Designed by Iniyas LTD
இலங்கை அவுஸ்த்ரேலியா டெஸ்ட் போட்டி! முன்னிலையில் இலங்கை
இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பல்லேகெலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி ஆஸ்திரேலியாவி்ன் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 117 ரன்னில் ஆட்டம் இழந்தது. பின்னர் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இலங்கை அணியின் அனுபவ பந்து வீச்சாளர் ரங்கானா ஹெராத், அறிமுக வீரரான சண்டகான் ஆகியோரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி 203 ரன்னில் சுருண்டது. ஹெராத், சண்டகான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
அடுத்து 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 6 ரன்கள் எடுத்திருந்தது. குசால் பெரேரா 4 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார். அப்போது மழை பெய்ததால் 2-வது நாள் ஆட்டம் அத்துடன் முடிவடைந்தது.
கவுசல் சில்வா 2 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. சில்வாவுடன் கருணாரத்னே ஜோடி சேர்ந்தார். ஆட்டம் தொடங்கிய 3-வது பந்தில் கருணா ரத்னே ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். 2 ரன்களுடன் நின்றிருந்த சில்வா மேலும் ஐந்து ரன்கள் எடுத்து 7 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து குசால் மெண்டீஸ் களம் இறங்கினார். இவருடன் குப்டன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். மேத்யூஸ் நிதானமாக விளையாட, மெண்டிஸ் அதிரடியாக விளையாடினார். அணியின் ஸ்கோர் 86 ரன்னாக இருக்கும்போது மேத்யூஸ் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் இலங்கை அணி 2-வது இன்னிங்சிலும் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்துவிடும் என்று ரசிகர்கள் எண்ணினார்கள்.
ஆனால், 5-வது விக்கெட்டுக்கு மெண்டிஸ் உடன் சண்டிமால் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லயனின் சுழற்பந்து, ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட் ஆகியோரின் வேகப்பந்தை சிறப்பாக எதிர்கொண்டு மெண்டிஸ் ரன்கள் குவித்தார். இதனால் 143 பந்துகளை சந்தித்த மெண்டிஸ் சதம் அடித்தார்.
இலங்கை அணியின் ஸ்கோர் 203 ரன்னாக இருக்கும்போது சண்டிமால் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் எடுத்து நம்பிக்கை ஊட்டியது. அடுத்து மெண்டிஸ் உடன் தனஞ்செயா டி சில்வா ஜோடி சேர்ந்தார். சதத்தைக் கடந்த மெண்டிஸ் தேனீர் இடைவேளையின் கடைசி ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்ததன் மூலம் 150 ரன்னை தாண்டினார்.
தேனீர் இடைவேளைக்குப் பின் ஆட்டம் தொடங்கியதும், டி சில்வா 36 ரன்கள் எடுத்து நிலையில் லயன் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து தில்ருவான் பெரேரா களம் இங்கினார்கள். இலங்கை அணி 80 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. இதனால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது.
குசால் மெண்டிஸ் 169 ரன்களுடனும், பெரேரா 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி இதுவரை 196 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளைய ஆட்டம் தொடங்கியதும் மதிய உணவு இடைவேளை வரை இலங்கை அணி தாக்குப்பிடித்து விளையாடி 250 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றால், ஆஸ்திரேலியா வெற்றி பெற கடுமையாக போராட வேண்டும்.
தற்போது வரை இலங்கை அணியின் கையே ஓங்கியுள்ளது.