Designed by Iniyas LTD
ஸ்ரீலங்காவில் சுதந்திரதினம் கொண்டாடும் சிங்கள மக்களுக்கு தமிழீழத்திலிருந்து ஒரு மடல்!
சிறீலங்கா தேசத்தின் சுதந்திரதினத்தை கொண்டாடும் சிங்கள மக்களுக்கு, தமிழீழமகனின் கடிதம்!!
அறுபத்தி ஒன்பதாவது சுதந்திரதின கொண்டாட்டங்களில் மூழ்கிப்போய் இருக்கும் சிங்கள தேசத்தவனே உன் பக்கத்து தேசத்தவனின் மடல் இது.
காலிமுக கடற்கரையில் உன் முப்படைகளையும் கொண்டு நிலமதிர அணி வகுப்பிடு.
சிங்கள தேசிய உடுப்பு உடுத்திய உன் தேசத்து அதிபர் உரைக்கு கைதட்டு.
யாரிடமோ திருவோடு ஏந்தி வாங்கி குவித்து வைத்திருக்கும் ஆயுதங்களின் பளபளப்பில் துட்டகைமுனுவை நினைவிருத்து.! இது எல்லாம் செய்!!.
ஆனால், உன் பக்கத்து தேசமான தமிழீழமெங்கும் ராணுவ முற்றுகைகளுக்குள்ளேயே எப்போதும் இருக்க வேண்டும் என்று நீ விரும்பிக்கொண்டிருக்கிறாய்பார், அதுதான் எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஆனால் நீ தென்னிலங்கையில் ஏற்றும் அதே சிங்ககொடிதான் தமிழர் மண்ணிலும் ஏறியே ஆகவேண்டும் என்று நீ அடம்பிடிக்கிறாய்பார் அதுதான் எம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை – ஒருபோதும்.
இன்று நீ சுதந்திரதினமாக கொண்டாடும் இந்த நாள் எமது வரலாற்றிலும் முக்கியமானது தெரியுமா..
இந்த நாளில் (04 பெப்) இருந்துதான் தமிழர்கள் மீதான இனப்படுகொலை ஆரம்பித்தது.
இந்த நூற்றாண்டின் மிகவும் கொடிய குரூரமான இனப்படுகொலையை எம்மீது நடாத்திவிட்டு ஒன்றுமே நடவாத மாதிரி சிங்களதேச மக்கள் நடப்பதைத்தான் எம்மால் ஜீரணிக்க முடியவில்லை.
லட்சக்கணக்கான தமிழர்களை கொன்று புதைத்து, சிதைத்து எரித்ததன் குறியீடாக தமிழர்கள் பெருஞ் சோகத்துடன் நினைவுகொள்ளும் மே18 என்பதை வெற்றி நாளாக குதூகலிக்கும் சிங்கள தேசத்தின் சுதந்திரதினத்தை உண்மையாகவே நாம் வெறுப்புடனும் வன்மத்துடனுமே பார்க்கிறோம்.அதனால்தான் இந்த நாளை நாம் கரிநாளாக, துக்கநாளாக, எமக்கு இழைக்கப்பட்ட ஓரவஞ்சனையின் நாளாக நினைக்கின்றோம்.
கொஞ்சம் வரலாற்றை பின்னோக்கி பார்….
முதலில் ஒன்று உனக்கு தெரியுமா…
எங்களின் தாயக இறைமை ஒருபோதும் நாம் சிங்கள இனத்திடம் ஒப்படைத்ததே இல்லை. அது ஐரோப்பிய காலனி ஆதிக்க கடவுள்கள் செய்தவினை.
அந்த காலம் உலகம் முழுதும் இருந்த ஆட்சிமுறையான மன்னர் ஆட்சியில் நீங்கள் சிங்கள மன்னர்களாலும், நாங்கள் எமது மொழி பேசும் தமிழ் மன்னர்களாலுமே ஆளப்பட்டு வந்தோம்.
