Designed by Iniyas LTD
விபத்தில் இந்த ஆண்டில் 85 ஆயிரம் பேர் பலி! சுப்ரீம்கோர்ட் கவலை
இந்தியாவில் வீதி சாலை விபத்துகளில் ஒரே ஆண்டில் 85 ஆயிரம் உயிர்களை பலிகொடுத்த இந்தியா உலகளாவிய அளவில் விபத்துகளின் தலைநகரமாகி வருவது குறித்து சுப்ரீம் கோர்ட் வேதனை தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரம் அமைந்துள்ள மதுபானக் கடைகளால் சாலை விபத்துகள் அதிகரித்து வருவது தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட், அடுத்த ஆண்டுக்குள் நெடுஞ்சாலைகளின் ஓரம் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக அரசின் சார்பில் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலித்த நீதிபதிகள் கடந்த 2009-ம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்ததை அறிந்தனர்.மேலும், 2012-ம் ஆண்டில் 48,768 ஆக இருந்த நெடுஞ்சாலை விபத்துசார்ந்த மரணங்கள் 2015-ல் 51,205 ஆக உயர்ந்ததை நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
குறிப்பாக, கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் 2.37 விபத்துகள் நடைபெற்றுள்ளதையும், அவற்றில் சிக்கி 85,462 பலியாகியுள்ளதையும், 2.59 லட்சம் பேர் படுகாயம் அடைந்துள்ளதையும் குறிப்பிட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தாக்கூர், வரும் மார்ச் மாதத்தில் இருந்து நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளின் உரிமத்தை புதுப்பிக்க கூடாது என சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.
‘மனித உயிர் என்பது விலைமதிப்பில்லாதது. இந்தியாவில் சாலை இணைப்புகள் அதிகரித்துவரும் நிலையில், சாலைகள் சார்ந்த உள்கட்டமைப்புகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் பெறுகின்றன. அதேவேளையில், அடிக்கடி நிகழும் சாலை விபத்துகள் சராசரி மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
பொருளாதார வளர்ச்சியடைந்த நாடு என்ற இலக்கை நோக்கி முன்னேறும் அதேவேளையில், உலக விபத்துகளின் தலைநகரம் என்ற முத்திரை குத்தப்படுவதை இந்தியா தவிர்க்க வேண்டும்’ என்றும் தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.