தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இந்தியாவில் எபோலா நோய் தாக்குதல் இல்லை

‘எபோலா’ நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எபோலா நோய் தாக்குதல் இல்லை என்றும், எனவே யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறியுள்ளார்.Ebola

ஆப்பிரிக்காவின் மேற்குப்பகுதி நாடுகளான லைபீரியா, சியரா லியோன், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் ‘எபோலா’ எனப்படும் ஒருவகை உயிர்க்கொல்லி நோய் பரவி வருகிறது. இந்த நோயால் சுமார் 1,000 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் லைபீரியா அரசு அவசர பிரகடனம் அறிவித்துள்ளது. மேலும் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பும் அறிவித்துள்ளது. எபோலா நோய், மேற்கு ஆப்பிரிக்காவை தாண்டி பரவுவது தவிர்க்க முடியாதது என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா. அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை கமிட்டி கூட்டம், ஜெனீவாவில் 2 நாட்களாக நடைபெற்றது. அதன் முடிவில், எபோலா நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.

எபோலா நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து விமானத்தில் வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதிக்க வேண்டும். விமான நிறுவனங்கள், அந்நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கும்போது முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள நாடுகளும், விமான நிலையங்களும் அந்நோயை கண்டறிந்து தடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மற்ற நாடுகள் உதவ முன்வர வேண்டும். என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் மார்கரெட் சான் கூறியுள்ளார்.

இந்தியாவில் எபோலா நோய் தாக்குதல் இல்லை என்றும், எனவே யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறியுள்ளார்.  நோய் தாக்கம் நிறைந்த மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் எபோலா நோய் தாக்கம் இதுவரை இல்லை என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் கூறுகையில், ‘இந்தியாவில் ‘எபோலா’ நோய் இருப்பதற்கான தகவல் எதுவும் இந்த நிமிடம் வரையிலும் இல்லை. எனவே யாரும் பதற்றம் அடைய தேவையில்லை’ என்றார். எனினும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் செய்து வருவதாக கூறியுள்ள அவர், நோய் தாக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் கூறினார்.

Comments
Loading...