தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தீர்மானம் நீர்த்துப்போகுமாயின் படைகளின் அடாவடிகள் அதிகரிக்கும் என மக்கள் அச்சம்.

.protest-in-vali-north-150-news

ஜெனிவா தீர்மானம் வலுவிழந்தால் அல்லது அனைத்துலக விசாரணையினை வலியுறுத்தாவிட்டால் சிறிலங்கா படைகளின் அடாவடிகள்,சிங்கள குடியேற்றங்கள், காணிப் பறிப்புக்கள் என்பன அதிகரிக்கும் என வலிவடக்கு நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க தீர்மானத்தில் சர்வதேச விசாரணை இல்லை என்று தெரிந்துகொண்டதுமே வலி.வடக்கில் படைகளின் உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 6 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் அனைத்தும் சிங்களஅரசாங்கத்திற்குரிய காணிகள் என்று படைகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

அதேவேளை இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் இடம்பெறாது என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். நலன்புரி நிலையத்தின் தலைவர்கள் மற்றும் மீள்குடியேற்ற குழுவின் பிரதிநிதிகளுடன் வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கிவாழ்ந்துவரும் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் யாழ்.காங்கேசன்துறை படைமுகாமில் படைகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே 515 ஆவது பிரிகேடியர் ஈஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த படைஅதிகாரியின் மேற்படி கருத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த நலன்புரி நிலையங்களின் தலைவர்களும் மீள்குடியேற்றக் குழுவின் பிரதிநிதிகளும் படையினருடன் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

வலி. வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இதுவரைகாலமும் கூறிய படையினர் ஏன் இப்பொழுது இவ்வாறு கூறுகின்றனர் என்பது எமக்குத்தெரியும்.

ஜெனிவாவில் தற்போது நடந்துவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானம் வலுவிழந்தால் மக்களின் காணிகளை படைகள் விடுவிக்கத்தயாரில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என்று படைகளுடன் முறண்பட்ட பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.

Comments
Loading...