Designed by Iniyas LTD
இலங்கை தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் தயார்
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் தயார் நிலையில் உள்ளது. இன்னும் 33 ஆயிரம் வீடுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்று இந்திய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களை சேர்ந்த ஏராளமான தமிழர்கள் உயிர்களையும், உடமைகளையும் இழந்தனர்.
சொந்த நாட்டிலேயே அகதிகளாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த இடத்திற்கு செல்ல முடியாமல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு அமைக்கும் நோக்கில் மத்திய அரசு வீடு கட்டி தர திட்டமிட் டது. இத்திட்டம் பற்றி பிரதமர் மன்மோகன் 2010ம் ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தார். இது குறித்து இந்திய தூதரக அதிகாரி கூறியதாவது:
உள்நாட்டு போரில் இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசு சார்பில் மொத்தம் 43 ஆயிரம் வீடுகள் கட்டித்தர முடிவு செய்யப்பட்டது. திட்டமிடப்படி 10 ஆயிரம் வீடுகள் தயாராக உள்ளது. 2வது கட்டமாக மீதமுள்ள 33 ஆயிரம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசின் ஆலோசனை பெற்று அடுத்த இரண்டு ஆண்டுக்குள் இது நிறைவேற்றப்படும்.
2014ம் ஆண்டுக்குள் 16 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். மீதமுள்ள 17 ஆயிரம் வீடுகள் 2015ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். இந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டி தர திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்காக மத்திய அரசு ஆயிரத்து 372 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு இந்திய தூதரக அதிகாரி கூறினார்.