Designed by Iniyas LTD
அம்பாறையில் முஸ்லிம்கள் மீது சிங்கள வெறியர்களின் தாக்குதல்! நடந்தது இதுதான்
அம்பாறை நகரில் அமைந்துள்ள ஹாசிம் ஹோட்டலில் திங்கட் கிழமை இரவு 10.10 மணிக்கு சாப்பிடுவதற்கு இரு சிங்கள இளைஞர்கள் சென்றனர். சாப்பாட்டில் இனவிருத்தியைக் கட்டுப்படுத்தும் மருந்து கலந்துள்ளது என்று கூறி ஹோட்டல் பணியாளர்களுடன் தர்க்கப்பட்டனர். வாய்த்தர்க்கம் நீடிக்க 10.30 மணியளவில் அவர்கள் அலைபேசியில் வேறு சிலரை அங்கு அழைத்தனர். 7 சிங்களவர்கள் வரையில் அங்கு வந்தனர்.
அவர்களும் கடைப் பணியாளர்களுடன் தர்க்கப்பட்டனர். அங்கு நின்றிருந்த சிங்கள இளைஞர்கள் மேலும் பலரை அலைபேசியூடாக அழைத்தனர். நேரம் 11 மணியாகும் போது, கடைக்கு முன்பாக 50 க்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். நிலமை மெல்ல மாறத் தொடங்கிளது. கைகலப்பாகி அது கலவரமாக மாறியது. கடையில் பணிபுரிந்த 8 முஸ்லிம் பணியாளர்கள், கடையின் பின்வாசல் ஓடித் தப்பினர்.
சமூக வலைத்தள காணொளி
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
ஹோட்டலின் உரிமையாளர் பர்சித், சிங்களவர்களின் கையில் சிக்குண்டார். ஹோட்டலை முழுமையாக துவம்சம் செய்த சிங்களவர்கள், கடையின் உரிமையாளரின் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர். அந்த வாக்குமூலத்தை காணொலியாக சமூகவலைத் தளங்களில் தரவேற்றியுள்ளனர். ஹோட்டலின் உரிமையாளர், உணவில் இனவிருத்தியைக் கட்டுப்படுத்தும் மருந்து கலக்கின்றது என்று கூறுகின்றார். ஆனால் அந்தக் காணொலியை மிரட்டியே எடுத்தனர் என்று அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் கூறினார்.
குவிந்த சிங்களவர்கள்
ஹோட்டலில் மோதல் நடந்து கொண்டிருக்கும் போது ஹாசிம் ஹோட்டலிருந்து 500 தொடக்கம் 750 மீற்றர் தொலைவில் பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள ரஹிம் ஹோட்டல் உரிமையாளர் பொலிஸாருக்கு இது தொடர்பாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
நேரம் நள்ளிரவு 12 மணியானது. இப்போது பள்ளிவாசல் பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட சிங்களவர்கள் அங்கு குவிந்து விட்டனர். அவர்கள் கைகளில் அலவாங்குகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்துள்ளன. பள்ளிவாசலைத் தாக்கத் தொடங்கினர்.
நகரத்தில் தாக்குதல்
பள்ளிவாசலின் சுற்று மதில் தரைமட்டமாக்கப்பட்டது. பள்ளிவாசல் முன்பாக இருந்த ரஹிம் ஹோட்டல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. நகரில் இருந்த மேலும் இரண்டு முஸ்லிம் வர்த்தக நிலையங்களும் அடித்து நொருக்கப்பட்டன.
வேறு மாவட்டங்களிலிருந்து அம்பாறைக்கு தொழில் நடவடிக்கையாக வரும் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் உள்ள தங்குமிட அறைகளிலேயே தங்கியிருப்பது வழமை. அவர்கள் தொழிலுக்காக கொண்டு வரும் வாகனங்கள் பள்ளிவாசலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும். பள்ளிவாசலை தாக்கிய காடையர்குழு, அங்கிருந்த வாகனங்களையும் அடித்து நொருக்கியது.
