இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றவோ அல்லது நாட்டில் அமுல்படுத்தவோ அரசாங்கம் முயற்சித்தால் பாரிய விளைவுகள் ஏற்படும். ஆளில்லா விமானத்தை அனுப்பி மனிதபடுகொலைகளை செய்யும் அமெரிக்காவிற்கு எதிராக மனித உரிமைகள் மீறல் விசாரணைகளை நடத்தி விட்டு ஐ. நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் பேச வேணடும் என்றும் கூட்டு எதிரணி குறிப்பிட்டுள்ளது .
இராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம். பெரேரா நிலையத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டு எதிரணியின் ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறுகையில் ,
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அத்துமீறி செயற்பட்டுள்ளதுடன் இராணுவத்திற்கு எதிராக சர்வதேச குற்றவியல் விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.
எமது இராணுவத்திற்கு எதிரான குறறச்சாட்டுகள் தொடர்பிலான சாட்சிகளை வெளிப்படுத்த மறுக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வெறுமனே அநீதியான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக செயற்படுகின்றமை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதே போன்று எமது நாட்டின் இராணுவத்தின் நிர்வாகத்தில் தலையீடுகளை செய்வதற்கு மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனுக்கு எவ்விதத்திலும் அதிகாரம் இல்லை.
இலங்கை என்பது ஒரு ஜனநாயக நாடு . அதன் இறையாண்மைக்கும் ஐக்கியத்திற்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது என்பது அனுமதிக்க கூடிய ஒன்றல்ல. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் இவ்வாறான நிலை இலங்கைக்கு ஏற்பட வில்லை.
வடக்கு மக்கள் எமக்கு ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என்று அறிந்தும் அங்கு பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தோம். ஒரு போதும் அரசியல் உள்நோக்கத்துடன் செயற்பட்டிருக்க வில்லை. மனித இனப்படுகொலைகளை முன்னெடுக்க கூடிய ஆபத்தான ஆயுதங்கள் ஈராக்கில் இருப்பதாக கூறி அப்போதைய ஈராக் அதிபர் சதாம் ஹுசைனுக்கு எதிரான நடவடிக்கையில் பிரித்தானியா கடுமையாக செயற்பட்டது.
ஆனால் சதாம் ஹுசைன் தண்டிக்கப்பட்டதன் பின்னர் அவ்வாறு ஆபத்தான ஆயுதங்கள் எதுவும் ஈராக்கில் இல்லை என உறுதிப்பட்டதன் பின்னர் பிரித்தானியாவில் பெரும் நெருக்கடியான சூழல் உருவாகியது. இதனை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட ஷில்கொட் விசாரணை குழுவின் அறிக்கை இன்று வரையில் வெளியிடப்பட வில்லை.
அதே போன்று ஆளில்லா விமானங்களை அனுப்பி அமெரிக்கா மேற்கொள்ளும் மனித படுகொலைகளுக்கு அளவே இல்லை. வெறுமனே கவலையை மாத்திரம் தெரிவித்து விட்டு அமெரிக்க மீண்டும் அதே நடவடிக்கையை முன்னெடுக்கின்றது. ஆனால் இலங்கை உள் நாட்டு போரின் பின்னர் பொறுப்புக் கூறும் விடயத்தில் முழு ஈடுப்பாட்டுடன் செயற்பட்டது. அதன் சிறந்த வெளிப்பாடே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளும் அதன் அறிக்கையுமாகும்.
எனவே இலங்கை தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு சர்வதேச விசாரணை முன்னெடுப்பதற்கான தேவைகள் எதுவும் தற்போதில்லை. எவ்வாறாயினும் இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளோம். அதே போன்று பொது மக்களை தெளிவுப்படுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவும் உள்ளோம் என்றார்.