தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரான்ஸ் தலைநகரை சுத்தப்படுத்தி மகிழ்ச்சியில் ஆழ்த்திய தமிழர்கள்..

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள முக்கிய வீதிகளை அங்கிருக்கும் தமிழக இளைஞர்கள் சுத்தப்படுத்தியுள்ளனர்.

சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வினை முன்னிட்டே நேற்றைய தினம் இவ்வாறான சுத்திகரிப்பு நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். இங்குள்ள தமிழ் இளைஞர்கள் பாரீஸ் மாநகர சபையுடன் இணைந்து அங்குள்ள வீதிகளை சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல் மக்களுக்கு சுற்றுசூழல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால் பிரான்ஸ் நாட்டு மக்கள் தமிழ் இளைஞர்களை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

இதுபற்றி அங்குள்ள தமிழ் இளைஞர் ஜே கூறுகையில்,

பாரீஸ் நகரின் முக்கிய வீதிகளை சுத்தப்படுத்தவும், மக்களுக்கு சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ‘பிரான்ஸ் கமலஹாசன் நற்பணி மன்றம்’ இயக்கத்தின் தலைவர் பிரான்சுவா கஸ்தோன் ஏற்பாடு செய்திருந்தார்.

அதன்படி பாரீஸ் மாநகர சபையுடன் பேசி இணைந்து செயலாற்றலாம் என முடிவெடுத்தோம்.
குப்பைகள் அதிகமாக இருக்கும் வீதிகளில் குப்பைகளை அகற்றி அங்குள்ள மக்களிடம் இனி இதுபோல் குப்பைகளை வீசாதீர்கள் என்று கூறி, சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம்.

பிரான்சுவா கஸ்தோன் இதற்கு முன் இரண்டு முறை இது போல பாரீஸ் வீதிகளை சுத்தப்படுத்தும் பணிகளை செய்துள்ளார்.
இனிவரும் காலங்களிலும் இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து செய்துகொண்டிருப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு, நெடுவாசல், விவசாயிகள் பிரச்சினை, ஆகிய பிரச்சினைகளின் போதெல்லாம் அங்குள்ள தமிழ் இளைஞர்கள் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்ததுடன் பிரான்ஸில் உள்ள இந்திய தூதரகத்தையும் முற்றுகையிடவும் செய்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சமூக அக்கறைகொண்ட செயல்களால் அங்குள்ள தமிழ் இளைஞர்களை பிரான்ஸ் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Comments
Loading...