தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இருவர்…..சிறப்பு கவிதை..

இன்றைக்கும் நடக்கலாம்
நாளைக்கும் அது நடக்கலாம் – நான் இதை எழுதிக்கொண்டிருக்கும்போதோ, இரவோடிரவாகவோகூட அது நடக்கலாம்

என்றைக்கு நடந்தாலும் எல்லாமே ஒன்றுதானென்றான பின்னர் – அது எப்ப நடந்தாலென்ன????

கட்டையில போகும்வரை கைலாச வாழ்வு வேணுமென்று, அட்டை போல ஊர்ந்தபடி ஆமை வாழ்வு வாழ்ந்துகொண்டு விட்டத்தில அணில் பார்த்து விளக்கமின்றி கிடக்கறீர்கள்…

நீங்கள் நினைத்திருந்தால்
நாங்கள் இன்றைக்கிருக்கின்ற அவலநிலையைப் பார்த்திருக்கத் தேவையில்லை,

நீங்கள் விழித்திருந்தால் நாங்கள் இவ்வளவு இன்னல்களால் அந்தரிக்கத்தேவையில்லை,

நீங்கள் முடித்திருந்தால் நாங்கள் இன்னுமொரு ஆரம்பத்தைத் தேடிப்
போயிருக்கவேண்டியதுமில்லை….

நீங்கள் மனம் வைத்திருந்தால் எங்கள் இனம் நிர்க்கதியாய் இன்று நின்றிருக்கத் தேவையில்லை…

நீங்கள் உண்மையில் உயிர்ப்போடிருந்தால்
எங்களுக்கிந்த ஊமை வாழ்வு தேவையில்லை ….

பாழாய்ப்போன ஆசை யாரைத்தான் விட்டது… எல்லாம் பழகிப்போனதாய்ப் பழசாகும்வரை பழக்கப்படுத்திவிட்டீர்கள்.

இனம்சாகச் சனம்சாகச் சிம்மாசனம் கேட்டுச் சிரசாசனம் செய்த நீங்கள்
மனம்போன வாழ்வுக்கு மகுடங்கள் சூடி, மடி நிறைய மண்ணாங்கட்டிகளைத்தான் நிறைத்திருக்கின்றீர்கள்…

வயசுக்கு மூத்த உங்களை வாயார வாழ்த்த வேண்டி நினைத்தாலும் முடியவில்லை, நீங்கள் வரமாய்த் தந்த வலிகளால் எம் வாழ்வு பொறுக்குதில்லை…

நீங்கள் நினைத்திருந்தால் தமிழனென்ற தன்மானம் என்றோ நிமிர்ந்திருக்கும்…

நீங்கள் மனம் வைத்திருந்தால் எங்கள் எதிர்காலம் எப்போதோ பூத்துக்குலுங்கியிருக்கும்…

நீங்கள் நேர்மைவழி நடந்திருந்தால் ஒரு இனவாழ்வு வாழ்ந்து மிளிர்ந்திருக்கும்…

அப்படியொன்று நடந்திருந்தால்….,

நீங்கள் எதிர்பார்த்தைவிடவும் அதிகமாகவே அரியாசனம் தந்து அழகு பார்த்திருப்போம்…

அன்பைச்சுமந்தபடி எங்கள் தோள்களில் ஏற்றிவைத்துக் கொண்டாடியிருப்போம்…

காலம் காலமாய்ச் சந்ததியாய் நின்று நன்றியுணர்வோடு நெஞ்சில் வைத்துச் சுமந்திருப்போம்…

இப்போது எதனைப் பெற்றுவிட்டீர்கள்…
எதனைப் பகிர்ந்துவிட்டீர்கள்…
இருக்கிறீர்களோ இல்லையோ என்றும் தெரியாமல் இன்னும் எதனைக் கொண்டுபோகக் காத்துக்கிடக்கிறீர்கள்…???

எங்கள் வரலாற்றுப்புத்தகத்தில் உங்கள் வாழ்க்கைப் பக்கங்களைப் பார்த்துப் படிக்க ஒரு இனமே வழிதந்தபோதும், பரிகசிக்கும் அளவிற்குப் பாவம் செய்துவிட்டீர்கள்…

பாட்டன்மார் எனக்காகப் பழந்தின்ன நல்லதொரு கனிமரத்தை நட்டுவைக்கவில்லையென்ற ஆதங்கத்தில் நான் அழவில்லை…
தானாய் விதைவிழுந்து வீறாய் முளைத்த ஒரு விடுதலை விருட்சத்தை வேலியிட்டுக் காக்கவில்லையென்றே
வெம்புகின்றேன் விடுதலையை வேண்டியபடி…!

-காந்தள்-

Comments
Loading...