இதன் மூலம் காணாமல் போனவர்களை விடுதலைப் புலிகள்தான் காணாமல் போகச் செய்தார்கள் என்று சிங்கள அரசு நாளை சொல்லும். இன அழிப்பின் பாற்பட்டு காணாமல் போகச் செய்துவிட்டு இன அழிப்புக்கு எதிராக போராடிய விடுதலைப் புலிகளை கொச்சைப் படுத்தும் விதமாக வரலாற்றை பிழையாக சிங்கள அரசு நாளை எழுதுவதைவிட காணாமல் போகச் செய்த சிங்கள அரசின் இன அழிப்புச் செயற்பாட்டுக்கு நீதியை கோருவதே உத்தமமான செயலாகும்.

தமிழவன்,
செண்பகம்.
06.07.2016

Comments
Loading...