தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முள்ளிவாய்காலில் ஒரு மருத்துவப் போராளியின் இறுதி நாட்கள் – மிகுதி நாட்கள் 5

சண்டை உக்கிரமடைந்து இரு தரப்பும் பார்க்கக்கூடிய தூரத்திலேயே சண்டை நடைபெற்றது. மாத்தளன் பகுதியில் வைத்து ஸ்ரீலங்கா இராணுவத்தினர் ஏவிய RPG எறிகணை ஒன்று ஒரு இளம் பெண்ணின் இரண்டு கால்களையும்  துளைத்து வெடிக்காமல் நின்றுவிட்டது. அதனை எடுப்பதென்பது மிகவும் ஆபத்தான விடையம். ஆனால் மாத்தளன் மருத்துவமனையில் வைத்து மருத்துவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த எறிகனையினை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். ஆனால் அந்த பெண்ணின் கால் தொடைப்பகுதி கடுமையாக சிதைந்துவிட்டது.

இப்படி தினமும் பல கொடுமைகளை பார்க்க வேண்டிய நிலையில் நாம்  இருந்தோம்.. ICRC தொண்டு நிறுவனம் தினமும் கப்பல் அனுப்பி மிக உயிராபத்தானவர்களை மட்டும்  கடல் வழியாக மீட்டுச் சென்றது. அதுவும் கப்பல் சில நாட்கள் அனுப்பப்படுவதில்லை. இதனால் பல மனித உயிர்கள் கொல்லப்பட்டன. ஒரு நாளைக்கு கப்பலில் அனுப்புபவர்களை விட தினமும் காயமடையும் மக்களின் எண்ணிக்கை இரு மடங்காக இருந்தது.

நாங்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம்  (ICRC)  மருந்துப்பொருட்கள் கேட்டபோது ஸ்ரீலங்கா அரசு மருந்துகளை கொண்டு செல்ல அனுமதி மறுத்துவிட்டதாக கூறினார்கள். தங்களால் காயமடைந்தவர்களை கூட்டிச்செல்ல மட்டுமே முடியும் எனவும்.வேறு எந்த உதவியும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்.

நிலைமை மோசமடைந்து சென்றுகொண்டிருந்த நேரம் நான் தற்காலிக மருத்துவமனை உதவி மருத்துவனாக இருந்த அலனின் இடத்துக்கு சென்று விட்டு மற்றைய தற்காலிக மருத்துவ மனைக்கு சென்று கொண்டிருந்தேன் அப்போது ஆங்காங்கே எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தது. கண் முன்னாள் பலர் மடிவதை பார்க்க முடிந்தது. என்னை பொறுத்த வரை இப்படி ஒரு சம்பவத்தினை இனி யாரும் பார்க்கவே கூடாது.

ஒரு புளியமரத்துக்கு மேல் எறிகணை வீழ்ந்து வெடித்து ஒரு மணி நேரத்துக்குள் இருக்கும். நான் அவ்வழியாக வந்துகொண்டிருந்த போது அந்த மரத்துக்கு அடியில் மூன்று குடும்பங்கள் ஒரு பக்கம் எறிகணை வெடித்ததில் ஒரு பொது மகன் கை துண்டிக்கப்பட்ட நிலையில் குற்றுயிராக முனுகிக்கொண்டிருந்தார். அவருக்கு அருகில் அவரது மனைவி இறந்து கிடந்தார். அவர்களது ஒரு பிள்ளையும் கொல்லப்பட்டு இருந்தது. இன்னொரு புறம் இரு உடலங்கள் சிதைந்த நிலையில் காணப்பட்டது. அதன் அருகில் ஒரு தாய் தான் பிள்ளைகளுக்கு ரொட்டி சுட்டுக்கொண்டிருந்தார். இறந்த உடலங்களுக்கு அருகில் வைத்து யாரும் உணவு சமைப்பதை உலகில் பார்த்திருக்க மாட்டார்கள்.

நான் அந்த தாயிடம் ‘’அம்மா செல் விழுந்து இருக்கு..என்ன நீங்கள் இப்ப ரொட்டி சுடுறீங்க’’ என்று கேட்டேன். அதற்கு அந்த தாய் என்னை பார்த்து “தம்பி எல்லோரும் சாகத்தான் போரம் அதுவரைக்கும் என்ற பிள்ளைகளை பட்டினிப்போட முடியாது. பக்கத்தில செத்து கிடக்குறது என்ற தம்பி தான். என்னால் என்ன செய்ய முடியும் எனக்கு என்ற பிள்ளைகள் தான் இப்ப முக்கியம் என்று எல்லாவற்றையும் இழந்த வெறுப்போடு என் முகத்தினை பார்த்தார்.

எனக்கு ஒரு பதிலும் கூற தெரியவில்லை. நான் காயமடைந்து இருந்தவருக்கு என்னால் முடித்த முதலுதவி செய்துவிட்டு முள்ளிவாய்க்கால் வீதிக்கு வந்தேன்.

களத்தின் குறிப்பு தொடரும்…

 

Comments
Loading...