தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மண்ணுக்காக மரணித்தவர்கள்

உரிமைப் போரில் உணர்வுடன் கால்பதித்த, பொறியியல் பீட மாணவன் கப்டன் முத்துசாமி, மருத்துவ பீட மாணவன் லெப். சுதர்சன்.
தமிழ்த்தேசியஇனத்தின் இழந்த தாயக மீட்பிற்கான போராட்டத்தின் கண்ணுக்கெட்டிய கால இடைவெளியில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உட்பட்ட எமது மக்களை இழந்திருக்கின்றோம்.
ஒவ்வொருவருடைய இழப்பும் எமக்குப் பேரிழப்பாகயிருந்தபோதும் விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியில், எமது இளைய தலைமுறையினர் வாழ்வும் வளமும் எதிர்காலத்தில் எமது இனத்தின் தனித்துவத்தோடு அமைந்ததாக இருக்குமென்ற எண்ணம் எமது மக்களையும் ,இளையோர்களையும் போராட்டத்தின்பால் முழு வீச்சாகப் பயணிக்க வைத்தது.
தான்சார்ந்த தேசிய இனத்தின் விடுதலையில் பங்கெடுத்து தமது பிறப்பின் அர்த்தத்தை புரிய வைத்த தற்கொடையாளர்களோடு ஒப்பிடும்போது நாம் என்ன செய்துவிட்டோம் என்று எண்ணத் தோன்றுகின்றது.

மண்ணுக்காக மரணித்தவர்கள் தம் வாழ்வை அர்ப்பணித்து தமிழ்த் தேசியம் வாழ வழிசமைத்தார்கள். தமது குடும்பத்தின் வாழ்வு மேம்பாட்டை விட ஒட்டுமொத்த தமிழ் குடும்பங்களின் வாழ்வு மேம்பாட்டை கொள்கையாகக் கொண்டவர்கள். இவ்வாறனவர்களின் குறுகிய கால வாழ்வு எமது எதிர்காலச் சந்ததிக்கு படிக்கின்ற பாடமாக இருக்கவேண்டும் என்பது என்போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஏக்கமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதைலைப் புரட்சி வாதிகளின் எழுச்சியினால் உந்தப்பட்ட இளையோர்கள் பலராக இருந்த போதும் உச்சமான தற்கொடையில் தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்கு முகம்கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்பதில் தமிழ்த் தேசியம் நினைவில் கொள்வதை அண்மைக்கால சம்பவங்களும் அதன் மூலம் வெளியிடப்படும் செய்திகளும் தெரிவிக்கின்றன.
1983 ம் ஆண்டு யூலை சிங்களப் பேரினவாதத்தினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு தமிழ் இளைஞர்களை தமிழீழ விடுதலைப் புரட்சி வாதிகளாக மாற்றியதை கடந்த முப்பது வருட காலம் எமக்கு காட்டி நிற்கின்ற வேளையில், மட்டக்களப்பில் இக்காலத்தில் விடுதலைப் புரட்சிவாதிகளாக மாறியவர்களும், பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை மேற்கொண்டவர்களுமான பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவன் கப்டன். முத்துச்சாமி (முரளிதரன் ) களுவாஞ்சிக்குடி, யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன்,லெப். சுதர்சன் (சிவகுருநாதன்) ஆரையம்பதி, ஆகியோரின் தற்கொடையை கொண்டு முன்னிறுத்தி இக் கட்டுரையை வரையமுற்படுகின்றோம்.

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பல்வேறு தரப்பட்டவர்கள் இருந்தபோதும் இவர்கள் இருவரும் உயர்கல்வியில் இருந்துகொண்டு இனப்பற்றோடு, இன அழிப்பை தடுத்து நிறுத்தி தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது போர்க்கருவி ஏந்திய போராட்டமே என்பதில் நம்பிக்கை கொண்டதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டனர்.
மூதூர், கூனித்தீவு என்னும் ஊரில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் முகாம் 28 .06 .1987 நாள் அன்று அதிகாலை வேளையில் சிங்கள இராணுவத்தினரின் சுற்றி வளைப்புத் தாக்குதலுக்கு உட்பட்டது. இச் சம்பவத்தில் மூதூர் கோட்டத்தளபதி மேஜர்.கயேந்திரன் கப்டன்.முத்துசாமி, லெப். சுதர்சன் உட்பட ஒன்பது பேர் வீரச்சாவடைந்தனர். இதனால் மட்டக்களப்பு மாவட்ட கல்விச் சமூகமும், விடுதலைப் போராளிகளும் ,தமிழ்மக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் மீளாத் துக்கத்தில் ஆழ்ந்திருந்தனர் .தம்முடன் பயின்ற மாணவர்களான இவர்கள் சாதிக்க வேண்டியதும், மக்களை வாழவைக்க கல்வியைப் பயன்படுத்த வேண்டியதும் எதிர்காலத்தில் அதிகம் இருந்தும், இவர்களின் இழப்பு மாணவர் சமூகத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் மிகுந்த மனவேதனையையும் உண்டுபண்ணியிருந்தன.
தாங்கள் கல்வியில் மேம்பாடடைந்து, காலம் கை கூடினால் தமிழ்மக்களின் விடுதலைக்காக ஏதாவது செய்யலாம் என்ற நிலையில் பலர் இருக்கின்றபோது உயர் கல்வியிலிருந்த இவர்கள் உடன் களத்தில் இறங்கியதற்கு சிங்களப் பேரினவாதத்தின் கடும்போக்கே காரணமாக விருந்தன. இவ்வாறு உணர்வான,கல்வியில் சிறந்தவர்கள் தம்மை இழந்து தமிழீழ விடுதலைக்கு பலம் சேர்த்துள்ளனர்.
அறிவில் கூர்மையான கப்டன்.முத்துசாமி மிகவும் எளிமையான வாழ்வு முறையை போராளி நிலையில் மேற்கொண்டவர். ஊர்களால் சூழப்பட்ட மட்டக்களப்பில் ஊர்மக்களின் வாழ்வோடு ஒன்றித்து ஒரு போராளியாகத் தென்பட்ட முத்துசாமி தான் தங்கியிருக்கின்ற ஊர்களில் அம்மக்களின் அன்புக்குரியவராகக் காணப்பட்டார்.இவரைப்பற்றி ஒரு மூத்த போராளி குறிப்பிடுகையில், முரளிதரன் என்னும் பெயரைக் கொண்ட இவர் முத்துசாமி என்ற பெயரை தான் விரும்பியே பெற்றுக்கொண்டார். என்றும் ஊர் ஒன்றித்த மக்களோடு வாழ்வில் அளப்பெரிய மகிழ்ச்சி கொண்டிருந்தார் என்றும் தெரிவித்தார்

