Designed by Iniyas LTD
உத்தரபிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இன்று பதவி ஏற்பு
உத்தரபிரதேச முதலமைச்சராக மடாதிபதி யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டார். லக்னோவில் இன்று நடக்கிற கோலாகல விழாவில் அவர் பதவி ஏற்கிறார். மேலும் 2 பேர் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
பாரதீய ஜனதா வெற்றி
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பா. ஜனதா கட்சி அபார வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. ‘முதல்–மந்திரி வேட்பாளர் இவர்தான்’ என ஒருவரை முன்னிலைப்படுத்தாமல், இந்த தேர்தலை சந்தித்தாலும் மொத்தம் உள்ள 403 இடங்களில் 312 இடங்களில் வெற்றி பெற்று பா. ஜனதா வரலாற்று சாதனை புரிந்தது. அதன் கூட்டணி கட்சிகள் 13 இடங்களில் வென்றுள்ளன.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் முதல்–மந்திரி நாற்காலியை அலங்கரிக்கப்போவது யார் என்று மில்லியன் டாலர் கேள்வி எழுந்தது.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாநில பா.ஜனதா தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, கோரக்பூர் எம்.பி., யோகி ஆதித்யநாத், மத்திய தொலைதொடர்புதுறை மந்திரி மனோஜ் சின்கா உள்ளிட்ட பலரது பெயர்கள் பலமாக அடிபட்டன. கட்சித் தலைமை, உத்தரபிரதேச முன்னணி தலைவர்களுடன் ஒரு வார காலத்துக்கு மேலாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தது.
இந்த நிலையில் முதல்–மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், லக்னோவில் மாநில பா.ஜனதா தலைமை அலுவலகம் அருகில் அமைந்துள்ள லோக்பவனில் 18–ந் தேதி (நேற்று) மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி மாநிலம் முழுவதும் இருந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நேற்றுமுன்தினம் மாலை முதல் லக்னோ வந்து குவியத் தொடங்கினர்.
நேற்று மாலை 4 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், சுமார் 5.30 மணிக்குத்தான் கூட்டம் தொடங்கியது.
முதல்–மந்திரி தேர்வு
இதில் மேலிட பார்வையாளர்களாக மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடுவும், பா.ஜனதா பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவும் கலந்து கொண்டனர். அவர்களுடன் மாநில பா.ஜனதா பொறுப்பாளர் ஓம் மாத்தூர், மாநில பா.ஜனதா தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, தேசிய இணை அமைப்புச்செயலாளர் சிவ பிரகாஷ், மாநில பொதுச்செயலாளர் சுனில் பன்சால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதில் சட்டசபை பா.ஜனதா தலைவராக (முதல்–மந்திரியாக) 44 வயதான மடாதிபதி யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பெயரை மாநில பா.ஜனதா தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா முன்மொழிந்தார். அதை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வழிமொழிந்தனர்.
அவர் உத்தரபிரதேசத்தின் 32–வது முதல்–மந்திரி ஆவார். அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்–மந்திரியாக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ளதை கட்சியின் மூத்த தலைவர்கள், கவர்னர் ராம்நாயக்கை சந்தித்து தெரிவித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினர். அதைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத்தை ஆட்சி அமைக் குமாறு கவர்னர் ராம்நாயக் முறைப்படி அழைப்பு விடுத்தார்.
யார் இந்த யோகி ஆதித்யநாத்?
உத்தரபிரதேசத்தின் முதல்– மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோகி ஆதித்யநாத், இன்றைய உத்தரகாண்ட் மாநிலம், பாஞ்சூரில் 1972–ம் ஆண்டு, ஜூன் மாதம் 5–ந் தேதி பிறந்தவர். இவரது இயற்பெயர் அஜய்சிங். எச்.என்.பி. கார்வால் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றவர். ராஜபுத்திர குடும்பத்தை சேர்ந்தவர். ‘இந்து யுவ வாஹினி’ என்ற சமூக, கலாசார அமைப்பை நிறுவி நடத்தி வந்தார். அத்துடன் கோரக்பூர் கோரக்நாத் மடத்தின் தலைவராகவும் இருந்து வந்தார்.
1998–ம் ஆண்டு தனது 26–வது வயதிலேயே கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி., ஆனவர். தொடர்ந்து 1999, 2004, 2009, 2014 தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்.பி.,யாக உள்ளார்.
இன்று பதவி ஏற்பு
லக்னோவில் உள்ள கன்ஷிராம் ஸ்மிரிதி உப்வானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் நடக்கிற கோலாகல விழாவில் உத்தரபிரதேசத்தின் முதல்–மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருக்கும், துணை முதல்–மந்திரிகள் கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா மற்றும் மந்திரிகளுக்கும் கவர்னர் ராம்நாயக் பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித் ஷா, பா.ஜனதா ஆளும் மாநில முதல்– மந்திரிகள், மத்திய மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி லக்னோவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.