Designed by Iniyas LTD
இறுதி யுத்தம் தொடர்பாக பொன்சேகா கூறியது அனைத்தும் பொய்!
இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்ட மக்கள், காணாமல் போனோர் மற்றும் சரணடைந்தவர்கள் தொடர்பான உண்மையான விபரங்களைப் பெறுவதற்கு வடக்கு, கிழக்கு மாகாண அரசாங்கங்களும் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகமும் இணைந்து செயலாற்ற வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தின்போது வெள்ளைக்கொடி விவகாரங்கள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் ஊடகவியலாளர் சந்திப்பிலும் பல்வேறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது, எத்தகைய உயிரிழப்புக்கள் ஏற்பட்டன என்பன தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள், ஆவணங்கள் இல்லை. பல விசாரணைகள் மூலம் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் காணாமல்போயும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய சூழலில் முன்னாள் இராணுவத் தளபதி குறைவான உயிரிழப்புக்களே ஏற்பட்டது எனவும் கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களது சடலங்களுக்கு புலிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி செலுத்தியதாகவும் உண்மைக்குப் புறம்பான பல கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்.
இறுதி யுத்தம் தொடர்பில் சனல் — 4 தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில் கொல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களது சடலங்கள் உள்ளாடையுடன் சேதமாக்கப்பட்ட உடல்களுமாக காட்டப்படும் படங்கள், வீடியோ கோப்புக்கள் என்பன இராணுவத்தினராலேயே எடுக்கப்பட்டது என்பது தெட்டத் தெளிவான உண்மை. ஆகவே பொன்சேகாவின் கூற்றை ஏற்றுக் கொள்ளமுடியாது.
இறுதி யுத்தத்தின்போது ஏற்பட்ட மக்களின் உயிரிழப்பு விபரங்களில் குறிப்பாக கொல்லப்பட்ட மக்களின் விபரங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்கள், சரணடைந்தவர்கள், அங்கவீனமானவர்கள், கணவனை, மனைவியை இழந்தவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், மக்களின் சொத்து விபரங்கள் போன்றவை தொடர்பான முழு விபரங்கள் உண்மைத் தன்மையுடன் சேகரிக்கப்பட வேண்டும்.
இத்தகைய உண்மைத்தன்மையுடைய சேகரிப்பை வடக்கு, கிழக்கு மாகாண அரசாங்கமும் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்கள் என்பன ஆய்வுகள் மூலம் தரவைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இத்தகைய விபரங்களைப் பெறுவதற்கு ஏற்கனவே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் கலந்து-ரையாடியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.