Designed by Iniyas LTD
6 மாதங்களாகியும் ஹிரிஷ்ணவியின் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை?
எனது மகள் ஹரிஷ்ணவி படுகொலை செய்யப்பட்டு ஆறு மாதங்களாகிவிட்டன. எனினும் இன்று வரையிலும் நீதி கிடைக்கவில்லை.
எனவே, எனது மகளின் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட வேண்டும் என ஹரிஷ்ணவியின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி பாடசாலை மாணவி ஹரிஷ்ணவி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
திடீர் இறப்பு விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையில் ஹரிஷ்ணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்மைக்கான தடயங்கள் காணப்படுவதாகதெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உடற்கூற்றுப் பரிசோதனையின் முழுமையான அறிக்கை கிடைத்த பின்னரே முழுமையான விவரம் தெரியவரும் என்று வவுனியா சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பில் அயல் வீட்டைச் சேர்ந்த ஒருவர் ஸ்ரீலங்கா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். ஹரிஷ்ணவியின் கொலைக்கு நீதி கோரி வடக்கில் கடையடைப்புகள் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
மாணவர்களும் நீதி வேண்டிப் போராட்டங்களை மேற்கொண்டனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்த எந்தத் தகவல்களும் வெளிவரவில்லை.
வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு தவணையிடப்படுகின்றது. படுகொலை செய்யப்பட்ட ஹரிஷ்ணவியின் 14ஆவது பிறந்ததினம் நேற்றாகும்.
ஆனால், ஹரிஷ்ணவியின் படுகொலைக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. எனது மகள் கொல்லப்பட்டு இன்றுடன் ஆறுமாதங்கள் கடந்துள்ளன.
மகளுக்கு இவ்வாறு கொடூரம் இழைத்தவர்கள் இன்றுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. மகள் தொடர்பான வழக்கு விசாரணைகளை வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்ற வேண்டும்.
பொலிஸார், சட்டவல்லுநர்கள் எனது மகளின் படுகொலைக்கு நீதி பெற்றுத்தர வேண்டும். கடந்த வருடம் பங்குனி மாதம் வெளிநாடு செல்வதற்காக ஆவணங்கள் அனைத்தும் வெளிநாட்டுத் தூதரகத்தில் ஒப்படைத்து அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.
ஹரிஷ்ணவி இந்த வருடப் பிறந்தநாளை தனது அப்பாவுடன் வெளிநாட்டில் கொண்டாடப் போகின்றேன் என்று கூறியிருந்தாள்.
அதை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருந்தாள். ஹரிஷ்ணவியின் 4ஆவது பிறந்த தினம் முடிந்து எனது கணவர் வெளிநாடு சென்றார்.
அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் பிறந்த தினத்தை அவள் கொண்டாடுவதில்லை. அப்பாவிடம் சென்று பிறந்தநாள் கொண்டாடுவதே அவளுடைய விருப்பம்.
எனது மகளின் ஆசைகள் அனைத்தையும் கொடூரர்கள் நிராசையாக்கிவிட்டனர். அந்தக் கொடூரர்கள் கண்டுபிடிக்கப் படவேண்டும். தண்டிக்கப்பட வேண்டும்.
எங்களது வீட்டின் பக்கத்து வீட்டிலுள்ள நபரை சந்தேகத்தில் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அநாவசிய பிரச்சினைகள் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளன.
நாம் முன்பு குடியிருந்த வீட்டில் தற்போது வசிப்பதில்லை. ஹரிஷ்ணவியின் 31ஆம் நாள் கிரியைகளின் பின்னர் எனது உறவினர்கள் வீட்டில் வசித்து வருகின்றேன்.
எவ்வாறாயினும், தனது மகளின் படுகொலைக்கு நியாயமான தீர்வு கிடைக்கவேண்டும். காலத்தை வீணடிக்காது நியாயத்தை வழங்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.