பள்ளிவாசலுக்குள் இருந்த வேறு மாவட்ட முஸ்லிம்கள் திக்குத் திசை தெரியாமல், பள்ளிவாசலின் பின்பாக இருந்த அடர் காட்டுக்குள் ஓடித் தப்பினர். இவர்களை, நேற்று அதிகாலை 5 மணிக்கு அங்கு சென்ற பிரதி அமைச்சர் ஹலீஸ் தலைமையிலான குழுவினரே அவர்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர்.
2 மணிநேரத்தில் முடிவு
காடையர் குழுவின் வெறியாட்டம் இரண்டு மணி நேரத்தில் முடிந்தது. நேற்று அதிகாலை 1 மணிக்கு அண்மையாகவே பொலிஸாரின் தலைகள் தெரியத் தொடங்கின. அதன் பின்னரே நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலையிலிருந்து பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
பள்ளிவாசல், தாக்கி அழிக்கப்பட்ட கடைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரில் அமைந்துள்ள மாவட்டச் செயலகத்தில் பணியாற்றும் முஸ்லிம் அலுவலர்கள் அச்சம் காரணமாக நேற்றுக் கடமைக்குச் செல்லவில்லை. நேற்று முன்னிரவு வரையில் அந்தப் பகுதியில் பதற்றம் இன்னமும் தணியவில்லை.
நடந்தது என்ன?
அம்பாறை நகரில் உள்ளது ஹாசிம் ஹோட்டல். நேற்று முன்தினம் திங்கட்கிழமை நள்ளிரவு 10 மணிக்கு இரண்டு சிங் கள இளைஞர்கள் உணவுண்ணச் சென்றனர். முட்டை ரொட்டி வேண்டும் என்று கேட்ட அவர்களுக்கு அது வழங்கப்பட்டது.
தொட்டுச் சாப்பிட ஆனம் (குழம்பு) கேட்டனர். பணியாளர்களும் வழங்கினர். குழம்பை முட்டை ரொட்டியில் ஊற்றும்போது, குழம்பிலிருந்து வெள்ளை நிறத்திலான சிறிய கட்டி விழுந்தது. அந்தக் கட்டி இனவிருத்தியைக் கட்டுப்படுத்தும் மருந்து என்று முரண்பட ஆரம்பித்தனர் அந்த இரண்டு சிங்கள இளைஞர்களும். கடையில் இருந்த பணியாளர்களும் வாய்த் தர்க்கத்தில் ஈடுபடட்டனர்.
“குழம்பு இறுக்கமாக இருப்பதற்காக கோதுமை மா பயன்படுத்துகின்றோம். கோதுமை மா கரையவில்லை. அதுவே குழம்பிலிருந்து வீழ்ந்தது”- என்று ஹோட்டல் உரிமையாளர் பர்சித் இளைஞர்களுக்கு விளக்க முயன்றார். அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர். இதுவே வாய்த்தர்க்கம் உருவாகக் காரணம். பின்னர் அது கலவரமாக மாறியது.
அமைதி காத்த பொலிஸ்
அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசலிலிருந்து 500 மீற்றர் தொலைவிலேயே பொலிஸ் நிலையம் உள்ளது. ஆனால் இத்தனை சம்பவங்களும் முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு, எல்லாம் முடிந்த பின்னரே பொலிஸார் வெளியே தலைகாட்டினர் என்று அந்தப் பகுதி மக்கள் குற்றஞ் சுமத்தினர்.
அம்பாறை நகரிலுள்ள ஹாசிம் ஹோட்டலில் வாய்த்தர்க்கம் நடைபெறும் போதே – நேற்று முன்தினம் திங்கட் கிழமை இரவு 10.30 மணியளவில் பொலிஸாருக்கு தொலைபேசியூடாகத் தகவல் வழங்கப்பட்டது. அதன் பின்னரே ஹாசிம் ஹோட்டல் தாக்கப்பட்டது.
நள்ளிரவு 12 மணியளவில், பேருந்துகள், மோட்டார் சைக்களில் வந்திறங்கிய சுமார் 500 இற்கு மேற்பட்டோர் பள்ளிவாசல் உள்ளிட்ட ஏனைய இடங்களைத் தாக்கினர்.
