தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இரகசிய சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை உடனடியாக வெளியிடுங்கள்! வட முதல்வர்

armeஜெனிவா தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் மூலம் காணாமல் போனோர் தொடர்பான விடயத்தில் என்ன முன்னேற்றங்கள் காணப்பட்டன என்பது குறித்து ஆராய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் காணாமல் போன உறவினர்களின் அமைப்புக்கள் ஆகியோருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று மதியம் கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்.ஐங்கரநேசன், வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராசா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை உடனடியாக வெளியிடுமாறு வடமாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் காணாமல் போன தமது பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக தாய்மார் தெரிவிக்கின்றமை தொடர்பில் அரசாங்கம் உரிய பதில் வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டில் காணப்படும் இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை அடையாளப்படுத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தவுள்ளதாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் போராட்டத்தினால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்

Comments
Loading...