வலி.வடக்கு உயர்பாதுகாப்பு பகுதியில் உள்ள நடேஸ்வரா கல்லூரி மற்றும் நடேஸ் வராகனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றை மீண்டும் சொந்த இடத்தில் இயங்க வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றுகையில்,
இடம் பெயர்ந்து வாழும் மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள் என ஜனாதிபதி எமது மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளார்.மேலும் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் எமக்கு அளித்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றவேண்டும்.
ஜனாதிபதி கூறிய 6 மாதம் இம்மாத நடுப்பகுதியில் முடிவடைகிறது. ஆகவே இவ் வாரம் ஜனாதிபதியின் பதிலுக்காக நாம் காத்திருக்கின்றோம்.
இப் பாடசாலையின் இந்த ஆரம்ப வைபவத்தின்போது எமது ஆரம்ப கால நினைவுகள் நினைவுக்கு வருகின்றன. இப் பகுதியில் பலபோராட்டங்கள் முன்னெடுத்துள்ளோம்.
வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி பலதரபட்ட போராட்டங்கள், ஊர்வலங்கள் நடாத்தியுள்ளோம். அதுமட்டுமன்றி காணி விடுவிப்பு தொடர்பில் உயர் நீதிமன்றிலும் வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.
இன்றைய சூழலில் எமக்கு சர்வதேச சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதனை நாம் முறையாக பயன்படுத்தவேண்டும். பயன்படுத்தி வருகின்றோம்.
எமது மக்களின் காணிகள் ஒப்படைக்கப்படவேண்டும். இது நடைமுறைப்படுத்தப்படவேண்டும் நாம் அரசுடன் தொடர்ந்தும் பேசுவோம்.
எமது பிரதேசம் எமக்கு சொந்தமாகும். வலிவடக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதேவேளை மயிலிட்டி துறைமுகம் ஆயுத கிடங்கு இருப்பதாக தெரிவிக்கின்றார்கள்.
ஏன்இங்குஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள்? யுத்தம் முடிவுக்கு வந்து 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில் ஆயுதம் இருப்பதாக கூறுவதை ஏற்கமுடியாது.
அணுகுண்டை மாற்றி வைக்கும் நிலையுள்ள காலத்தில் ஆயுதங்கள் இருக்கின்றன என்று மயிலிட்டி பிரதேசத்தை வைத்திருக்காது மக்கள் குடியமர அனுமதிக்க வேண்டும்.
பலாலி விமான நிலையம் பிராந்திய நிலையமாகும் அமையவுள்ளது எனத் திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில் அப்பகுதிகளில் மக்களை மீளக்குடியமர்த்தப்படவேண்டும்.
எமது இளைஞர்கள், யுவதிகள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வேண்டும். இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் இதற்கான தீர்வு கிடைக்கும். இது தொடர்பில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அழிந்துபோன எமது பகுதியை அபிவிருத்தி செய்ய ஒருங்கிணைந்த வேலைத் திட்டம் தேவையாகும். மத்திய அமைச்சர்கள் வந்து போகின்றார்கள். ஏன் வருகின்றார்கள் எனத் தெரியவில்லை.
பல அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களை நாங்களும் தேடவேண்டி இருக்கின்றது.
மீள்குடியேற்ற அமைச்சு கூட எங்களால் தான் அமைச்சர் சுவாமி நாதனிடம் சென்றது. ஆனால் அவர் எங்களுடன் பயணிக்கவிரும்பாது வேறு வழியில் செல்ல பார்க்கின்றார்.
அழிந்துபோன எமது பகுதியை அபிவிருத்தி செய்ய உலக நாடுகளுடன் இணைந்து ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். மத்திய அமைச்சர்கள் வருகிறார்கள். அவர்கள் அதனை செய்கிறேன் இதனைச் செய்கிறேன் என கூறி செல்கின்றார்கள் அவர்கள் அவ்வாறு செய்யமுடியாது என்றார்.