இவை இவ்வளவும் நடைபெறும்போது பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவேயில்லை.
எல்லாம் முடிந்த பின்னரே பொலிஸார் அங்கு வந்தனர் என்று கூறினர் அந்தப் பகுதி மக்கள் இது தொடர்பில் யாரும் முறைப்பாடு செய்யவில்லை என்றும், இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போதே தானும் அறிந்து கொண்டேன் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
நன்கு திட்டமிட்ட தாக்குதல்
அம்பாறையில் நள்ளிரவில் இடம்பெற்ற கலவரம் திடீரென வெடித்த ஒன்றல்ல. இது மிக நீண்ட காலமாகவே திட்டமிடப்பட் டது என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள். அதை நியாப்படுத்தி 5 காரணங்களையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அம்பாறை நகரில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுமக்கள் முன்னணியே வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற அந்தக் கட்சியின் நகர சபை உறுப்பினர், நகரில் உள்ள பள்ளிவாசலின் சுவரில் சுவரொட்டி ஒன்றை ஒரு வாரத்துக்கு முன்னர் ஒட்ட முயன்றுள்ளார்.
பள்ளிவாசல் நிர்வாகத்தில் உள்ள இளைஞன், பள்ளிவாசல் சுவரில் ஒட்ட வேண்டாம் என்று கேட்டுள்ளான். அதனையும் மீறி சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதை அந்த இளைஞன் கிழித்தெறிந்து அகற்றியுள்ளான்.
இந்தச் சம்பவத்தையடுத்து, நகர சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்படவுள்ள மகிந்த அணி உறுப்பினர் சுவரொட்டியைக் கிழித்தெறிந்த இளைஞனைத் தேடித் திரிந்துள்ளார். விடயத்தைக் கேள்விபட்ட இளைஞன் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளான். பள்ளிவாசல் மதிலில் எந்தக் கட்சியினதும் சுவரொட்டியையும் நாம் ஒட்டுவதற்கு அனுமதிப்பதில்லை. அதனாலேயே கிழித்தெறிந்தேன் என்று கூறியுள்ளான். அதனை அவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஆனால், நேற்றைய கலவரத்தில் எந்தவிதத்திலும் தொடர்புபடாத பள்ளிவாசல் தாக்கப்பட்டது மட்டுமல்லாமல், பள்ளிவாசலின் சுற்று மதில் முழுவதுமாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல் என்பதற்கு நாம் முதலாவதாக முன்வைக்கும் காரணம்.
அம்பாறை நகருக்கு அருகிலேயே இறக்காமம் பிரதேசம் இருக்கின்றது. அங்கு மாயக் கல்லி மலையில் புத்தர் சிலை வைப்பது தொடர்பில் அந்தப் பகுதி முஸ்லிம் மக்களுடன் நீண்டகாலமாக முரண்பாடு நிலவுகின்றது. இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர்களுக்குச் சொந்தமான இரண்டு கடைகளும் இந்தக் கலவரத்தில் அடித்து நொருக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட தாக்குதல் என்பதற்கு நாம் இரண்டாவதாக முன்வைக்கும் காரணம்.
அம்பாறை மாவட்டம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால் தோல்வியடைந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் தலைமை அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஞாயிற்றுக் கிழமையே சட்டம் ஒழுங்கு அமைச்சராகப் பொறுப்பெடுத்தார். அவர் பொறுப்பேற்று 24 மணி நேரத்தினுள் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கும், ரணிலுக்கும் இடையிலான நெருக்கத்தை குழப்ப மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். திட்டமிட்ட தாக்குதல் என்று நாம் சந்தேகிப்பதற்கு மூன்றாவது காரணம்.
அம்பாறை நகர சபையில் 9 ஆசனங்களைப் பெற்று மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ளது. இதுவும் நாம் திட்டமிட்ட தாக்குதல் என்று சந்தேகிப்பதற்கு நான்காவது காரணம்.
