Designed by Iniyas LTD
அரசியலில் வெற்றி தோல்வி சகஜம்! தற்கொலை இதற்கு தீர்வல்ல : விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர் அண்ணாகிராமம் ஒன்றியம், கொங்கராயனூர் தே.மு.தி.க. கிளைச்செயலாளர் சுப்பிரமணி தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோனேன். தற்கொலை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசியலில் தேர்தல் என்பது வரும், போகும். அதில் வெற்றியும், தோல்வியும் எவருக்கும் நிரந்தரமல்ல. அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் வாக்காளர்களுக்கு பணத்தை கொடுத்து, இத்தேர்தலில் பொய்யான வெற்றியை பெற்றிருக்கிறார்கள்.
இதுவே அரசியல் நிரந்தரமல்ல என்பதை தொண்டர்கள் உணரவேண்டும். அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம், இதற்கு தற்கொலை ஒரு தீர்வாகாது.
எனவே தற்கொலையை என்றும் நான் அனுமதிக்கமாட்டேன். இதுபோன்ற தற்கொலை முடிவுகளால் சம்பந்தப்பட்டவர்களின் மனைவி, குழந்தைகள் எப்படிப்பட்ட பாதிப்புகளை அடைவார்கள்? என்பதை சிந்தித்து பார்த்தால், நிச்சயமாக இதுபோன்ற செயல்களில் எவரும் ஈடுபடமாட்டார்கள்.
சுப்பிரமணி, என் மீதும், கட்சியின் மீதும் அளவு கடந்த பற்றோடு இருந்தவர் என்பது எனக்கு நன்கு தெரியும். அவருடைய இழப்பு அவருடைய குடும்பத்திற்கும், கட்சிக்கும் ஈடுசெய்ய முடியாதது. அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இதுபோன்ற தற்கொலை முயற்சியில் யாரும் எந்த காலத்திலும் ஈடுபடவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.