தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அக்காலம் உனக்குள் அடைக்காக்கிறது அறிவேன் நான்! பொன்.காந்தன்

ltte-woman-Oviyam

கண்ணிலந்த அந்த மின்னலினை
காணேன் கண்ணே
உன் காலடியில்
மீண்டுமந்த நரகங்கள்.
என்ன சொல்லி உன் நாளை பாடிடுவேன்
ஏனுந்தன் வாசலிலே சோகங்கள்.

ஈன்று உந்தன் மடிமேலே
வருடிவிட்டாய்
ஈழத்தை என் நாவில் ஊட்டிவிட்டாய்
காந்த விழி கொண்டும்
கவிதை தந்தாய்
என் கனவெல்லாம் செதுக்கிவைத்து
பறந்து நின்றாய்.

புல்லரிக்க மண் மீது பயணித்தாய்
பூக்களுக்கு புது வாசம் கொடுத்துவிட்டாய்
வெண்பனியும் சூடாக வெளியில் வந்தாய்
வேதங்களை உனக்காக மாற வைத்தாய்
சோதியா சுடராக நிமிர கண்டோம்
மாலதி மலைபோல திரளக்கண்டோம்
சுந்தரிகள் அணியாக செல்லக்கண்டோம்
வானதிகள் களமாடி வெல்லக்கண்டோம்
கஸ்தூரி கவி வாளை வீசக்கண்டோம்
காலமே உனதாக மகிழ்ந்து நின்றோம்.

சாதி மதம் கடந்து
வென்று வந்தாய்
உன் சாவில் பல விழிகளினை
திறந்து வைத்தாய்
பாதி உனக்கென்று பரிசளித்தாய்
என் பாசக்கொடியெல்லாம் பூத்து நின்றாய்
ஆதி ஊமைகளை பேசவைத்தாய்
அகன்ற வெளிகளிலே சஞ்சரித்தாய்
மீதி மிச்சமின்றி போய் வெடித்தாய்
மேனி சந்தணமாய் வீசி நின்றாய்

சோதி வடிவானவாளே!
உன் சோதனை காலமிதோ
மீண்டு மலராலே பாடிடவோ
மேனி வளைவுகளை தேடிடவோ
நாணி நீ வந்து மயங்கிடவோ
என் நயத்தை உன் மேலே கொட்டிடவோ
வீணை எனவாக்கி மீட்டிடவோ
நெகிழ்ந்து ரதியோடு கரைந்திடவோ
பாதி விழி செருக பருகிடவோ
உன் பாதம்வரையெல்லாம்
கிறங்கிடவோ
ஊதற்காற்றிடையே உருகிடவோ
உனை கட்டில் புளுவாக்கி
காட்டிடவோ

விட்டில் எனவாக்கும் எனை
நீ எழுந்து வெட்டி வீழ்த்தாயோ
விலங்கு பூட்டாயோ
கட்டியிழுத்து கழுவில் ஏற்றாயோ
தொட்டுத் தோளிருந்த சூரியனை
கொட்டி முழங்காயோ
உன் கோதண்டத்தை காட்டாயோ
முட்டி வழியுதடி கண்ணீர்
உனை பார்க்க முடியவில்லை பெண்ணே!

கட்டியிழுக்கின்றது இருளுன்னை
மொட்டு மலருமுன்னே
முரட்டுக்கரங்களுக்குள்
சிக்கி சிதைகின்றது சீதைகளின் வாழ்வு
செட்டை விரித்து சிரித்து நீ பறந்து
எங்கள் கட்டை அவிழ்த்து
கலியுகத்தை கலைத்து
எங்கள் வெட்டை வெளியெங்கும்
பெட்டைகளின் வீரியத்தை நட்டு
அட்டை போல் சுருளாது
நெட்டை நெடும்பனையாய்
அகன்று மதாளித்த வாகையாய்
கொற்றவை தேவியாய்
கும்பிடும் சரஸ்வதியாய்
குலத்தை ஆள்வாயெனும் கனவை
நரிக்குலமும்
நஞ்சுக்கூட்டமும்
வெட்டி சரித்து கொக்கரிக்கும் காலத்தில்
கோதை உனை கண்டு
குமுறி அழுகிறேனடி!

அன்னை தெரேசா
எம்மையும் ஆட்கொண்டாள்
வங்கரி மாத்தாவை
எங்கள் வாசல் வரவேற்றது.
அழகி டயானா அணைந்தபோது
எங்கள் இதயக்கோட்டைகள் இடிந்துபோனது
தலித் தங்கைகளை
நாட்டு நாய்கள் தின்கிறபோது
கொதிக்கிறது எங்கள் நெஞ்சுக்கூடு
கல்பனாசாவ்லாவுக்காய் எங்கள் உதிரம் துடித்தது.
மாக்கிரேட் தட்சர் அன்னை இந்திரா
மடிந்த போதெல்லாம் எங்கள் மனம் கலங்கிப்போயிற்று
மணிப்பூரின் இரும்பழகி சர்மிலாவுக்காய் சதா துடிப்பது நம் மனசு

ஈரத்தால் நிறைந்திருக்கும்
இரக்கத்தால் எழுந்திருக்கும்
இதயத்தால் கனிந்திருக்கும்
எங்கள் தாய் நிலத்தில்
அன்புத் தோழிகளை குதறி எறிந்ததும்
அதை கூடி நின்று பார்த்ததும்
அவள் கூவி அழைத்து கும்பிட்டபோதும்
இரங்காது இருந்ததும்
அதற்காய் வருந்தாது
வரைவிலக்கணங்களும் தேடுவதும் யார் யார்
என்ன பெயரிட அவர்களுக்கு
என்ன மிருகங்கள் அவை.
இதுகாலும் இல்லை பூமியில்!

