Designed by Iniyas LTD
இலங்கையில் பணவீக்கம் குறைந்துள்ளது என கூறும் கருத்துக்கு எதிர்ப்பு.
இலங்கையில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது, பணவீக்கம் குறைந்து வருகிறது என்று மத்திய வங்கி கூறுவது தொடர்பில் மாற்றுக் கருத்துக்கள் எழுந்துள்ளன.
நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், தாங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து வட்டி வீதங்களை அதிகரிக்கவில்லை என்றும், பணவீக்கம் கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது என்றும் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஆனால் சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்கும் போது பார்த்தால் அரசு கூறும் தகவல்கள் எந்த அளவுக்கு யதார்த்தமானது என்பது தெரியவரும் என செய்திச் சேவை ஒன்றிற்கு கூறினார் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை பேராசிரியர் டாக்டர் எம் கணேசமூர்த்தி.
எனினும் கடந்த சில மாதங்களில் மறக்கறி போன்ற சில பொருட்களின் விலை குறைந்துள்ளது என்றும், அதை மட்டும் வைத்துக் கொண்டு பணவீக்கம் குறைந்துவிட்டதாக கருத முடியாது எனவும் அவர் கூறுகிறார்.
இலங்கையின் பொருளாதாரம் மிகவும் உறுதியான நிலையில் உள்ளது என்று கூறுவதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று எனவும் டாக்டர்.கணேசமூர்த்தி கூறுகிறார்.
நாட்டினுடைய தலையாய நிதி நிறுவனமான மத்திய வங்கி கணக்கிடும் அளவுகளையே அனைவரும் சட்டபூர்வமானது என ஏற்றுக்கொள்ளும் வேளையில், அதில் எந்த அளவுக்கு உண்மைத் தன்மை உள்ளது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி என்றும் அவர் கூறுகிறார்.
நிதி நெருக்கடிகள் ஏற்படும்போது சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.