ஒரு தீவுக்குள் இரண்டு தேசங்கள்.
1619ல் போத்துகேசியர்கள் சங்கிலியனை வென்றபோதும்கூட எமது தமிழ்தேச இறைமை அவர்களிடம் இலகுவாக வீழ்ந்துவிடவில்லை.
தமது நிர்வாக வசதிக்காக இந்த தீவு முழுதையும் ஒன்றாக்கிய ஆங்கிலேயர் தாம் வெளியேறும்போது அதனை உங்களிடம் ஒப்படைத்து சென்ற வரலாற்று துரோகத்தால்தான் நானும் நீயும் ரத்தம் சிந்துகின்றோம் தெரியுமா.. நிற்க,
இலங்கை தீவின் சுதந்திரத்துக்காக உன் முப்பாட்டனும், பாட்டனும் போரிடாவிட்டாலும் உலகெங்கும் ஏற்பட்ட அழுத்தங்களால் போகிற போக்கில் பக்கிம்காம்அரசி தூக்கி எறிந்த சுதந்திரபிச்சை உன் சிங்கள தலைவர்களின் திருவோட்டில் விழுந்ததுதான் இன்றைய பிரச்சனைகளுக்கு கால். அதுவரை பதுங்கி இருந்த சிங்களபேரினவாத பேய் 04.02.48க்கு பின்னரே வெளிவந்து விசுவரூபமெடுத்து விசரெடுத்து ஆடத்தொடங்கியது.
உன் மூளையின் ஒவ்வொரு திசுக்களிலும் மகாவம்ச கனவை ஊட்டியும் ஊற்றியும் வளர்த்தெடுத்த சிங்கள பேரினவாதம் தமிழர்களை அடக்கி ஆள்வதுதான் சிங்கள இனத்தின் இருத்தலுக்கு மிகமுக்கியம் என்ற சேதியை எப்படியோ பதியம் போட்டுள்ளது.
நீயும் யார் தமிழர்களை அதிகமாக அழிக்கிறார்களோ அவர்களையே வாக்களித்து தெரிவுசெய்து பேரினவாத சேற்றுக்குள் சங்கமித்தாய்.
எல்லா அடக்குமுறைகளும் ஒடுக்குதல்களும் எவ்வளவு வலிகளை தந்தாலும் வரலாறு அதில் இருந்து விடுதலை ஆக ஒரு சக்தியை வழங்கும் என்பது பொது விதி அல்லவா…
எமக்கும் ஒரு தலைவன் கிடைத்தான்.
யாருக்குமே கிடைக்காத ஒரு நேர்மையான உண்மையான வழிகாட்டி ஒருவன் கிடைத்தான்.
முப்பதாண்டுகள் அவன் நடாத்திய உன்னதமான போராட்டம் சிங்கள மகனே உனக்கு எத்தனை சேதி சொல்லியும் நீ இன்னும் அதிலிருந்து கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் வரலாற்று சோகம் போ.!!
உதாரணத்துக்கு ஒன்று, சிங்கள பேரினவாத ஆட்சி மையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் களத்தை திறந்தது சிங்களம்.
தமிழர்களுக்கான சுதந்திரம்தான் சிங்கள மக்களுக்கான உண்மையான சுதந்திரமாக இருக்கமுடியும்” என்று எங்கள் தேசிய தலைவன் சொன்னதன் அர்த்தத்தை நீ எப்படி புரிந்துகொண்டாயோ தெரியவில்லை…
ஒரே தீவுக்குள் இன்னொரு தேசத்தை அடிமையாக அடக்கி வைத்திருக்கும் வரைக்கும் உண்மையான சுதந்திரத்தினை சிங்கள மக்களும் அனுபவிக்க முடியாது என்பதுதான் முப்பதாண்டு போராட்டம் சிங்கள இனத்துக்கு சொல்லிய வரலாறு.
