“சார்க்” மாநாட்டுக்கு பாகிஸ்தான் பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்கா ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்ட வரவேற்பு மற்றும் இருநாடுகளுக்கிடையேயான எட்டு உடன்படிக்கைகள் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஸ்ரீலங்கா ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கைக்கும் – பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்டகால நட்புறவு உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் பாகிஸ்தான் பிரதமர் இங்கு விஜயம் செய்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
எமது அரசும் நாட்டு மக்களும் இந்த விஜயத்தை கௌரவத்துடன் வரவேற்கின்றோம். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் வழங்கிய ஆதரவையும், உதவிகளையும் நாம் ஒரு போதும் மறக்கமாட்டோம். இதனை எமது அரசாங்கமும் நாட்டு மக்களும் கௌரவத்துடன் நினைவு கூருகின்றோம்.
அதே போன்று ஐ.நா. சபையிலும், ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவிலும் ஐ.நா.வுக்கான பாகிஸ்தானிய நிரந்தரப் பிரதிநிதி இலங்கைக்கு வழங்கிய ஆதரவை மறக்கமாட்டோம். அதற்காக என்றும் நன்றியுடையவர்களாய் இருப்போம்.
இவ்வாறு இரண்டு நாடுகளுக்கிடையேயும் வலுவான நட்புறவு நிலவி வருகின்றது. இன்று எமது நாட்டுக்கு பாகிஸ்தான் பிரதமர் வருகை தந்தமை பெருமைக்குரியதாகும். கடந்த ஆண்டில் நான் பாகிஸ்தானுக்கு விஜயத்தை மேற்கொண்டபோது இரு தரப்பினருக்கிடையே பல நட்புறவு உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன. அவற்றை நடைமுறைப்படுத்துவதில் நாம் அக்கறையுடன் செயல்படுகின்றோம்.
அதேபோன்று இன்று இரு நாடுகளுக்கிடையே 8 உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இவையணைத்தும் நடைமுறைப்படுத்தப்படும். அடுத்த சார்க் மாநாடு பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளது. இதற்கான அழைப்பை பிரதமர் விடுத்தார். அதனை ஏற்றுக் கொள்கிறோம்.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவுகள் வலுப்படுத்தப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.