ஹாசிம் ஹோட்டலில் வாய்த்தர்க்கம் இடம்பெறும்போதே பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் சம்பவம் நடைபெற்று முடிந்த பின்னரே பொலிஸார் வந்துள்ளனர். நடத்தப்பட்டது திட்டமிட்ட தாக்குதல் என்று நாம் சந்தேகிப்பதற்கு ஐந்தாவது காரணம் இது என்று அவர்கள் கூறினர்.
அமைதி காக்குமாறு
அறிவுரை
அம்பாறை நகருக்கு அருகிலுள்ள இறக்காமம் பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்றும், எந்தவொரு வன்செயல்களில் ஈடுபடவேண்டாம் என்றும் அங்குள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கி ஊடாக நேற்று அறிவிக்கப்பட்டது.
அம்பாறை நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் என்பன எரியூட்டப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களிடத்தில் இது பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பாறை நகருக்கு அடுத்தாக உள்ளது இறக்காமம்.
இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரது வர்த்தக நிலையங்களும் அம்பாறை நகரில் அடித்து நொருக்கி எரியூட்டப்பட்டுள்ளன.
இதனால் இறக்காமம் பிரதேச மக்களும் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். அந்தப் பிரதேசத்தில் உள்ள சர்சைக்குரிய மாயக்கல்லி மலை புத்தர் சிலையை சேதமாக்க அவர்கள் திட்டமிட்டனர் என்று தகவல் பரவியது.
முஸ்லிம் மக்களை அமைதிகாக்குமாறும், பொறுமையாக இருக்குமாறும், எந்தவொரு வன்செயல்களிலும் ஈடுபடவேண்டாம் என்று அங்குள்ள பள்ளிவாசல்கள் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமுக வலைத்தளங்கள்
ஊடாக பரவும் கருத்துக்கள்
முஸ்லிம் உணவகங்களில் இனவிருத்தியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள், அங்கு தயாரிக்கப்படும் உணவுகளுடன் சேர்க்கப்படுகின்றன என்று கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத் தளங்களில் செய்திகள், காணொலிகள் பரிமாற்றப்படுகின்றன.
இனவிருத்தியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள், பதார்த்தங்களை தாம் தயாரிக்கும் உணவுகளில் உள்ளடக்குகின்றனர். திட்டமிட்ட ரீதியில் தமிழ், சிங்கள மக்களின் இனவிருத்தியை கட்டுப்படுத்துகின்றனர். இதேபோன்று முஸ்லிம் புடவையகங்களில் உள்ளாடைகளிலும் இதேபோன்று இனவிருத்தியைக் கட்டுப்படுத்தும் பதார்த்ததைப் பயன்படுத்துகின்றனர் என்ற கருத்துக்கள் சமூக வலைத் தளங்களில் கடந்த சில மாதங்களாகப் பரப்பட்டு வந்தது.
சிங்களவர்களிடத்தில் மாத்திரமின்றி, தமிழர்களின் சமூகவலைத் தளங்களில் இந்தக் கருத்து தொடர்ச்சியாகப் பரப்பட்டு வந்தது. அம்பாறையில் முஸ்லிம் உணவகத்தில் இதேபோன்றதொரு மருந்து கலக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தே கலவரம் ஆரம்பமானது.
கடைப் பணியாளர்களை
காத்த சிங்களக் குடும்பம்
அம்பாறை நகரில் சிங்களவர்களால் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், நகரிலிருந்த வர்த்தகர்கள் சிலரை தாக்குதலாளிகளிடமிருந்து சிங்களக் குடும்பம் ஒன்றே பாதுகாத்தது.
சிங்களக் குடும்பத்தின் பாதுகாப்பில் இருந்த அவர்கள் நேற்று அதிகாலை தமது ஊருக்குப் பாதுகாப்பாகச் சென்று விட்டனர்.
அம்பாறை நகரில் நேற்று முன்தினம் திங்கட் கிழமை இரவு சிங்கள இளைஞர்களால் பள்ளிவாசல் மற்றும் ஹோட்டல்கள் உடைத்து நொருக்கப்பட்டது. முஸ்லிம் ஹோட்டலில் பணியாற்றிய சிலரை, நகரிலுள்ள சிங்களக் குடும்பத்தினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்று தம்முடன் தங்க வைத்துள்ளனர்.
