தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை வடக்கு மாகாணசபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் – திருமாவளவன்

இலங்கை வடக்கு மாகாணசபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவலவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:THirumavalavan

இலங்கை அதிபர் சிறிசேனாவின் இந்திய பயணம் இந்தியா– இலங்கை உறவை வலுப்படுத்துவதை விட மார்ச் மாதம் ஐ.நா.சபையில் நடைபெற உள்ள போர்க்குற்ற விசாரணையை தள்ளிப்போடுவதற்காகத் தான் அவர் வந்துள்ளார். இதற்காக சிறிசேனா உலக தலைவர்களின் ஆதரவை பெற்று வருகிறார். அதன் அடிப்படையில் அவர் இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.

ஐ,நா. விசாரணை முன்கூட்டியே நடந்தால் சிங்களர்களுக்கு எதிராக அமைந்து விடும் என்று சிறிசேனா பயப்படுகிறார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் ராஜபக்சேவுடன் ஒப்பிடுகையில் சிறிசேனா எந்தவகையிலும் குறைந்தவர் அல்ல. வடக்கு கிழக்கு மாகானத்தில் 6 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் ராணுவ முகாமை அமைத்து இருக்கிறார்கள்.

விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் அமைப்புகள் ராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்திய போது அவர்களிடம் ராணுவத்தை விலக்கி கொள்வதாக சிறிசேனா கூறினார்.

அதே நேரத்தில் சிங்களர்களிடம் பேசும்போது, ராணுவத்தை விலக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவிக்கிறார்.

இது சிறிசேனாவிடம் இரட்டை வேடத்தை காட்டுகிறது. இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று குரல் கொடுத்தது அவர் தான். ஆனால் இப்போது போர்க்குற்ற விசாரணையை தள்ளிப் போடவும், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கு இந்திய அரசு துணை போகக்கூடாது. இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை நடத்த இந்தியா வலியுறுத்த வேண்டும். தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இதனை வலியுறுத்த வேண்டும். வடக்கு மாகாண சபை தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக அனைத்துக்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசுவேன்.

ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி தெரிந்த முடிவுதான். ஆளும் கட்சியினர் அதிகாரத்தை முழுமையாக பயன்படுத்தி வெற்றி பெற்று இருக்கிறார்கள். எனவே தான் இடைத்தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.

அ.தி.மு.க.வின் இந்த வெற்றி பொது தேர்தலுக்கான முன்னோட்டம் என்று கருத முடியாது. பா.ஜனதா தோல்வி அடைந்தது தமிழகத்தில் பா.ஜனதா இல்லை என்பதை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Loading...