Designed by Iniyas LTD
இலங்கையில் ஏற்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் ஒடுக்கப்படும் சமூகம் குறித்து மனித உரிமை ஆணைக்குழு ஆய்வு
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பின்னர் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள இடைவெளிகள் மற்றும் ஒடுக்கப்படும் சமூகம் குறித்தும் தாம் கரிசனை கொண்டுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்கழு தெரிவித்துள்ளது. வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே வன்னிப்பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரி எம். ஆர். பிரியதர்சன இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாடசாலைகளில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகள் ஒடுக்குதலுக்குட்படும் வாய்ப்புகள் இருக்கின்றது. அவ்வாறான சம்பவங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ளதையும் அறியக்கூடியதாக உள்ளது. அது மட்டுமல்லாது ஆசிரியர்கள், மாணவர்கள், அரச ஊழியர்கள் மத்தியிலும் இவ்வாறான பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுள்ளமை எமது அவதானத்திற்கு எட்டியுள்ளது.
அதன் அடிப்படையில் மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா காரியாலயமானது பாடசாலை மாணவர்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தி வருகின்றது. இதற்காக பல வேலைத்திட்டங்களை நாம் அண்மையில் ஆரம்பித்துள்ளோம். குறிப்பாக பாடசாலை சமூகத்திற்குள்ளே பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஒருவரை ஒருவர் சந்தேகக்கண்ணோடு பார்க்கின்ற நிலைமையை போக்கும் வகையிலும் அவர்கள் மத்தியில் ஒரு சமாதானமான நல்லிணக்கமான சூழலை உருவாக்கும் நோக்கோடும் நாம் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றோம்” என மேலும் தெரிவித்தார்.