இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் ஆரம்பம்

கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.  இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.  

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற நம்பிக்கையுடனும், உத்வேகத்துடனும் இந்த போட்டியில் களம் காணும்.  கான்பூர் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித்மிஸ்ரா ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களில் புவனேஷ்வர்குமார் இடம் பிடிப்பார். 5 பவுலர்களுடன் களம் கண்டால் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான உமேஷ்யாதவுக்கு இடம் கிடைக்கும்.  பேட்ஸ்மேன் ஷிகர் தவானுக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான்.

துலீப் கோப்பை போட்டியில் இரட்டை சதம் அடித்த புஜாரா நல்ல பார்மில் இருக்கிறார். அவருக்கு ஆடும் அணியில் இடம் கிட்டும். வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா சிக்குன் குனியா நோய் பாதிப்பு காரணமாக இந்த டெஸ்டில் ஆடவில்லை.  இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த தனது கடைசி 10 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்தது கிடையாது. இதில் 9 டெஸ்டில் வெற்றி கண்டது. கடந்த ஆண்டு பெங்களூரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் மட்டும் மழை பாதிப்பால் டிரா ஆனது. டெஸ்ட் வெற்றியை தொடர இந்திய அணி முனைப்பு காட்டும்.   அத்துடன் உள்ளூரில் அடுத்து 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணி அதற்கு அச்சாரமாக வெற்றியுடன் தொடங்கவும், டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தை பிடிக்கும் நோக்கிலும் இந்த போட்டியில் தனது முழு வேகத்தையும் காட்டும்.

ஆடுகளத்தின் தன்மை மற்றும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு ஆகியவை இந்திய அணியின் வெற்றிக்கு வலுசேர்க்கும்.  கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லர் மட்டுமே அனுபவம் வாய்ந்த வீரர் ஆவார். அந்த அணியின் சிறந்த பேட்ஸ்மேனான மார்ட்டின் கப்தில் பயிற்சி ஆட்டத்தில் ரன் எடுக்க முடியாமல் திணறியது நியூசிலாந்து அணிக்கு சுணக்கத்தை ஏற்படுத்தலாம். அத்துடன் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி நாடு திரும்பியதும், ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் காயம் காரணமாக முதல் ஆட்டத்தில் இருந்து விலகியதும் அந்த அணிக்கு பெரிய இழப்பாகும்.

நியூசிலாந்து அணியில் மிட்செல் சான்ட்னெர், மார்க் கிரேக், சோதி ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்களும் ஆடும் லெவனில் இடம் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. அவர்கள் ஆடுகளத்தின் தன்மையை தங்கள் அணிக்கு சாதகமாக்கி கொள்ள முயற்சிப்பார்கள். ஐ.பி.எல். மற்றும் இந்தியாவில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஆடிய அனுபவமும் நியூசிலாந்து அணி வீரர்களுக்கு கைகொடுக்கும்.  நியூசிலாந்து அணி கடைசியாக 1988-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த டெஸ்டில் வெற்றி பெற்று இருந்தது. அதன் பிறகு இந்தியாவில் ஆடிய தனது 14 டெஸ்ட் போட்டியில் ஒன்றில் கூட நியூசிலாந்து அணி வெற்றியை ருசிக்கவில்லை.

இந்த மோசமான நிலையை மாற்ற அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள். இரு அணியிலும் சிறந்த வீரர்கள் இடம் பிடித்து இருப்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.  காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-1 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

 முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச வீரர்கள் வருமாறு:-

இந்தியா: எம்.விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, விராட்கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா அல்லது உமேஷ்யாதவ், அஸ்வின், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமார், அமித் மிஸ்ரா.

நியூசிலாந்து: டாம் லாதம், மார்ட்டின் கப்தில், கனே வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வாட்லிங், மிட்செல் சான்ட்னெர், மார்க் கிரேக், சோதி, நீல் வாக்னெர் அல்லது பிரேஸ்வெல், டிரென்ட் பவுல்ட்.

இந்தியாகனேகிரிகட்சுற்றுப்பயணம்டெஸ்ட்நியூசிலந்துபோட்டிவில்லியம்ஸ்விளையாட்டு
Comments (0)
Add Comment