தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்திலிருந்து நாடு  திரும்பும் அகதிகளுக்குஅனைத்து உதவிகளையும் வழங்க வேண்டுமென கோரிக்கை..

தமிழகத்திலிருந்து நாடு  திரும்பும் அகதிகளுக்கு விசேட செயற்திட்டங்களினூடாக அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டுமென இலங்கை நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் யாழ் மாவட்டச் செயலகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பில் நாடாளுமன்ற நிதிக்குழுவின் மக்கள் கருத்தறியும் கலந்துரையாடலொன்று நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ருள்ளது.

இதன்போதே  மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து லட்சக் கணக்கான மக்கள்  தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர்.

யுத்தத்தின் பின்னராக தமது சொந்த நாட்டிற்குத் திரும்பி வருகின்ற மக்களுக்கான அடிப்படைய வசதி வாய்ப்புக்கள் முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என தாயகம்  திரும்பிய மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள  1500 பேருக்குமான அடிப்படை வசதிகள் இதுவரையில் முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர்களுக்கான அடிப்படை வசிதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவில்லை என யாழ் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

தற்போது தாம் வந்திருக்கின்ற நிலைமைகளைப் பார்த்தே ஏனையவர்களும் நாட்டிற்கு மீளவும் வருவதற்கு தயாராக இருக்கின்றனர்.

இந்த நிலையில் அவர்கள்  வந்து குடியேறுவதற்குரிய வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசின் நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அந்த மக்கள் கேட்டுள்ளனர்.

அதற்கமைய அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தமிழகத்திலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு விசேட செயற்திட்டங்களை வகுத்து அதிக நிதியை ஒதுக்க வேண்டுமென்று  நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் யாழ்மாவட்ட செயலகம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...