எல்லாச்சிகரங்களின் வேரும்
இங்கேயும் இருந்தது
அதை பற்றிப்பிடித்தேறிக்கொண்டிருந்திருந்தது
எங்கள் பவளக்கொடிகளும்தான்
காவலரண் சுவர்களில்
களைப்பாறிய மரங்களில்
பாசறைகளில்
எங்கள் தோழிகள் எழுதிச்சென்ற
காதலையும் கடிதங்களையும்
இறுதி வார்த்தைகளையும் பிரிவின் துயர்களையும்
கனவுகளையும்
இப்பொழுது நினைத்தால் இதயம் கனக்கும்
ஏங்கும்
இனம்புரியா சோகத்தில் வீழும்
இயலாமையில் சாகும்
வஞ்சகங்களை நினைத்து வருந்தும் குமுறும்
இரவு பகலாய் இனத்துக்காய்
எழுந்து நின்ற வெளிச்சங்கள்
இப்பொழுது கதவு தட்டும் ஓசையில்
கலங்கிப்போகின்றன
கடன்காரரா
காணாமல் போகச்செய்யப்பட்ட கணவரா
கற்பழிக்க வருகின்ற கூட்டமா
எங்கிருந்தீர்கள்
எப்பொழுது வந்தீர்கள்
என்ன செய்கிறீர்கள்
எனத் தொடங்கி அந்தரங்கம்வரை
பதிவெடுக்க அலையும் இன்னொரு கூட்டமா
வாழ்வாதார வார்த்தை அலங்காரமா
ஒற்றனா
இப்படி ஓர் இருள்காலத்தை எழுதுகின்ற துரதிஸ்டம்.

சந்தியில் பந்தியில்
பழைய பார்வைகள் திரும்புகின்றன.
முன்னே வராதை முழுவியளம் எல்லாம் தொடங்கிவிட்டன.
அந்தி சாய்ந்து இருளில்
தனியே தெருவில் போகும் பெண்
ஆயிரம் கண்களால் துகிலுரியப்படுகிறாள்.
அபத்தம்
எங்கள் நிலமா இது.
இத்தனையாயிரம் பேரை விடுதலைக்காய்
சத்தியம் செய்து சாக்குழியில் வைத்த
வீர நிலத்திலா இது.
தம்பிகள் பலர் தறுதலைகளாகி
சந்தியில் மதவில் பள்ளிவாசல்களில்
கூடிநின்று குந்தியிருந்து
குதர்க்கமும் ஒரு பெட்டை பிள்ளை போகமுடியாதபடி
அசிங்க வார்த்தைகளும்
எங்கேயோ போகத்தொடங்கிவிட்டது எங்கள் ஈழ நிலம்
எங்கள் ஊர் நீதிமன்றங்கள் நிரம்பி வழிகின்றது
சந்ததிக்காக தானே எங்கள்
சத்திய புத்திரிகள் நித்திரையற்ற
எத்தனையோ இராத்திரிகளை கடந்தனர்

காதல் என்பது வேறு
காமம் என்பது வெறி
சந்திகளில் நின்று தங்கைகளை
கண்களால் கற்பழிப்பது என்பது
உள்ளுறங்கும் ஒரு மிருகத்தின் குணம்
தங்கைகாள் கேள்மின்!
உன் அக்காள் வஞ்சகர் வலை வீழா வடிவரசி
தமிழரசி
தலைகுனியாதவள்
சரித்திரத்தை படைத்துக் காட்டியவள்
ஆணையும் நிமிர வைத்த அங்கயற்கண்ணி
அவளிருந்தபோது
இனத்தாய் எத்தனை அழகா இருந்தாள் அறிவாய்
நீயும் அழகிதான்
உன் தளிர் நடைக்குள் இருக்கும்
பரம்பரை வீரியத்தை ஒருபோதும் உணராமல்
உன் வாழ்வை வரைந்துவிடாதே!
இந்தக்காலத்தை நினைத்து கொஞ்சம் கவலைப்பட பழகு
அம்மாவிடம் கேள்
ஆயிரம் இரகசியம் அவளிடம் உண்டு
எல்லாம் முடிந்துவிட்டது
இதுதான் வாழ்க்கையென்று இடித்துரைப்பாள்
விட்டுவிடாதே
அவளின் கனவுகள் நொருக்கப்பட்ட கதையை கேள்
அவளின் தோழிகளின் கதை கேள்

எங்கள் வண்ணமே!
வருங்கால வாழ்வே!
கண்ணே வரலாற்றின் கைபிடித்து
இந்த நிலத்தில் நீ உலவு
நிச்சயம் நிலவைத்தொடுவாய்
நீண்ட ராத்திரிகள் கண்விழித்து
களங்களில் கானகங்களில் விடுதலை வேள்வி நடத்திய
உன் அக்காளின் கனவு உன் மூலம் நிறைவேறும்.
உருக்கொண்டெழும்
உன் திருவுருவத்தை அடிக்கடி தரிசிக்க பழக
புலியாய் இருந்து கொண்டு புலுனிபோல கிலுகிலுக்காதே
மானாய் இருந்தாலும் கொம்புகளை தீட்டப்பழகு
இக்கால இருள் நின்னொளியால்
ஓர் காலம் விலகவேண்டும்.
அக்காலம் உனக்குள் அடைக்காக்கிறது
அறிவேன் நான்!

பொன்.காந்தன்

Comments
Loading...