நகரப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டு, முஸ்லிம்கள் அங்கு வந்த பின்னரே, ஹோட்டல் பணியாளர்கள் சிங்களக் குடும்பத்தின் பாதுகாப்பிலிருந்து வெளிவந்து தமது ஊருக்குச் சென்றுள்ளனர்.
உணவால் கருத்தடை
சாத்தியமில்லாதது
நிரந்தரமாக இனவிருத்தியைத் தடை செய்யும் விதமாகவோ அல்லது கருத்தடை ஏற்படுத்தும் விதமாகவோ எந்தவித மருந்துகளும் இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை.
உணவிலும், உடைகளிலும் அவ்வாறான இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன என்று கூறப்படும் கருத்துக்கள் இனவாத சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டவை.
இவ்வாறு சிறப்பு மருத்துவர் நிபுணர் ஆரியசேன யூகமகே தெரிவித்துள்ளார். இதே கருத்தையே, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் ஒருவரும் ‘உதயன் பத்திரிகையிடம்’ தெரிவித்தார்.
“உணவு, உடையில் கலந்து கருத்தடை, இன விருத்தி இல்லாமல் செய்யப்பட்டமை தொடர்பில் உலகில் இதுவரை எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை.
கருத்தடை மாத்திரைகள் இரண்டு வகையில் உள்ளன. ஒரு நாளுக்கு மாத்திரம் செயற்படும் வகையிலானது ஒன்று. மற்றையது, 72 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் செயற்படும் வகையிலானது.
ஒரு நாள் மாத்திரம் செயற்படும் மாத்திரையை ஒவ்வொரு நாளும் உட்கொண்டாலே கரு உற்பத்தியாவதைத் தடுக்கலாம். இடையில் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு அதனை உட்கொள்ளாது உறவுகொண்டாலும் கரு உற்பத்தியாகலாம்.
அவசர நிலைகளின்போது பயன்படுத்துவதுதான் 72 மணித்தியாலங்கள் இயங்குதிறன்கொண்ட மாத்திரை. இது உணவுடன் உட்கொண்டாலும் குறித்த மணித்தியாலங்களுக்குப் பின்னர் அதன் செயற்திறனை இழந்துவிடும்.”-என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
ஐ.நாவுக்கு
கொண்டு செல்லப்படும்
அம்பாறை முஸ்லிம்கள் மீதான தாக்குதலுக்கு அரசு உடன் பொறுப்புக் கூறல் வேண்டும். இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளை ஜெனீவா மனித உரிமைகள் சபையின் சிறப்புக் கரிசனைக்கு உட்படுத்தும் செயல்முறையில் எமது அமைப்பு தொடர்ந்தும் பயணிக்கும்.
இவ்வாறு யாழ்ப்பாண பன்னாட்டு முஸ்லிம் சமூகம் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதாவது-
அம்பாறை முஸ்லிம்கள் மீதான திட்டமிட்ட இனவாதத் தாக்குதலை யாழ்ப்பாணம்,பன்னாட்டு முஸ்லிம் சமூகம் வன்மையாக கண்டிக்கிறது. இலங்கையின் தேசிய நல்லிணக்கத்தையும் சமாதானச் சூழலையும் சீர்குலைக்கும் திட்டமிட்ட இனவாதச் செயற்பாடாகவே இதனை யாழ்ப்பாணம் பன்னாட்டு முஸ்லிம் சமூகம் நோக்குகிறது.
வன்முறைக்கு காரணமானவர்கள் உடனடியாகக் கைது செய்யவேண்டு. சட்டம் சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் செயற்படுவதை அரசு உறுதிப்படுத்தவேண்டும்
ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் 37 வது கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அரசுக்கு ஏற்புடையதல்ல.
இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்குப் பங்கம் விளைவிக்கும், இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்றான முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படும் இவ்வாறான இனவாதச் செயற்பாடுகளை ஜெனீவா மனித உரிமைகள் சபையின் சிறப்புக் கரிசனைக்கு உட்படுத்தும் செயல்முறையில் எமது அமைப்பு தொடர்ந்தும் பயணிக்கும்.- என்றுள்ளது.