தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மீண்டும் புலிப்படை! சிங்கள அரசின் கிலி எதற்கானது!!

LTTE PRABAHARAN

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடு தொடர்பில் விழிப்பாக இருக்குமாறு சிங்கள இராணுவத்திற்கு ஸ்ரீலங்கா அரசின் இராணுவ ஊடகப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச ரீதியான பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாக ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு விளக்கம் அளிக்கும்போது சிங்கள இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் மலிந்த பீரிஸ் என்பவர் இப்படிக் கூறியுள்ளாராம்.

“பங்கரவாத செயற்பாடுகளை முறியடிக்க நவீன உத்திகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைதல் மற்றும் வெளிநாடுகளில் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலி கொள்கைகள் பிரச்சாரம் செய்யப்படுதல் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமானது. நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி அபிலாஸைகளுக்கு எதிராக இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர். பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து பூரண தெளிவு இருக்க வேண்டியது அவசியமானது. கடந்த காலங்களைப் போன்று தற்காலம் இல்லை. காலம் வேகமாக மாறி வருகிறது. கைது செய்வதன் மூலம் அடிப்படை உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றில் நிற்க நேரிடலாம். நவீன கால அச்சுறுத்தல்கள் மிகவும் சிக்கல் மிகுந்தவை. சிறிய ஆய்வு கூடமொன்றில் உயிரி ஆயுதமொன்றை வெகு விரைவில் தயாரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.” –சிங்கள இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் மலிந்த பீரிஸ்

சிங்கள அரசுகள் புலி என்றால் கிலி அடைந்த காலத்தை எளிதில் மறக்க முடியாது. சிங்கள அரசின் இராணுவக் கோட்டைகளை தகர்த்து எறிந்து, சிங்கள அரச படைகளால் அபகரிக்கப்பட்ட தமிழீழ மண்ணை வீரப் புலிகள் மீட்டெடுத்த வரலாறுகள் பலவும் என்றும் நிமிர்ந்து நிற்கின்றன. பல வீரம் செறிந்த தாக்குதல்களை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சிங்கள அரசுக்கும் இராணுவத்திற்கும் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

இப்போது ஆட்சி புரியும் புதிய அரசான மைத்திரிபால சிறிசேன – ரணில் அரசுக்கும் புலி என்றால் கிலியா? அச்சமா? அதனால்தான் இந்த அறிக்கையை விடுத்திருக்கிறதா? அல்லது மீண்டும் புலிகள் இயக்கம் ஆயுதப் போராட்டத்தை நடத்தத் தயாராகிறார்களா? தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் சிங்கள ஆட்சியாளர்கள் கடந்த பல ஆண்டுகளாக எப்படி அணுகினார்களோ, எப்படி நடந்து கொண்டார்களோ அப்படியே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிந்தைய காலத்திலும் நடக்கிறார்கள்.

இப்போதும் ஈழ மக்கள் விரக்தியின் விளிம்புக்குச் சென்று ஆயுதம் ஏந்த நேரிடுமோ என்று நினைப்பதும் உண்டு. ஆனால் ஒன்றை தெளிவாக காட்ட விரும்புகிறோம். அதாவது சிங்கள அரசைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்த மீண்டும் தயாராகிறார்கள் என்ற ஒரு தோற்றப்பாட்டை உருவாக்க வேண்டிய தேவையில் உள்ளது. அவ்வாறான ஒரு வழியிலேயே தமிழ் மக்களை தோற்கடிக்கலாம் என்றும் ஸ்ரீலங்காவின் புதிய அரசு திட்டமிடுகிறது.

கடந்த காலத்தில் ராஜபக்ச அரசும் தனது தேவைக்கேற்ப புலிப் பீதியை உருவாக்கியது. சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக் கொள்ளவும் போர்க்குற்றம் – இனப்படுகொலையிலிருந்து தப்பிக் கொள்ளவும் மீண்டும் மீண்டும் புலிப் படைப் பீதி தோற்றத்தை உருவாக்கி அதில் அரசியல் செய்ததது ராஜபக்ச அரசு. மைத்திரி அரசும் அதே வழிமுறையைப் பின் பற்றுகிறதா? தமிழ் மக்கள் விடயத்தில் மகிந்தவின் வழித்தடத்தை தவறாது ஒற்றியுள்ள  மைத்திரி அரசு புலிப் பீதியை ஏற்படுத்தி அரசியல் செய்வதிலும் மகிந்தவை அச்சு அசலாகப் பின்பற்றுகிறதா? என்ன ஆட்சி மாற்றம்? யாருக்கு ஆட்சி மாற்றம்?

ஸ்ரீலங்காவின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டாலும் தமிழீழக் கனவு அழியவில்லை என்று பல மேடைகளில் பேசியுள்ளார். அத்துடன் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்பால் நாட்டுக்கு ஆபத்து உள்ளது என்றும் எச்சரித்துள்ளார். தமிழ் மக்களுக்குரிய தீர்வை நீங்கள் வழங்காத பட்சத்தில் தமிழ் மக்கள் தமிழீழக் கனவுக்குள் தள்ளப்படுவார்கள். அத்துடன் தமிழ் மக்களுக்கு எதிரான அநியாயங்களை நிறுத்தி நடந்த அநீதிகளுக்கு நீதியை வழங்கினால் ஏன் புலம்பெயர் கட்டமைப்புக்கு சிங்களம் அஞ்ச வேண்டும்.?

வடகிழக்கில் தமிழ் ஈழ மக்கள் பல்வேறு பிரச்சினைகளின் மத்தியில் வாழ்கிறார்கள். உரிமையும் விடுதலையுமற்ற வாழ்வு. தினம் தினம் சிங்களவன் காணிகளை பிடிக்கிறான். கடலில் தொழில் செய்ய விடுகின்றான் இல்லை. இராணுவமே சிங்கள மக்களின் ஆக்கிரமிப்பு அராஜகத்திற்கு காவல் இருக்கிறது. சிங்கள அரசோ, வடக்கில் சிங்கள மக்களை குடியேற்ற செயலணி அமைத்து பெரும் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.

ஒருபுறம் தமிழ் ஈழ மக்களை பெரும் போருக்குள் தள்ளியபடி, அவர்களின் வாழ்வை போர்க்களமாக்கி, அவர்களின் மண்ணை அபகரித்துக் கொண்டு, உரிமையை மறுக்கும் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்தபடி, விடுதலைப் புலிகள் மீண்டும் ஒன்றிணைகிறார்கள் என்றொரு பீதியை ஏற்படுத்தி, அதை வைத்தே தமிழ் ஈழ மக்களை சிங்கள இராணுவத்தின் அராஜகப் பிடிக்குள் வைத்தபடி ஒடுக்கி அழிப்பதே சிங்கள அரசின் பேரினவாத நோக்கம்.

எங்களுடைய தலைவர்களோ, பகோடா சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். 2016இல் வடகிழக்கில் சமஷ்டி என்று சொல்லியவர்கள் சிங்கள அரசின் ஆட்சிக்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கிறார்கள். சிங்கள அரசு இப்படி புலிப் பீதியை ஊட்டுவதும் அதற்கு தமிழ் தலைவர்கள் சாமரம் வீசுவதும் தொடர்ந்தால் தமிழீழம் இன்னொரு ஆயுதப் போராட்டத்தை தொடுக்கும். ஏனெனில் தமிழீழம் ஆயுதத்தை கையில் எடுப்பது சிங்கள தேசத்தின் கையிலேயே உள்ளது.

தமிழவன்,
செண்பகம்.
27.07.2016

Comments
Loading...