தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட குமாரசாமி கடும் எதிர்ப்பு

kumaraswamy_660_100112125226தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடுவதற்கு மஜத கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து மைசூருவில் செய்தியாளர்களிடம் குமாரசாமி கூறியது:  காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு கட்டப்படவில்லை. தமிழக அரசின் நெருக்கடிக்கு அடிபணிந்து காவிரியில் இருந்துதண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவை கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகத்திற்கு இதுவரை 43 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட்டுள்ள கர்நாடக அரசு, கர்நாடகத்தின் காவிரிப்படுகை விவசாயிகளுக்கு வெறும் 7 டிஎம்சி தண்ணீரை மட்டும் வழங்கியுள்ளது. கர்நாடக அரசு கலைக்கப்பட்டாலும், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது. விவசாயிகளை நலனை காத்தால் மீண்டும் ஆட்சிபீடத்தை காங்கிரஸ் அலங்கரிக்கலாம்.

காவிரி விவகாரத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் கர்நாடகத்தின் நலன் முக்கியம் என்பதை முதல்வர் சித்தராமையா உணரவேண்டும்.

பொது வழங்கல் திட்டம்போல, மாதத்திற்கு குறிப்பிட்ட அளவு நீரை திறந்துவிட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு ஆட்சேபத்திற்குரியதாகும். காவிரிநடுவர் மன்றத்தின் இறுதிதீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை கடந்த 10 ஆண்டுகளாக உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. காவிரி நதிப்படுகை விவசாயிகள் கடந்தாண்டு பயிர்களை இழந்ததால் அவர்களுக்கு பயிர்க்காப்பீடு வழங்க வேண்டும்.

மேலும் நெல், கரும்பு பயிரிடக்கூடாதுஎன்று கூறியுள்ள அரசு, விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். காவிரி நதிப்படுகையில் நிலவும் நிலைமையை தமிழக விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும். காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால மற்றும் இறுதித் தீர்ப்பு கர்நாடக நலனுக்கு எதிரானதாகும். நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு காவிரி நதிப்படுகை விவசாயிகளுக்கு தற்கொலைக்கு ஒப்பானதாகும்.

கர்நாடக மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வரும் நிலையில், காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு தொடர்ந்து கேட்டுவருவதன் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக மக்களின் பொறுமையை சோதிக்கிறார் என்றும் குமாரசாமி கூறியுள்ளார்.

Comments
Loading...