விரைவில் இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாததை உறுதிப்படுத்துவது தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட ஆணையாளர் பப்லோ டி கிரீப்புடன் இணைந்து இந்த விசேட செயலணி செயற்படும் என தெரியவருகிறது. விசேட செயலணியின் ஆலோசனை செயற்பாடானது பாதிக்கப்பட்டோரை மையப்படுத்தியதாகவும், மூன்று மாதங்களில் நிறைவடையக்கூடியதாகவும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட செயலணியின் தலைவராக மனோரி முத்தெட்டுவேகம நியமிக்கப்பட்டுள்ளதுடன் செயலாளராக கலாநிதி பாக்கிய ஜோதி சரவணமுத்து செயற்படவுள்ளார்.
இந்த விசேட செயலணியின் ஏனைய உறுப்பினர்களாக காமினி விஜயங்கொட, பேராசிரியர் சித்திரலேகா மௌனகுரு, விசாகா தர்மதாச, தர்மசிறி பண்டாரநாயக்க, டாக்டர் பர்ஸானா ஹனிபா, சாந்த அபிமானசிங்கம், விராக் ரஹீம், பேராசிரியர் தயா சோமசுந்தரம் மற்றும் கமீலா சமரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி, மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாததை உறுதிப்படுத்துவது தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட ஆணையாளர் பப்லோ டி கிரீப் அடுத்தவாரம் இலங்கை வரவுள்ள நிலையில் இந்த விசேட செயலணியானது அவருடன் இணைந்து பணிகளை முன்னெடுக்கவுள்ளது.
இந்த விசேட செயலணியின் வேலைத்திட்டங்கள் ஏற்கனவே வரைபுபடுத்தப்பட்டுள்ளன. இரண்டு கட்டங்களாக இந்தவிசேட செயலணி ஆலோசனைகளையும் கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளது.
சிறுவர்கள், படையினர், அங்கவீனமான போராளிகள், விதவைகள், முன்னாள் சிறுவர் போராளிகள், உள்ளிட்ட தரப்பினருடன் இந்த செயலணியானது விசேட கலந்துரையாடல்களையும் நடத்தவுள்ளது.
ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட வரைபு திட்டத்திற்கு அமைவாக ஆலோசனை செயற்பாடானது பாதிக்கப்பட்டோரை மையப்படுத்தியதாகவும், மூன்று மாதங்களில் நிறைவடையக்கூடியதாகவும், இருக்குமென தெரிவிக்கப்படுகிறது. நல்லிணக்கம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவிற்கு இந்த செயலணி தமது பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளது.
இந்த ஆலோசனைகளும் கலந்துரையாடல்களும் நிறைவடைந்த பின்னரே உள்ளகவிசாரணை குறித்த இறுதி வடிவம் அமைச்சரவைக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விசேட செயலணிக்கு ஒரு செயலகத்தை அமைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் தற்போது பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அங்கு பாதிக்கப்பட்ட மக்களுடனும் வடக்கு மாகாண சபையினருடனும் பேச்சு நடத்தியிருந்தார்.