Designed by Iniyas LTD
பாதுகாப்பு வேலியை அகற்றும் படை ஆச்சரியத்தில் மக்கள்.

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலய சுற்று வேலிகளை அகற்றும் நடவடிக்கையில் சிறீலங்கா படை தரப்பு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை வலி. வடக்கு வயாவிளான், குட்டியபுலம் பகுதியினூடாக செல்லும் உயர் பாதுகாப்பு வலய எல்லை வேலியை திடீரென அகற்றும் நடவடிக்கையில் சிறீலங்கா படை தரப்பு ஈடுபட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் போர் காரணமாக வலி. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறவில்லை.
போர் நிறைவுக்கு வந்த பின்னரும் சிறீலங்கா படையினர் உயர் பாதுகாப்பு வலயம் எனக்கூறி இந்தப் பகுதியில் மக்களை மீளக்குடியமர அனுமதிக்கவில்லை.
அப்பிரதேச மக்கள் தங்களை சொந்த இடங்களில் மீளக் குடியேற்றுமாறும் சிறீலங்கா படையினர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைளை முன் வைத்தும் உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்து தீர்ப்புக்கள் வழங்கிய நிலையிலும் சிறீலங்கா படையினர் பொது மக்களின நிலங்களையும் இருப்பிடங்களையும் மீள வழங்கவில்லை.
இந்நிலையில் உயர் பாதுகாப்பு வலய எல்லை கம்பி வேலிகள் திடீரென அகற்றப்படத் தொடங்கியிருக்கின்றமை இப்பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஜெனீவாவில் நேற்று ஆரம்பமாகியுள்ள மனித உரிமை பேரவை கூட்ட தொடரில் இம்முறை சிறீலங்காவுக்கு எதிராக பலமான பிரேரணை முன்வைக்கப்படுள்ள நேரத்தில் உயர் பாதுகாப்பு வேலிகள் அகற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.