இந்தியாவில் விடுதலைப்புலிகளின் மூன்றாவது பாசறையில் போர்க்கல்வி உட்பட்ட அனைத்துப் பயிற்சிகளையும் பெற்றுக்கொண்ட கப்டன் முத்துசாமி அவர்கள் மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் முதல் பாசறை ஏற்படுத்தப்பட்ட போது, அறிவியல் போராளியான கப்டன் முத்துசாமி அவர்களுக்கு போர்க்கல்வியை ஊட்டும் பயிற்சி ஆசிரியர் என்ற பணியை தளபதி அருணா கொடுத்திருந்தார்.
இப்பாசறையின் முடிவுக்குப் பின்னர்தான் இம்மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களும் அதிகப்பட்டிருந்தன.. இப்பாசறையை ஆரம்பிப்பதற்கு முன்னர் 1985 ம் ஆண்டு காலப்பகுதியில் தளபதி அருணா ,தளபதி குமரப்பா ,தளபதி சொர்ணம் ,மூத்த போராளி நியுட்டன், மற்றும் கப்டன் முத்துச்சாமி, கப்டன் ஜிம்கலி, கப்டன்.கரன் ,லெப்.ஜோன்சன் (ஜுனைதீன்) லெப்.ஜோசெப், லெப்.கஜன், லெப்.உமாராம், லெப். ரவிக்குமார், லெப் கலா, லெப் அரசன், லெப். ஈசன், லெப்.சகாதேவன்,லெப்.பயஸ், லெப்..புவிராஜ் ஆகியோர் தலைவரின் பணிப்பின்படி மட்டக்களப்புக்கு வந்திருந்தனர். இவர்களின் வருகையோடு மட்டக்களப்பில் சிங்களப்படைகளுக்கெதிரான தாக்குதல்களும் தீவிரப்பட்டன.
இம்மாவட்டத்தின் முதல் மாவீரர், மூத்த போராளி லெப்.பரமதேவா அவர்களின் வீரச்சாவைத்தொடர்ந்து தளபதி அருணாவின் வருகை அமைந்திருந்தது. இவர்கள் வரும்போது மட்டக்களப்பில் குறிப்பிட்ட சில போராளிகள் மாத்திரம் தங்கியிருந்தனர். இவர்களில் மட்டக்களப்பு -அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ், அம்பாறை மாவட்டத் தளபதி டேவிட் போன்றவர்கள் பொறுப்பிலும், செயல்பாட்டிலும் இருந்தனர்.
1983 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இலங்கைத்தீவில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்பினைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர்கள் பலர் விடுதலைப் புரட்சிவாதிகளாக மாறியிருந்த போது, பொறியியல் பீட மாணவனான களுவாஞ்சிக்குடி ஊரைச் சேர்ந்த முரளிதரன் அவர்களும், தமிழ்மக்களின் விடுதலைக்கும்,பாதுகாப்புக்கும் தன்னால் இயன்றதைச் செய்யவேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடாக சிலர் இணைந்து உருவாகிய “கிழக்குக் குழுவில்” முக்கிய பங்காளராக செயல்பட்டதன் மூலமாக தனது விடுதலைப் பயணத்தைத் தொடங்கி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

29 .06 .1960 அன்று தாய் மண்ணில் பிறந்த முரளிதரன் ஆரம்ப கல்வியை தான் பிறந்த களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சரஸ்வதி வித்தியாலயத்திலும், பின்பு பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்திலும் மேற்கொண்டார். மிகவும் புத்திசாலி மாணவனான இவர் க. பொ .த .உயர் வகுப்பை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கணிதபிரிவில் பயின்று பேராதனை பல்கலைக் கழக பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி கல்வியைக் மேற் கொண்டிருந்த வேளையில் 1983 ம் ஆண்டு யூலை இனக்கலவரத்தின் போது பாதிக்கப்பட்டு தாய் மண் திரும்பிய வேளையில் தமிழ் மக்களின் அழிவையும் பாதுகாப்பையும் எண்ணி மிகவும் மனவேதனை கொண்டிருந்தார். இதனால் தன் இன மக்களுக்கான விடுதலையும், பாதுகாப்பும் முக்கியமெனக்கருதி, கல்வி மேம்பட்டைத் துறந்து தம்மக்களின் எதிர்காலத் தலைமுறையின் மேம்பாட்டு வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்து தமிழீழ விடுதலைக்காக புறப்பட்டார்.

தொடரும்…….

 

Comments
Loading...