வரலாற்றில் எப்போதாவது அரிதாக நிகழும்
போர்க்கள வாய்ப்பு,
துரோகத்தின் கூட்டு,
மேலாதிக்க ஒத்துழைப்பு,
சர்வதேச ஒத்துழைப்பு என்பன ஒன்றாக இணைந்ததால் கிடைத்த தற்காலிக வெற்றியையே முழுமையானதாக, நிரந்தரமானதாக எண்ணிக் கொண்டிருக்கும் சிங்கள மகனே,
அந்த பெரும் இனவழிப்பு நாட்களான 2009 மே 18ல் கூட எமது போரிடும்வலு, ஆளணி, தளபாடங்கள் என்பனவற்றை இழந்திருக்கிறோம் உண்மைதான்.
சிங்களதேச சுதந்திரநாளுக்காக சிங்ககொடியை ஆட்டியபடியே கூவிக்குதூகலிக்கும் சிங்கள குடிமகனே,
கொஞ்சம் நிதானமாக சிந்தித்து பார். யாரோ கண்டிப்பிரபுத்துவ பண்டாரநாயகாக்களுக்காகவும், சேனநாயக்காகளுக்காகவும், ராஜபக்சே குடும்பத்துக்காகவும், மைத்திரிகளுக்காகவும் நீ ஆயுதம் ஏந்தி எம் மண்ணில் இன்னும் எத்தனை காலம்தான் நிலைகொண்டு நிற்கபோகிறாய்….
உலகவரலாறுகளை புரட்டிப்பார்.
உலகம் முழுதும் சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை வைத்திருந்த சக்ரவர்த்தினி பக்கத்து நாடாக இருந்த போதிலும் எழுந்தார்களே அயர்லாந்தின் தான்பிரின்கள் அவர்கள் எப்படி எழுந்தார்கள் என்பதையும்,
மேலும் உலகமுழுதும் எழுச்சி கொண்ட மக்களின் வரலாறுகளையும் புரட்டிப்பார் …
ஏன் அதிகதூரம் போகிறாய்.. உன் பக்கத்திலேயே.. மிக பக்கத்திலேயே பார்.
பொன்னம்பலம் ராமநாதன்களை கண்டுபழகி போட்ட கணக்கால் தமிழர்கள் சலுகைகளையே யாசிப்பர், போரிடவே மாட்டார்கள் என்ற கனவுடன் தூங்கிக்கிடந்த சிங்கள பேரினவாத கனவுகலைத்து யதார்த்தத்தை தீயாக பொசுக்கி புரியவைக்க ஒருவன் பிறப்பான் என்பதை சேனநாயகாவும் பண்டாவும் ஒருபோதும் கனவுகூட கண்டிருக்கமாட்டார்கள்தான்.
ஆனால் நடந்தது என்ன என்பதை நீ உன் கண்ணாலே கண்டும் கேட்டும் இருப்பாய்.
எனவே இப்போதே ஆதிக்க எண்ணம் கலை.
உனக்கு இருக்கும் சுதந்திரதேசம் போல ஒன்று தமிழர்களுக்கும் இருக்கு என்ற யதார்தம் புரி.
உன்மீது சவாரி செய்யும் சிங்கள ராஜபக்சேகளை மைத்திரிகளையும் தூக்கி எறி.!!
மீண்டும் சொல்கிறேன்….
எங்களின் தேசியதலைவன் சொன்னதுபோல ‘தமிழர்களின் சுதந்திரம்தான் சிங்கள மக்களுக்கான உண்மையான சுதந்திரமாக இருக்கமுடியும் என்பதன் அர்த்தத்தை புரிந்துகொள்.
இந்த தீவில் நிரந்தர சமாதானமும் சுபீட்சமும் பொங்க அதுவே முடிவாகும்.
அதுவரை உன் சுதந்திரநாள் எமக்கு துக்க நாள்தான். உன் சுதந்திர நாளை எம்மீதான இனப்படுகொலை ஆரம்பித்த நாளாகவே பார்ப்போம்.
தமிழீழமகன்
– ச.ச.முத்து