தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இவன் யார் என்று தெரிகிறதா – கலகலப்பான படம்

நாயகன் விஷ்ணு கல்லூரியில் படித்து முடித்துவிட்டு பொறுப்பில்லாமல் நண்பர்கள் அர்ஜுனன், ராஜ்குமார் ஆகியோருடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார். இவருடைய அப்பாவான ஜெயப்பிரகாஷும் விஷ்ணுவை ரொம்பவும் செல்லமாக வளர்த்து வருகிறார்.

பொறுப்பில்லாமலும், அப்பாவித்தனமாகவும் இருக்கும் விஷ்ணுவை அவரது நண்பர்கள் தங்கள் காதலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கு உதவுவதாக தனது அப்பாவித்தனத்தால் விஷ்ணு தனது நண்பர்களை அவ்வப்போது பிரச்சினையில் மாட்டி விடுகிறார்.

இதனால் கோபமடைந்த அவரது நண்பர்கள் விஷ்ணுவுக்கு காதலே அமையாது என்று அவருக்கு சாபம் விடுகிறார்கள். ஆனால், விஷ்ணுவோ காதலர் தினத்தில் பிறந்த எனக்கு காதல் அமையாதா? நான் யாரையாவது காதலித்து காட்டுகிறேன் என்று அவர்களுக்கு சவால் விட்டு செல்கிறார்.

அப்போது, கல்லூரியில் படிக்கும்போது இவருடன் படித்த இஷா நாயர், இவரை தேடி வந்து காதலை சொன்னது ஞாபகம் வரவே, அவளை தேடிப் போய் தனது காதலை சொல்கிறார். ஆனால், இஷா நாயருக்கோ திருமணம் ஆகி, குழந்தையெல்லாம் இருக்கிறது. உடனே ஏமாற்றத்துடன் திரும்பும் விஷ்ணு சப்-இன்ஸ்பெக்டரான நாயகி வர்ஷாவை பார்க்கிறார்.

அவளை எப்படியாவது காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் அவள் பின்னாலேயே சுற்றுகிறார். இறுதியில், வர்ஷாவை காதலிக்க வைத்து, தனது நண்பர்களுக்கு விடுத்த சவாலை விஷ்ணு நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

சின்னத்திரையில் நடித்து வந்த விஷ்ணு, அவ்வப்போது சினிமாவில் சிறுசிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். இந்த படத்தில் முழுநீள ஹீரோவாக மாறியிருக்கிறார். அப்பாவித்தனமான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து இவர் செய்யும் சேட்டைகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன.

நாயகனின் நண்பர்களாக வரும் அர்ஜுனன், ராஜ்குமார் இருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நாயகிகளில் இஷாரா நாயர் ஏற்கெனவே நாம் பல படங்களில் பார்த்த முகம்தான். இந்த படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்திருக்கிறார்.

டப் மாஷில் புகழ்பெற்ற வர்ஷா ஹீரோயின் அவதாரம் எடுத்திருக்கும் படம். படத்தில் இவருடைய கதாபாத்திரம்தான் ரொம்பவும் சீரியஸாக செல்லும். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். படத்திற்கு ரொம்பவும் பலம் அருள்தாஸ், பக்ஸ், ராம்ஸ் செய்யும் அமர்க்களம்தான். திருட்டு கும்பலான இவர்கள் செய்யும் சேட்டைகள் படத்தின் கலகலப்புக்கு கியாரண்டி.

இயக்குனர் சுரேஷ்குமார் தனது முதல் படத்தில் காதல் மற்றும் அதற்குள் காமெடி கலந்து கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இப்படத்தின் முதல் பாதி ரொம்பவும் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி ரொம்பவும் கலகலப்பாக நகர்ந்திருக்கிறது. குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கக்கூடிய ஒரு படமாக இதைக் கொடுத்திருக்கிறார்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படியாக உள்ளது. அதேபோல், பின்னணி இசையும் ஓகே சொல்ல வைக்கிறது. பி&ஜியின் ஒளிப்பதிவும் பாராட்டும்படி இருக்கிறது.

மொத்தத்தில் ‘இவன் யாரென்று தெரிகிறதா?’ கலகலப்பு.

Comments
Loading...